வீடு கட்டும் ஆசையை எனக்குள் விதைத்தவர் என் அப்பாதான். தாத்தா அப்பாவுக்குக் கொடுத்த சொத்து எல்லாவற்றையும் அப்பா விற்றுத் தீர்த்துவிட்டார்.
எனது அம்மா வழி தாத்தாதான் என்னைப் படிக்க வைத்தது. திருச்சி பெல் நிறுவனத்தில் 1991-ல் கூட்டுறவு ஒப்பந்த தொழிலாளியாக வேலைக்கும் சேர்த்துவிட்டார். அதில் பிராவிடன்ட் பண்ட் மூலம் சேர்ந்த பணத்தில் 1995-ல் துவாக்குடியை அடுத்து உள்ள நவலூர் என்ற இடத்தில் குறிஞ்சி நகர் என்ற பெயரில் விற்கப்பட்ட 292 மனைகளில் ஒன்றை வாங்கினேன்.
நான் வாங்கியபோது அந்த இடம் அவ்வளவு பிரபலம் இல்லை. இப்போது பரவாயில்லை. 2000-ம் வருடத்தில் இருந்து மனை வாங்கிய சிலர் வீடு கட்ட ஆரம்பித்தனர்.
முதன் முதலில் வீட்டு கடன் வாங்க 2010-ல் விண்ணப்பித்தேன். இருபது நாள், அல்லது ஒரு மாதம் கழித்துக் கிடைக்கும் என்று கூறினர். நானும் மிகவும் நம்பி இருந்தேன். இரண்டு மாத காலம் கழித்து உனது சம்பளத்திற்கு வீட்டுக் கடன் இல்லை என்று கையை விரித்துவிட்டனர்.
அதைத் தொடர்ந்து வேறு சில வங்கிகளுக்கு அலைந்தேன் பயனில்லை. இறுதியாக ஒரு வங்கி எனது சம்பளத்திற்கு ஐந்து லட்சம் வீட்டுக்கடன் கொடுத்தது.
உற்சாகமாக பூஜை போட்டு வீடு கட்டும் வேலையை ஆரம்பித்தோம். முதலில் மின் இணைப்புவாங்க கிராம நிர்வாக அலுவலர் ஒப்புதல் பெற்று, விண்ணப்பத்தை மின் வாரிய அலுவலகத்தில் கொடுத்தேன். எனது கஷ்ட காலம் இங்கே மீண்டும் தலைதூக்கியது.
அலைச்சல் தொடங்கியது
என்னுடைய விண்ணப்பத்தை வாங்கிப் பார்த்த உதவிப் பொறியாளர், “சார் இந்த இடத்தின் பத்திரங்கள், ஆவணங்கள் சரியாக உள்ளன. ஆனால் இந்த குறிஞ்சி நகர் முழுவதும் 292 மனைகள் உள்ளன. அதற்கு உண்டான சாலை அளவு, வரைபடத்தில் உள்ளது போல் சரியாக உள்ளது. ஆனால் சாலையை முறைப்படி பத்திரம் செய்து பஞ்சாயத்திடம் ஒப்படைத்த ஆவணம் மட்டும் இல்லை.
அதை வாங்கி வாருங்கள்” என்றார். “நான் எங்கே சார் வாங்குவேன்” எனக் கேட்டேன். மனை வாங்கியவரிடமோ பத்திரப் பதிவு அலுவலகத்திலோ கேட்டுப் பார்க்கச் சொன்னார்.
இது தொடர்பாக அலைய ஆரம்பித்தேன். இதற்குள் எனது மனையில் கட்டிட இன்ஜினியர் வரைபடத்தில் உள்ளபடி அடித்தள வேலைகளை ஆரம்பித்துவிட்டார். “பவர் சப்ளை எப்ப சார் வரும்?” என என்னிடம் கேட்டார்.
பத்துப் பதினைந்து நாளில் வந்து விடும் அது வரை தண்ணீர் ஏற்பாடு செய்து தருகிறேன் எனச் சொல்லி அவருக்கு வேண்டிய அளவு வேலைக்குத் தண்ணீரும் ஏற்பாடு செய்து கொடுத்தேன். அவரும் பேஸ்மெண்ட் வரை கட்டி விட்டார். மின் இணைப்பு வந்தால் அடுத்த வேலையை ஆரம்பிக்கலாம் என்றார்.
நானும் மின் வாரிய அலுவலகம் சென்று இன்ஜினீயரிடம் கேட்டேன். அவர் அந்த பேப்பர் இருந்தால் தான் மின் இணைப்பு தர முடியும். இல்லையெனில் அதற்கு உண்டான செலவுகளை நீங்கள் ஏற்று ரூ.45,000 வைப்புத் தொகை செலுத்துங்கள். அது உங்கள் மனைக்குத் தேவைப்படும் ஐந்து போஸ்ட்டுக்கும் மின் இணைப்புக்கும் தேவைப்படும்.
