சொந்த வீடு

காந்தி 150: காந்தியக் கட்டிடக் கலைஞர்கள்

என்.கெளரி

காந்திய வழியைப் பின்பற்றி இந்தியக் கட்டிடக் கலையில் கட்டிடக் கலைஞர்கள் சிலர் கடந்த இரண்டு தலைமுறைகளாகத்  தடம்பதித்துவருகிறார்கள். காந்தியப் பாதையைப் பின்பற்றும் இவர்களில் சிலர் கட்டிடக் கலைஞர் லாரி பேக்கரின் நேரடி மாணவர்களாக இருந்திருக்கிறார்கள். மனிதர்களுக்கான வசிப்பிடத்தை இயற்கையை அழிக்காமல் அதை அரவணைத்து அமைப்பதற்கான கலையை இவர்கள் பின்பற்றிவருகிறார்கள்.

ஜி. சங்கர்

இவர் பசுமைக் கட்டிடக் கலை பங்களிப்புக்காக இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர்.  1987-ம் ஆண்டு கேரளாவில் இவர் உருவாக்கிய ‘ஹேபிடட் டெக்னாலஜி குருப்’ என்ற அமைப்பு முப்பது ஆண்டுகளாகக் குறைந்த செலவில் நிலைத்தன்மை வாய்ந்த கட்டுமானத்தில் பசுமை வீடுகள் கட்டுவதை ஊக்குவித்துவருகிறது. நகரத்தில் இரண்டு படுக்கையறை கொண்ட ஒரு வீட்டைக் கட்டுவதற்கு ரூ. 25 லட்சம் செலவாகும் என்ற இன்றைய சூழ்நிலையில், இவரது அமைப்பு ரூ. 4 லட்சம் செலவில் 400 சதுர அடியில் இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீட்டைக் கட்டுவதைச் சாத்தியமாக்கியிருக்கிறது.

புகழ்பெற்ற  கட்டிடக் கலைஞர் லாரி பேக்கரின் நேரடி மாணவரான இவர், அரசின் பல நகர்ப்புறக் கட்டுமானத் திட்டங்களையும், கிராம மேம்பாட்டுத் திட்டங்களையும் வடிவமைத்திருக்கிறார். சிமெண்ட், ஸ்டீல், கண்ணாடி போன்ற கட்டுமானப் பொருட்களை அதிகமாகப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கொள்கையை இவர் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்.

3000 சதுர அடிக்கும் மேல் கட்டப்படும் தனி வீடுகளை அரசு ஊக்குவிக்கக் கூடாது, அப்படிக் கட்டப்படும் வீடுகளுக்குக் கூடுதல் வரி விதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார் இவர். தற்போது, ரியல் எஸ்டேட் கட்டுநர்களால் செயற்கையாக நிலப் பற்றாக்குறை இருப்பதைப் போன்ற சூழல் உருவாக்கப்படுவதாகச் சொல்கிறார் அவர்.

பென்னி குரியகோஸ்

1984-ம் ஆண்டு தன் பணிவாழ்க்கையைத் தொடங்கிய இவர், லாரி பேக்கரிடம் கட்டிடக் கலையின் அடிப்படைகளைக் கற்றவர். கேரளா, தமிழ்நாடு என இரண்டு மாநிலங்களிலும் இவர் தொடர்ந்து பணியாற்றிவருகிறார். லாரி பேக்கரின்  சென்னை தக்ஷிணசித்ரா அருங்காட்சியகத் திட்டத்தை அவரின் மறைவுக்குப் பிறகு, இவர்தான் செயல்படுத்தினார். நாகப்பட்டினத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட தரங்கம்பாடி, சின்னாங்குடி மீனவ கிராமங்களில் ‘சுனாமி மறுவாழ்வுத் திட்ட’த்தில் 1000 வீடுகளை இவர் வடிவமைத்திருக்கிறார்.

