சொந்த வீடு

நாள் என்பது ஒரு மளிகைப் பை

ஜே.கே

சென்னையில் ஒரு பிரபலமான நிறுவனத்தில் பணியாற்றிவருபவர் அவர். அந்த நிறுவனத்தின் முக்கியமான பணியாளர்களுள் ஒருவர். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்டவர். பார்க்கும் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பார். அதனால் உயர் அதிகாரிகளுக்கு அவர் மீது மரியாதை உண்டு.  ஆனால், சில நாட்களாக வேலைக்குத் தாமதமாக வருகிறார்.

தாமதமாக வருவது மட்டுமல்லாமல் ஆடைகளை அயர் செய்யாமல் உடுத்திவருகிறார். வருகிற அவசரத்தில் காலை உணவையும் தவிர்த்துவிடுகிறார். எல்லோரும் வேலையைத் தொடங்கிய பிறகு பரபரப்பாக வியர்த்து ஒழுக வந்துசேர்கிறார். அவரது உயர் அதிகாரி அதுவரையிலான அவரது அர்ப்பணிப்பை மனத்தில் கொண்டு இந்த நடவடிக்கையைப் பெரிதுபடுத்தவில்லை. தாமதமாக வருவது ஒருபக்கம் இருந்தாலும், கொடுத்த வேலைகளையும் ஒழுங்காக முடிக்காமல் இருந்துவிடுகிறார். அது குறித்துக் கேட்டால் மன்னிக்கச் சொல்லி மட்டும் கோருவாரே தவிர அதைத் திருத்திக்கொள்வதாக இல்லை. 

வேலை செய்யாமல் ஏமாற்றும் ஊழியர் அல்ல அவர் என்பதால் அவருக்கு மனரீதியாகன ஏதோ பிரச்சினை என்பதை அவரது உயர் அதிகாரி புரிந்துகொண்டார். முதலில் அவரைத் தனியாகத் தனது அறைக்கு அழைத்துப் பேசிப் பார்த்துள்ளார் உயர் அதிகாரி. அவர் என்ன கேள்வி கேட்டாலும்,  “எனக்கு நேரம் இல்லை” என்ற ஒரு பதிலை மட்டும் அந்த ஊழியர் சொல்லிக்கொண்டே இருந்துள்ளார். இது அவருக்கு மட்டுமான பிரச்சினை இல்லை. நாம் ஒவ்வொருவருக்குமான பிரச்சினைதான். நேரமில்லாமல் இல்லை. நம்மால் நேரத்தைக் கையாள முடியவில்லை என்பதே உண்மை.

செல்போனைத் தூரவைத்துவிட்டு, டிவி, ஆடியோவை அணைத்துவிட்டு ஒரு நிமிடம் நிதானமாக, நாம் யார், எங்கு இருக்கிறோம் என யோசித்துப் பார்க்க வேண்டும். ஒரு நாளில் நாம் என்னென்ன செய்கிறோம் என்பதைப் பட்டியலிட்டுக்கொள்ள வேண்டும். அவற்றை முக்கியமானவை / முக்கியமில்லாதவை என இரு வகையாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். இவற்றில் எதற்காகவெல்லாம் தேவையில்லாமல் நேரத்தைச் செலவிடுகிறோம் என்பதைக் கண்டறிந்து அதைக் களைய வேண்டும்.

ஒரு நாளை நமது மளிகைப் பொருள் வாங்கும் பையாகக் கற்பனைசெய்துகொண்டால், அதில் எல்லாவற்றுக்கும் இடம் தருவது சரிதான். ஆனால், எதை முதலில் வைக்க வேண்டும், எதைக் கடைசியாக வைக்க வேண்டும் என முறை இருக்கிறது. முட்டையை முதலில் வைத்துப் பிற பொருட்களை அதற்கு மேல் வைத்தால் நமக்குத்தான் நஷ்டம்.

SCROLL FOR NEXT