சொந்த வீடு

புத்தகத் திருவிழா: கட்டுமானத் துறையின் பாடப் புத்தகம்

டி.எல்.சஞ்சீவி குமார்

தமிழகத்தில், பொறியியல் துறையில் நன்கு பரிச்சயமானவர் பொறியாளர் அ.வீரப்பன். தமிழ்நாடு மூத்த பொறியாளர்கள் சங்கத் தலைவர். தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் முன்னாள் சிறப்புத் தலைமைப் பொறியாளரும்கூட. நதி நீர்ப் பங்கீடு, நீர் மேலாண்மை, பாசன விவரங்கள் தொடங்கி அணைகள், ஏரிகள், பாலங்கள் கட்டுமானம் வரை பொறியியல், அதனுள் அடங்கியிருக்கும் அரசியல் தொடர்பு என எதைப் பற்றியும் இவரிடம் விவாதிக்கலாம்; ஆலோசனை பெறலாம்.

a veerappanjpgright

‘கட்டுமானப் பொறியாளர்’ என்னும் மாத இதழை நடத்திவரும் இவர் இதுவரை 35 கையேடுகளையும் 12 புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். அந்த வரிசையில் தற்போது அவர் எழுதி வெளியிட்டிருக்கும் புத்தகம்தான் ‘கைக்குள்ளே கட்டுமானத் தொழில்’. வீரப்பன் எழுதியிருக்கும் பல்வேறு புத்தகங்கள், கட்டுரைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து வாசிப்பதால் ஒன்றை மட்டும் கூற இயலும், வீரப்பனின் வரிகளில் ஒன்றுகூட அலங்காரத்துக்காகவோ தேவையில்லாததாகவோ இருக்காது. அவரது ஒவ்வொரு சொல்லும் வாசகர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இந்தப் புத்தகத்திலும் அதே கண்டிப்பைக் காட்டியிருக்கிறார்.

கேரளத்தை வெள்ளம் புரட்டிப் போட்டிருக்கும் நிலையில் புத்தகத்தின் தொடக்கத்திலேயே ‘வெள்ள சேதங்களைத் தடுப்பது எப்படி, வெள்ள நீரைச் சேமிப்பது எப்படி?’ என்னும் அத்தியாயம் கவனம் ஈர்க்கிறது. அதில் தமிழகத்தின் காவிரி மட்டுமல்லாமல் நாட்டின் பல நதிகளின் நீர்ப் பெருக்கால் ஏற்பட்ட வெள்ளம் குறித்த தகவல்கள் விரவிக்கிடக்கின்றன.

இது தொடர்பாக அரசுகளும் அரசு அதிகாரிகளும் எந்த அளவுக்குப் பொறுப்பாக நடந்துகொண்டார்கள், இனி எப்படி நடந்துகொள்ள வேண்டும், அரசாங்கம் தொடங்கித் தனி நபர் வரை செய்ய வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என அனைத்தையும் அலசியிருக்கிறார் அவர். பொறியியல் துறையிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டாலும் இன்றும் பொறியியல் பணி தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் நூலாசிரியர், அந்தத் துறையின் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் தொடர்ந்து விமர்சித்துவருகிறார். அதுதொடர்பான விவரங்களும் நூலில் நிறையவே இருக்கின்றன.

சொந்தமாக வீடு கட்டுவோருக்கான ஆலோசனை, கட்டுமானத்தின் தரத்தை உயர்த்துவது, கட்டுமானச் செலவைக் கட்டுப்படுத்துவது, கட்டுமானத்தில் வேதியியல் பொருட்களைக் கையாள்வது, எம்-சாண்ட் எனப்படும் செயற்கை மணல் பயன்பாடு, மாற்று மணலாக எரி சாம்பல் கலப்பு ஆகியவை குறித்துப் பயனுள்ள பல தகவல்களை இந்த நூலில் தந்துள்ளார். தமிழகத்தில் நிலவும் ஆற்று மணல் விற்பனைக் குளறுபடிகளைக் குறித்தும் அரசியல் ரீதியாகத் தீர்வை முன்வைத்து விளக்கியுள்ளார் அவர்.

