தமிழகத்தின் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் மீதான சொத்துவரியை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் 50% முதல் 100% வரை உயர்த்திக்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. ஆண்டு தொடக்கத்தில் பேருந்துக் கட்டண உயர்வு, ஆண்டின் மத்தியில் சொத்து வரி உயர்வு என்று பொது மக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்துவருகிறது தமிழக அரசு.
உயர் நீதிமன்ற உத்தரவின் விளைவு
சென்னை மாநகர் முனிசிபல் சட்டத்தின்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சொத்து வரியை மறு மதிப்பீடுசெய்ய வேண்டும். ஆனால், சென்னையில் 1998-99 ஆம் ஆண்டில்தான் கடைசியாக மறு மதிப்பீடு செய்யப்பட்டது. இதற்கிடையில் சென்னைப் பெருநகரமாக விரிவாக்கப்பட்டபோது புதிதாகச் சேர்க்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் உத்தரவின் பேரில் மறு மதிப்பீடுசெய்யப்பட்டதால் அந்தப் பகுதிகளில் சொத்து வரி அதிகரித்தது, இதனால் மாநகரத்தின் நவீன வசதிகளைக் கொண்ட தி.நகர், மயிலாப்பூர், அண்ணா நகர் போன்ற பகுதிகளிலும், அதிக வளர்ச்சியடையாத செம்மஞ்சேரி, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கிட்டத்தட்ட ஒரே சொத்துவரி வசூலிக்கப்படும் நிலை இருந்துவருகிறது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 2008-க்குப் பின் மறு மதிப்பீடு செய்யப்படவில்லை. சில பகுதிகளில் அவ்வப்போது சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. கட்டிடங்கள் வகை மாற்றம் செய்யப்பட்டு அவற்றுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுரையில் சில மாதங்களுக்கு முன் இவ்வாறு சொத்து வரி கடுமையாக உயர்த்தப்பட்டதை அடுத்து மாநகராட்சி அலுவலகத்தின் முன் போராட்டங்கள் நடந்தன.
இந்நிலையில் சென்னையில் அடையாறு கரை ஓரத்தில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கின் விசாரணையின்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், சென்னையில் கடந்த 20 ஆண்டுகளாகச் சொத்துவரி உயர்த்தாமல் இருந்ததை விமர்சித்திருந்தனர். ‘சென்னையில் பல அடுக்குமாடிக் கட்டிடங்கள் மிகப் பெரிய அளவில் விரிவடைந்துள்ளன. நான்கு முறை சொத்து வரியை அதிகரிப்பதற்கான வாய்ப்பைக் கைவிட்டதால் மாநகராட்சியின் நிதி நெருக்கடி அதிகரித்திருக்கிறது. போதிய நிதி ஆதாரம் இல்லை என்றால் பொது மக்களுக்குத் தேவையான வசதிகளை எப்படிச் செய்துதர முடியும்?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து சொத்து வரிகள் உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. வரியை உயர்த்துவதற்கான அறிக்கையை மாநகராட்சி ஆணையர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அது குறித்து ஆகஸ்ட் 3-க்குள் முடிவெடுக்க நீதிபதிகள் தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம், குடிநீர் விநியோகத் துறையின் முதன்மைச் செயலர் ஹர்மிந்தர் சிங்குக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து சென்னை மாநகராட்சி, தமிழகத்தின் மற்ற 11 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் சொத்துவரியை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1,160 கோடிவரை அதிக வருவாய் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
பதறவைக்கும் வரி உயர்வு வரம்புகள்
அந்த உத்தரவில் குடியிருப்புக் கட்டிடங்களுக்கு 50%க்கு மிகாமலும், குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கும், வாடகைக்கு விடப்பட்டுள்ள குடியிருப்புக் கட்டிடங்களுக்கும் 100%க்கு மிகாமலும் சொத்து வரியை உயர்த்திக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து வாடகைக்கு விடப்பட்டுள்ள குடியிருப்புக் கட்டடங்களுக்கான சொத்துவரியை அதிகபட்சம் 50% வரை மட்டுமே உயரத்தலாம் என்று மறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சொத்து வரி எவ்வளவு உயர்த்தப்படும் என்ற விகிதம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால், நிதி நெருக்கடியில் விழிபிதுங்கி நிற்கும் உள்ளாட்சி அமைப்புகள் பலவும், உச்ச வரம்பையே அதாவது இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த சொத்து வரியை 50%, 100% உயர்த்தவே வாய்ப்புகள் அதிகம்.
