லண்டன் ரியல் எஸ்டேட் முதலீட்டில் இந்தியர்கள் முன்னணியில் இருப்பதைப் பற்றிச் சென்ற வாரம் செய்தி வெளியிட்டிருந்தோம். அதைத் தொடர்ந்து துபாய் ரியல் எஸ்டேட் தொழிலிலும் இந்திய முதலீட்டாளர்களே ஆதிக்கம் செலுத்திவருவதாகச் சமீபத்தில் வெளியான துபாய் நிலத் துறையின் அறிக்கை (Dubai Land Department Report) கூறுகிறது.
பொதுவாக துபாய் உள்ளிட்ட பல வளைகுடா நகரங்கள் இந்தியர்களின் வியர்வையில் எழுந்ததாகச் சொல்லப் படுவதுண்டு. அங்கு பலதரப்பட்ட பணிகளைச் செய்வது நம்மவர்கள்தான். துபாய் அசுர வளர்ச்சியில் இந்திய உழைப்பாளிகளின் பங்கு கணிசமான அளவுக்கு இருக்கிறது. இப்போது வெளியாகி இருக்கும் துபாய் நிலத் துறையின் இந்த அறிக்கை துபாய் நகரில் முதலீடு செய்வதிலும் இந்தியர்களின் பங்கு ஓங்கியிருப்பதைக் காட்டுகிறது.
இந்திய முதலீட்டாளர்கள் 2014 முதல் அரையாண்டில் சுமார் 17 ஆயிரம் கோடி இந்திய பணத்தை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளனர் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இதன் மூலம் மொத்தம் 4, 417 நிலப் பரிமாற்றத்தை இந்தியர்கள் நடத்தியுள்ளனர் எனவும் அந்த அறிக்கை சொல்கிறது.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடுத்த இரு இடங்களைப் பெறுகின்றனர். ரூ.34 ஆயிரம் கோடி அளவுக்கு இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர் துபாய் ரியல் எஸ்டேட்டில் முதலீடு
செய்துள்ளனர். துபாய் நிலத் துறையின் அறிக்கையின் படி இவர்கள் 9,739 நிலப் பரிமாற்றத்தை நடத்தியுள்ளனர். அதாவது இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் 2,258 நிலப் பரிமாற்றங்கள் மூலம் ரூ.10ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளார்கள். பாகிஸ்தானியர்கள் 3,064 நிலப் பரிமாற்றங்கள் மூலம் ரூ.7500 கோடி முதலீடுசெய்துள்ளார்கள்.
ஈரானியர்களும் கனடியர்களும் இதற்கு அடுத்த நான்காம், ஐந்தாம் இடங்களைப் பெறுகின்றனர். ஈரானி யர்கள் ரூ.4500 கோடி ரூபாயும் கனடியர்கள் ரூ.3200 கோடி ரூபாயும் முதலீடு செய்துள்ளார்கள். ரஷ்யர்களும் அமெரிக்கர்களும் சீனர்களும் அடுத்த ஆறு, ஏழு, எட்டாம் இடங்களைப் பெறுகிறார்கள்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, கனடா, சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்கள் ரூ.50,420 கோடி அளவுக்கு 2014 முதல் அரையாண்டில் துபாய் ரியல் எஸ்டேட்டில் முதலீடுசெய்துள்ளனர். இவர்கள் மொத்தம் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலப் பரிமாற்றத்தை நடத்தியுள்ளனர். இந்த முதலீட்டாளர் களின் இந்தியர்கள் முதலிடம் பெற்றுள்ளதாக அந்த அறிக்கையின் முடிவு தெரிவிக்கிறது.
இந்த அறிக்கையின் மூலம் துபாயின் ரியல் எஸ்டேட் சிறப்பான வளர்ச்சி கண்டுவருவது நிரூபணமாகியுள்ளது என துபாய் நிலத் துறையின் இயக்குநர் சுல்தான் பட்டி பின் மெஜ்ரென் தெரிவித்துள்ளார்.