குஜராத் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட புஜ் பகுதியிலும், லத்தூரிலும் இவர் மறுவாழ்வுத் திட்டத்தில் வீடுகளை வடிவமைத்திருக்கிறார். கேரளாவின் பிரபல முசிறிப் பாரம்பரியத் திட்டத்தையும் இவர் செயல்படுத்தியிருக்கிறார். குறைந்த செலவில் நிலைத்தன்மை வாய்ந்த கட்டுமானங்களை உருவாக்குவது இவரது வடிவமைப்பின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

“நான் பேக்கரிடம் ஒன்பது மாதங்கள் பயிற்சி பெற்றிருக்கிறேன்.  ஒரு கட்டிடக் கலைஞர், ‘இது தேவையா?’ என்ற கேள்விக்கு விடை கிடைத்த பிறகுதான், எதையும் செயல்படுத்த வேண்டும் என்று அவர் எப்போதும் அறிவுறுத்துவார். அந்த அறிவுறுத்தலில், நிலைத்தன்மை வாய்ந்த கட்டிடக் கலையை உருவாக்குவதற்கான அடிப்படை இருக்கிறது” என்று சொல்கிறார் இவர்.

ஆர்.எல். குமார்

பெங்களூருவில் ‘வட்டாரக் கட்டிடக் கலை மைய’த்தை (Centre for Vernacular Architecture Trust) 1980களில் உருவாக்கியவர். 2012-ம் ஆண்டு மறைந்த இவர், அடிப்படையில் கணக்குத் தணிக்கையாளர் இவர், கட்டிடக் கலையின் மீதான பேரார்வத்தில் இந்தத் துறையில் தடம்பதித்தவர். இவர் காந்தியின் கட்டிடக் கொள்கைகளைப் பின்பற்றி, வட்டாரக் கட்டிடக் கலையின் தாக்கத்தில் குடியிருப்புகளை உருவாக்கினார்.

நிலைத்தன்மை, மனிதத்தன்மை இரண்டும் கலந்த வசிப்பிடத்தை இவர் வடிவமைத்தார். இயற்கையாக உருவாக்கப்பட்ட உள்ளூர்க் கட்டுமானப் பொருட்களையே இவர் தன் திட்டங்களுக்குப் பயன்படுத்தினார். உலகப் புகழ்பெற்றச் சிந்தனையாளர் இவான் இல்லிச்  காந்தி ஆசிரமத்தில் வசித்த குடிலைப் பற்றி எழுதிய ‘பாபு’ஸ் ஹட்’ என்ற கட்டுரையை நிலைத்தன்மை வாய்ந்த கட்டிடக் கலையில் நம்பிக்கையிருக்கும் அனைவரும் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் ஆர்.எல். குமார்.
 

bbjpg

பி.பி. சாஜன்

கேரளாவில் அமைந்துள்ள பிரபல காஸ்ட்ஃபோர்ட் (Centre of Science and Technology for Rural Development) தன்னார்வல நிறுவனத்தின் இணை இயக்குநராக இவர் இருக்கிறார். அத்துடன், லாரி பேக்கரின் மறைவுக்குப் பிறகு, 2009-ம் ஆண்டு அவர் நினைவாக அவரின் நண்பர்கள், மாணவர்களால் உருவாக்கப்பட்ட ‘லாரி பேக்கர் சென்டர் ஃபார் ஹேபிடட் ஸ்டடீஸ்’ அமைப்பின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராகவும் இவர் இருக்கிறார். இருபது ஆண்டுகளுக்கு மேலாக லாரி பேக்கருடன் இவர் நேரடியாகப் பணியாற்றியிருக்கிறார்.

2000க்கு மேற்பட்ட குடியிருப்புகள், 26 குடிசை மாற்றுத் திட்டங்கள், பள்ளிக் கட்டிடங்கள், மருத்துவமனைகள், சூழல் மீட்புத் திட்டங்களை இவர் காந்தியின் ‘ஐந்து மைல்’ கொள்கையைப் பின்பற்றி வடிவமைத்திருக்கிறார்.   இவர் தற்போது மண், மூங்கில் இரண்டையும் மாற்றுக் கட்டுமானப் பொருட்களாகப் பயன்படுத்துவது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். உலக வெப்பமயமாதலில் 35 சதவீத கரியமில வாயு வெளியேற்றத்துக்குக் கட்டுமானத் துறை காரணமாக இருப்பதைச் சுட்டிக்காட்டும் இவர், பசுமைக்குடில் வாயுக்களை அதிகமாக உற்பத்தி செய்யும் சிமெண்ட் தயாரிப்பைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையை வலியுறுத்துகிறார்.

SCROLL FOR NEXT