இந்தக் கடுமையான வரி உயர்வு கட்டிட உரிமையாளர்களை மட்டுமல்ல; வாடகைக்குக் குடியிருப்பவரையும் ஏழை நடுத்தர வர்க்கத்தினரையும் சேர்த்தே பாதிக்கும். ஏற்கெனவே வானளவு உயர்ந்துவரும் வாடகைகள் மேலும் உயர்த்தப்பட இது ஒரு காரணமாக அமையும். வாடகைகளைக் கட்டுப்படுத்துவதில் எந்த வலுவான நடவடிக்கையும் எடுத்திராத அரசுகளும் உள்ளாட்சி அமைப்புகளும் இந்த வரி உயர்வால் உயரப்போகும் வாடகைகள் உயர்ந்துவிடாமல் தடுக்கும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளில் எந்த அளவு கவனம் செலுத்துவார்கள் என்று தெரியவில்லை. வரியை உயர்த்தச் சொன்ன நீதிமன்றம் இப்படிப்பட்ட தடாலடி உயர்வைக் குறைக்கச் சொல்லுமா அல்லது பேருந்துக் கட்டண உயர்வைப் போல் இதிலும் தலையிட மறுத்துவிடுமா என்றும் தெரியவில்லை.
மாறிவரும் தேவைகள், அதிகரிக்கும் அரசுச் செலவினங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விலை, வரி உயர்வுகள் தவிர்க்க முடியாதவைதாம். ஆனால், 20 ஆண்டுகளில் படிப்படியாக வரியை உயர்த்தியிருந்தால் உரிமையாளர்களுக்குப் பெரும் சுமையாக இருந்திருக்காது. 2011-ல் பல ஆண்டுகளுக்குப் பிறகு பால், பேருந்துக் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டன. அதற்கடுத்து 2018-ல் மீண்டும் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. அதே அணுகுமுறையைத்தான் இந்த விஷயத்திலும் அரசு பின்பற்றியிருக்கிறது. 20 ஆண்டுகளாக வரி உயர்த்தாமல் இருந்த அரசின் தவறுக்குக் கட்டிட உரிமையாளர்கள் பாதிக்கப்படப் போகிறார்கள்.
வரி உயர்வு மட்டும்தான் வருவாயா?
திமுக உட்பட தமிழகக் கட்சிகள் பலவும் சொத்து வரி உயர்வை எதிர்த்துள்ளன. விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யச் சொன்ன உயர் நீதிமன்ற உத்தரவுக்கு அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்ற வாதத்துடன் உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கியது தமிழக அரசு. 2011-க்குப் பிறகு தமிழகத்தில் இன்னும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. இதிலும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சித் தேர்தல் நடக்காததால் கடந்த ஓர் ஆண்டு மட்டும் மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய ரூ.3,500 கோடி நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சிகள், சொத்து வரி விஷயத்தில் மட்டும் உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாகப் பின்பற்றுவது ஏன், என்று கேள்வி எழுப்புகின்றன.
அடிப்படை வசதிகள் வளரவில்லை
மக்களிடமிருந்து வரி வசூலிக்கப் படுவது அவர்களுக்கான வசதிகளைச் செய்துகொடுப்பதற்காகத்தான். ஆனால், சென்னை மாநகர நிர்வாகத்தின் பார்வையில் வளர்ச்சி என்பது மேம்பாலங்கள் அமைப்பது பிரதான சாலைகளை விரிவுபடுத்துவது, மெட்ரோ ரயில் போன்ற போக்குவரத்துத் திட்டங்களை வடிவமைப்பது ஆகியவற்றுடன் சுருங்கிவிடுகிறது. அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் அதிகக் கவனம் செலுத்தப்படுவதில்லை. அரை மணி நேர மழைக்கே சாலைகள் குளமாகிவிடுகின்றன. வீடுகளுக்குள் நீர் புகுந்துவிடுகிறது. தரைத்தளக் கழிப்பறைகளில் அடைப்பு ஏற்படுகிறது சாலைகளில் சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வணிக வளாகங்கள் நிரம்பிய சாலைகளில் போதுமான வாகன நிறுத்துமிடங்கள் இருப்பதில்லை. இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி இதுவரை வசுலிக்கப்பட்ட சொத்து வரியை வைத்து எங்களுக்கு என்ன வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றன என்று கட்டிட உரிமையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
உள்ளாட்சி அமைப்புகள் ஈட்டும் வருவாயில் சொத்து வரிதான் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த முறையாவது உயர்த்தப்பட்ட வரியை வைத்து கட்டங்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்று நம்பலாமா?
வழியில்லை.