பணம் திரும்ப பெற இயலாது என்றார். நான் வேறு வழியின்றி இந்த மனைகளை விற்ற நபரைத் தேடி அலைந்து ஒரு வழியாக அவரைப் பிடித்தேன். எனக்காக அவர் மிகவும் பிரயாசைப்பட்டு, அலைந்து, திரிந்து தேவையான ஆவணங்களைக் கொடுத்தார்.
வந்தது; ஆனால் வரவில்லை
இதனால் பதினைந்து நாள் கழித்து அந்தப் பத்திர நகல்கள் எனக்குக் கிடைத்தன. மிகவும் நன்றியுடன் அவரிடம் விடை பெற்று மின் வாரிய அலுவலகத்தில் இன்ஜினீயரிடம் கொண்டு அந்தப் பத்திர பேப்பரைக் கொடுத்தேன். என் ஆவணங்களைச் சரி பார்த்து, ரூ.50 கட்டிவிட்டு வாருங்கள். உடனே வேலையை ஆம்பித்துவிடலாம் என்றார். நானும் கட்டிவிட்டு வந்தேன்.
பிறகு ஒரு வாரம் கழித்து மின் வாரிய அலுவலகத்தில் கூப்பிட்டனர். உடனே புறப்பட்டுச் சென்றேன். ரூ.1550 கட்டச் சொன்னார்கள். 21.05.2014-அன்று அந்தப் பணத்தைம் கட்டினேன். மறு வாரம் உங்களை அழைப்போம் வாருங்கள் என்றனர். நானும் பதினைந்து நாள் வரை அழைப்பே வரவில்லை. மீண்டும் சிக்கல் ஆரம்பித்தது. நான் போன் செய்தேன். இன்னும் ஒரு வாரத்தில் வந்துவிடும் என்றனர். அடுத்த பத்து நாள் கழித்து போன் செய்தபோது, போஸ்ட் தஞ்சையில் இருந்து அடுத்த வாரம் வரும் என்றனர்.
பத்து நாள்கள் கழிந்தன. போஸ்ட் வரவேயில்லை. ஏனென்று விசாரித்தால், தஞ்சையில் இருந்து போஸ்ட் வர நீங்கள் வண்டி ஏற்பாடு செய்தீர்கள் என்றால் உடனடியாக வேலை நடக்கும் என்றனர். என்னால் அவ்வளவு செலவு செய்ய முடியாது என்பதால் காத்திருப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.
எப்படியோ 04.07.2014 அன்று மாலை போஸ்ட் வந்து விட்டது. மறுவாரம் உங்களுக்குப் போட்டுத் தருவோம் என்றனர். ஆனால் யாரும் வரவில்லை. மீண்டும் விசார்த்தேன். போஸ்ட் நடுவதற்குக் குழி தோண்ட பொக்ளின் இயந்திரம் வேண்டும் அதற்கான செலவை நீங்கள் ஏற்றுக்கொண்டால் வேலையை உடனே செய்ய முடியும் என்றனர். எனக்கோ இதை மறுக்கவே முடியாத இக்கட்டான நிலை. சரி என்றேன். ஆனால் பொக்ளின் வரவில்லை.
மறு வாரம் என்னை அழைத்து எங்களுக்கு பொக்ளின் கிடைக்கவில்லை. நீங்களே ஏற்பாடு செய்யுங்கள் என்றனர். என்னடா இது வம்பாய்ப் போய்விட்டது என நினைத்துக்கொண்டாலும் அதற்கும் ஒத்துக்கொண்டேன். 08.08.2014 அன்று ஒரு மணி நேரத்திற்கு ரூ.800 என்று பேசி பொக்ளின் இயந்திரத்தைக் கொண்டுவந்தேன்.
மின் வாரியத்திலிருந்து ஏழு நபர் வந்து, மூன்று மணி நேரம் பொக்ளின் உதவியுடன் மின்கம்ப வேலையையும் முடித்துவிட்டனர். மீண்டும் 14.08.2014 அன்று பத்துபேர் வந்து மின் இணைப்பு வேலையையும் முடித்தனர்.
ஆனாலும் மின்சாரம் மட்டும் வரவில்லை. வந்துவிடும் சீக்கிரம் வந்து விடும் என்று சொல்கின்றனர் எப்போது வரும் இதுவரை தெரியவில்லை. கட்டிடத்தை பூச்சு வேலைகள் வரை போராடி போராடி கொண்டுவந்துவிட்டேன்.
இனி மின்சாரம் இன்றி வேலை நடக்காது என்று இன்ஜினியர் சொல்லிவிட்டார். கனவு வீட்டைக் கட்டி முடித்து விட்டேன். ஆனால் அது இருளில் மூழ்கிக் கிடக்கிறது. வெளிச்சத்திற்காகக் காத்திருக்கிறேன்.