பல படங்கள் ஹிட் ஆகாவிட்டாலும், அந்தப் படத்தின் ஏதோ ஒரு பாடலோ சில காட்சிகளோ ஹிட் ஆகி ரசிகர்கள் மனதில் ஓர் இடத்தை நிரந்தரமாகப் பிடித்துவிடுவது உண்டு. அப்படி இன்றுவரை மீண்டும் மீண்டும் கேட்கப்படும் பாடல்களில் ஒன்று, ‘சில்லுனு ஒரு காதல்' படத்தின் ‘முன்பே வா என் அன்பே வா' பாடல். ரஹ்மானின் மெலடி வரிசையில் தனியிடம் பிடித்தது இந்தப் பாடல்.
பாடலின் ஆரம்பத்தில் சந்தூர் போன்ற தந்தி இசைக் கருவியிலிருந்து எழும் இனிய மீட்டல் ஈரானியப் படங்களின் இசையை நினைவு படுத்தும்.
மிக எளிமையான, வசீகரிக்கும் மெலடியான மெட்டு, அந்த மெட்டுக்குத் தடங்கல் ஏற்படுத்தாத வாலியின் வரிகள், ஸ்ரேயா கோஷல் - நரேஷின் குரல்கள் என எல்லாமே கச்சிதமாகக் கூடிவந்த பாடல்களில் ஒன்று இது. மென்மையான குரல் கொண்ட நரேஷ், அதற்குப் பிறகு பல பிரபல பாடல்களைப் பாடியிருக்கிறார். ‘முன்பே வா’ அவருக்குப் புகழ் தேடித் தந்த ஆரம்ப காலப் பாடல்.
‘முன்பே வா’ பாடலுக்கு யூடியூபில் பல கவர் வெர்ஷன்கள் உண்டு. அவற்றில் மூன்று குறிப்பிடத்தக்கவை. பெரிய பின்னணி இசைக் கருவிகள் எதுவுமில்லாமல், பெங்களூருவைச் சேர்ந்த சந்தோஷ் தும்னர் பாடியுள்ள குறும்பாடல் ரசிக்கத்தக்க ஒரு வடிவம். அதேபோல, விஜய் கண்ணனின் புல்லாங்குழலில் கசிந்துருகி வரும் ‘முன்பே வா’வும் இனிமையானதே. இவற்றுக்கிடையில் ‘முன்பே வா’ பாடலின் கவர் வெர்ஷனைக் கொண்டு ஒரு பேண்ட் அடையாளம் பெற்றதும் நடந்திருக்கிறது.
கேரளத்தைச் சேர்ந்த சூரஜ் சந்தோஷின் ‘மசாலா கஃபே’ பேண்ட் 2014-ல் ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் குழு ‘கப்பா டிவி’யின் ‘மியூசிக் மோஜோ’ நிகழ்ச்சியில் அறிமுகம் ஆனபோது, ‘முன்பே வா’ பாடலுக்கு ஒரு கவர் வெர்ஷனை வெளியிட்டது. சூரஜ் உருகி உருகிப் பாடிய அந்தப் பாடல், பெரிய ஹிட். அந்த வெர்ஷனின் நிறைவாக வரும் டிரம்பெட் இசை, பாடலுக்கு தனி அழகைச் சேர்த்திருக்கிறது.
சூரஜுக்கும் மசாலா கஃபேவுக்கும் அப்பாடல் தனிப் புகழ் தேடித் தந்தது. அதற்குப் பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் சூரஜ் சந்தோஷ் அதிகம் பாடினார். ‘உறியடி’ படம் மூலம் அவரது குழு திரையிசைக் குழுவாக மாறியது, வரலாறு.
‘முன்பே வா’ பாடலுக்கு ஏனோ பெண் குரல் கவர் வெர்ஷன் எதுவும் பெரிய ஹிட் ஆகவில்லை. அதற்குக் காரணம் ஸ்ரேயா கோஷலின் தனித்தன்மை கொண்ட குரலும் பாடிய முறையும் காரணமாக இருக்கலாம்.
சூரஜ் சந்தோஷின் 'முன்பே வா' பாடலை ரசிக்க