சொந்த வீடு

வெளியூரில் மனை வாங்குகிறீர்களா?

ஓவியா அர்ஜுன்

நகரங்களில் வேலை தேடி வந்தவர்கள் பலரும் தங்களது சொந்த ஊரிலோ அதற்கு அருகிலோ இடம் வாங்குவதைக் கனவாகவே வைத்திருக்கின்றனர். அப்படித்தான் தஞ்சாவூரைச் சேர்ந்த நண்பர் சுரேஷ்குமாரின் குடும்பமும். சென்னையில் வசிக்கும் இவர்கள் தஞ்சாவூரின் புறவழிச்சாலையில் ஒரு பழைய மனைப் பிரிவில் இடம் வாங்கினார்கள்.

அக்கம் பக்கம் குடியிருப்புகள் உள்ள பகுதி என்பதால், உடனடியாக வீடு கட்டும் ஏற்பாடுகளிலும் இறங்கினர். ஆனால், எதிர்பாராத சூழ்நிலையில், நண்பரின் தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் வீட்டு வேலைகள் தொடங்கத் தாமதமாகிவிட்டன. அந்த இடைவெளியில் மனையையும் சென்று பார்த்துவரவில்லை. சுமார் மூன்று மாதங்கள் கழித்து ஊருக்குச் சென்று, மனையைப் பார்க்கச் சென்றுள்ளனர். அங்கே போனால், அந்த மனையில் கீற்றுக் கொட்டகை போட்டு ஒரு குடும்பம் வசித்துவருகிறது. என்ன யார் என்று விசாரிக்க, அந்த ஊரில் உள்ள அரசியல் பிரமுகர் ஒருவரைக் கை காட்டினர்.

பிறகு அங்கே, இங்கே என்று அலைந்து, கட்டப் பஞ்சாயத்து வரை சென்று அந்த இடத்தை மீட்டுக்கொண்டுவந்தது நண்பரின் குடும்பம். “சார், இதைப் பெரிசு பண்ணாதீங்க, ஏதோ சும்மா கிடந்த இடம்னு அவங்களைக் குடியிருக்கச் சொன்னேன். நீங்களும் நம்ம ஊர்க்காரர்” என்று அந்த அரசியல்வாதி இறங்கி வந்து இடத்தைக் கொடுத்தார்.

நண்பருக்கு இருந்த தொடர்புகள் காரணமாகச் சில நாட்கள் அலைச்சலில் இடத்தை மீட்டுவிட்டனர். ஆனால், எல்லோருக்கும் இப்படியான தொடர்புகள் அமைந்துவிடுவதில்லை. எந்த ஒரு செல்வாக்கும் இல்லாதவர்கள் இந்த இட அபகரிப்புப் பேர்வழிகளிடம் சிக்கினால், அவர்களின் கதி அதோ கதிதான்!

இந்தப் பிரச்சினையில் சிக்காமல் இருக்க ஒரே வழி, மனையைச் சுற்றி கம்பி வேலி அமைப்பது. ஆனால், உடனடியாக வீடு கட்ட நினைப்பவர்களுக்கு இந்தக் கம்பி வேலிப் பாதுகாப்பு தேவை இல்லை என்கிறார் சொத்து ஆலோசகர் சிவக்குமார். தவிர, வீடு கட்டும்போது இந்தக் கம்பி வேலி இடையூறாகவே இருக்கும். மனையைப் பாதுகாக்கச் சிறந்த முறை, வாங்கிய அடுத்தநாளே மனையின் நான்கு மூலைகளிலும் ‘எல்’ டைப்பில் இரண்டடிக்கு ஆழம் எடுத்துச் செங்கல் சுவரோ ஹாலோ பிளாக் சுவரோ இரண்டடி உயரத்துக்கு எழுப்பிவிட வேண்டும்.

 அதில் அந்த மனையை வாங்கிய விவரங்களை எழுதி வைத்துவிட வேண்டும். இதன்மூலம் அந்த இடம் இன்னாருக்குச் சொந்தமானது என்பதை அறிவித்தால், யாரும் அந்த இடத்தில் நுழைய முடியாது. அப்படி நுழைந்தால் அது சட்டப்படி குற்றமாகக் கருதப்படும்.

மனை வாங்கிய அனைவருமே ஆக்கிரமிப்புச் சிக்கலில் சிக்கிவிடுவதில்லை என்றாலும், அது நமக்கு நிச்சயம் நடக்காது என்று அசட்டையாக இருந்துவிடக் கூடாது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் மனையை நேரில் சென்று பார்த்துவிட்டு வருவது அவசியம். மனைக்கு அக்கம்பக்கம் இருப்பவர்கள் ஏற்கெனவே வீடு கட்டி வசித்து வந்தால், அவர்களுடன் நல்ல உறவை வைத்துக் கொள்வதன் மூலம் ஆக்கிரமிப்புகளிலிருந்து இடத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். குறைந்தபட்சம் அவர்கள் நமக்கு உடனடியாகத் தகவல் சொல்லும்பட்சத்தில் பிரச்சினையை முளையிலேயே கிள்ளி எறிய முடியும் அல்லவா?

SCROLL FOR NEXT