kattumana bookjpg

எந்த வகை சிமெண்ட் வலிமையானது, சிமெண்டின் கலவையின் தொழில்நுட்ப விவரங்கள், வீட்டுக் கட்டுமானம், பெரும் வணிக நிறுவன கட்டுமானங்கள், கோயில் கட்டுமானம், தஞ்சாவூர்க் கோயில் கட்டுமானத்தின் சூட்சுமம், சுற்றுச்சுவர்க் கட்டுமானம், மாடிப்படி கட்டுமானம், பல்வகைக் கழிவறைக் கட்டுமானங்கள், குளியறைக் கட்டுமானங்கள், நீர்க் கசிவைத் தடுப்பது, மண் பரிசோதனைத் தொழில்நுட்ப விவரங்கள், நிகழ்காலத்தில் மண் பரிசோதனை அறிக்கையில் வரும் குளறுபடிகள், மாறி வரும் கட்டுமான தொழில்நுட்பங்கள், எதிர்காலக் கட்டுமானத் தொழில்நுட்பங்கள், விட்டங்கள் அமைப்பது தொடர்பான தொழில்நுட்பங்கள், சுடுமண் ஓடுகள், மைக்ரோ கான்கிரீட், பூச்சு வேலைகளில் வந்திருக்கும் புதிய தொழில்நுட்பங்கள் எனக் கட்டுமானத் துறையின் அ தொடங்கி ஃ வரை ஒன்றையும்விடாமல் மிகவும் நுட்பமாகவும் தெளிவாகவும் அலசியிருக்கிறார் நூலாசிரியர் வீரப்பன்.

கட்டுமானத் துறையில் இருக்கும் தொழில்நுட்ப விவரங்கள், புதுப்புது உத்திகளை மட்டுமே எழுதாமல் ஒவ்வொன்றிலும் இருக்கும் பிரச்சினைகளையும் சுட்டிக் காட்டியிருப்பது சிறப்புக்குரியது. அரசு உட்பட பல்வேறு தரப்பினர் இதில் செய்துவரும் குளறுபடிகளைச் சுட்டிக்காட்டியிருப்பதன் மூலமாகவும் கட்டுமானத் துறை சார்ந்த அரசியலை வலுவாக முன்வைக்கிறார் நூல் ஆசிரியர்.

குறிப்பாக, அரசுப் பொறியியல் துறையில் பணிபுரியும் பொறியாளர்களிடையே தொழில்நுட்பக் கலந்துரையாடல் அடிக்கடி நிகழ வேண்டும். அது அவசியம் என்று வலியுறுத்துகிறார். தமிழகத்தில் பணியாற்றிய மூத்த பொறியாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர் பெருமையுடன் எழுதியிருக்கும் விஷயங்கள் நெகிழச் செய்கின்றன.

அதேநேரம் ஆசிரியர் வலியுறுத்துவது போன்ற திறந்த மனதுடன் கூடிய இதுபோன்ற கலந்துரையாடல்கள் கடந்த காலத்தில் இருந்திருந்தால் 2015-ம் ஆண்டு செம்பரம்பாக்கத்தின் நீர் திறப்பு மூலம் சென்னைப் பெருவெள்ளமும் உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டிருக்காதே என்ற பெருமூச்சும் எழுகிறது.

புத்தகத்தில் காணப்படும் தொழில்நுட்ப விவரிப்புகளும் புள்ளிவிவரங்களும் பொதுவெளி வாசகப் பரப்புக்கு ஆயாசத்தை ஏற்படுத்துகின்றன. அதை இந்தப் புத்தகத்தின் பலவீனம் என்று கருதினால் அதுவேதான் இந்தப் புத்தகத்தின் பலமும். அதன் அடிப்படையில் இந்தப் புத்தகம் பொதுவான வாசகர்களுக்கு அல்ல என்றுகூடத் தோன்றலாம்.

ஆனால், புத்தகத்தின் ஒவ்வொரு வரியையும் படிக்கும்போது இது நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம். குறிப்பாக, கட்டுமானம், நீர் மேலாண்மை தொடர்பான பொறியியல் படிக்கும் ஒவ்வொரு மாணவரிடமும் இருக்க வேண்டிய பாடப் புத்தகம் இது.

கைக்குள்ளே கட்டுமானத் தொழில்

ஆசிரியர்: பொறிஞர் அ.வீரப்பன்

வெளியீடு: B&C பதிப்பகம், 22/2, வெல்கம் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை - 101

தொலைபேசி: 044- 43540330

பக்கங்கள்: 220

விலை: ரூ.200

SCROLL FOR NEXT