சொந்த வீடு

நான்தான் சரி

விபின்

அடிக்கடி  சர்ச்சையில் ஈடுபடும் நண்பர்கள் மூவர் அன்றைக்கும் ஒரு புதிய சர்ச்சையை ஆர்வத்துடன் தொடங்கினர். இன்றைய அவர்களின் சர்ச்சை, ஒரு ஜென் துறவியைக் குறித்தது. தூரத்தில் ஒரு சிறிய குன்றின் மீது அந்தத் துறவி நின்றுகொண்டிருந்தார். இந்தப் பனிக் காலக் காலையில் எதற்காக அந்தத் துறவி அந்தக் குன்றின் மீது நின்றுகொண்டிருக்கிறார், என்பதுதான் அவர்களின் சர்ச்சையின் மையம்.

நண்பர்களில் ஒருவன், “அந்தத் துறவி அவருடைய நண்பர்களுக்காகக் காத்திருக்கிறார். அவர்கள் வரும் முன்பே வந்துவிட்டதால் அங்கே தனியாக நின்று கொண்டிருக்கிறார்” என்றான்.

இதைக் கடுமையாக மற்ற இருவரும் மறுத்தனர். நண்பர்களின் அடுத்தவன், “நீ சொல்வது சரி இல்லை. நண்பர்களுக்காக அவர் காத்திருந்தால் அவர் நண்பர்கள் வரும் திசையை அடிக்கடி திரும்பிப்பார். ஆனால் அவர் அந்தப் புல்வெளியை அல்லவா பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் அநேகமாக ஒரு பசுவை வளர்த்துவந்திருக்கலாம். அந்தப் பசு இந்தப் புல்வெளியில் மேய்வதற்காக வந்திருக்கலாம். அதைத்தான் அவர் தேடிக் கொண்டிருக்கிறார்” என்றான்.

நண்பர்களில் மூன்றாவது ஆள், இந்த இரு அபிப்ராயங்களையும் மறுத்தான். “நீங்கள் நினைப்பதுபோல் அல்ல. அவர் ஒரு துறவி. அதனால் அவர் தியானம் செய்வதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறார். அந்தக் குன்றில் நின்றுகொண்டு அவர் தியானம் செய்துகொண்டிருக்கிறார்” எனப் புதிய அபிப்ராயத்தைச் சொன்னான்.

சர்ச்சை முற்றிய மூவரும் அந்தக் குன்றுக்குச் சென்று அந்தத் துறவியிடமே கேட்கப் புறப்பட்டனர். முதலாமவன் தனது அபிப்ராயத்தைச் சொல்லிக் கேட்டான். அதற்கு அந்தத் துறவி “நான் தனியாகத்தான் பிறந்தேன். தனியாகத்தான் இறப்பேன். இவற்றுக்கு இடையில் எனக்கு யாருமில்லை” என்றார்.

அடுத்தவன், “அப்படியானால் உங்கள் பசுவைத் தேடி வந்தீர்கள்தானே?” எனக் கேட்டான்.

“என்னிடம் ஒரு பொருளும் இல்லை. அப்படியிருக்க நான் ஏன் பசுவைத் தேடி வரப் போகிறேன். அது என் வேலையும் இல்லை” என்றார்.

அப்படியானால் “நான்தான் சரி” என்று மூன்றாமவன், “நீங்கள் தியானம் செய்வதற்காகத்தானே இங்கு வந்தீர்கள்?” எனத் தன் அபிப்ராயத்தைச் சொன்னான்.

“உங்களில் நீ மிகச் சிறந்த முட்டாள். தியானம் ஒரு செயல் அல்ல. தியானத்தில் இருக்கலாம். அதைச் செய்ய முடியாது. தியானத்தில் இருக்க நான் ஏன் இந்தக் குன்றுக்கு வர வேண்டும்? தியானம் என்பது தன்னுணர்வு.” என்றார்.

‘நான்தான் சரி’ என்று நினைத்த அந்த மூன்று நண்பர்களும் அந்தக் குன்றிலிருந்து திரும்பினர்.

SCROLL FOR NEXT