வீட்டின் புத்தக அலமாரிகளில் புத்தகங்களை அடுக்குவது என்பது இப்போது ஒரு கலையாக மாறிவருகிறது. அலமாரிகளில் புத்தகங்களை அடுக்கிவைக்கும் முறையே வீட்டுக்கு ஒரு புதுமையான அழகைக் கொடுக்கும். இன்றைய நவீன வடிவமைப்பு முறையில், புத்தக அலமாரியில் புத்தகங்களை மட்டும் அடுக்கிவைக்கும் வழக்கம் மாறியிருக்கிறது. இந்தப் புதிய வடிவமைப்புப் போக்கில், புத்தகங்களுக்கிடையில் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை நினைவுப் படுத்தும் ஒளிப்படங்கள், பொருட்கள் போன்ற அம்சங்களை இணைப்பது அதிகரித்துவருகிறது. இந்த நவீன புத்தக அலமாரியை வடிவமைப்பதற்கான சில ஆலோசனைகள்...
உங்கள் வீட்டின் புத்தக அலமாரியை எந்த அளவில் தேர்வு செய்கிறீர்கள் என்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் மற்ற பொருட்களைத் தேர்வு செய்ய வேண்டும். புத்தகங்களை அடுக்குவதற்கு வெளிப்படையான வடிவமைப்புடன் மெலிதான அடுக்குகளைக் கொண்ட அலமாரிகள் சரியான தேர்வாக இருக்கும். பிரம்மாண்டத் தோற்றத்தை விரும்புபவர்கள் மரம், பித்தளை போன்ற இரண்டு கலவையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் புத்தக அலமாரிகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
பாரம்பரியம் போற்றுவோம்
வீட்டிலிருக்கும் பாரம்பரியமான பொருட்களை அடுக்குவதற்குத் தனியாக ஓர் இடம் தேட வேண்டியதில்லை. அந்தப் பாரம்பரிய பொருட்களைப் புத்தக அலமாரிகளில் புத்தகங்களுக்கு மத்தியில் அடுக்கலாம். இப்படி அடுக்குவதில் கலைப் பொருட்களையும் இணைத்துக்கொள்ளலாம்.
வண்ணங்களுக்குப் பின்னால் புத்தகங்கள்
அலமாரியின் பின்னணியை வண்ணமடித்தும், சுவரொட்டிகள் ஒட்டியும் வடிவமைக்கலாம். இந்த வடிவமைப்புப் புத்தக அலமாரியின் தோற்றத்தை ஆழமானதாக மாற்றும். அலமாரியின் இந்தப் பின்னணி வடிவமைப்புக்கு அடர்நிறங்களைப் பயன்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.
பெரியதே அழகு
நீங்கள் அலமாரியில் அடுக்க நினைக்கும் பொருட்களில், பெரிய பொருட்களை முதலில் அடுக்குவது சிறந்தது. இந்தப் பெரிய பொருட்களை அலமாரியின் மேல் அடுக்கின் இடதுபுற ஓரத்தில் அடுக்கலாம். இந்தப் பொருட்களுடன் புத்தகங்களைக் குறுக்கும் நெடுக்குமாக (Zig - Zag) அடுக்குவது புதுமையான தோற்றத்தைக் கொடுக்கும். அத்துடன், வட்ட முனைகளைக் கொண்ட பொருட்களைப் புத்தகங்களுடன் அடுக்கலாம்.
இப்படி அலமாரியின் மேல் அடுக்கின் வலதுபுற ஓரத்திலும் பொருட்களை அடுக்கலாம். மேலடுக்குக்குக் கீழே இருக்கும் அலமாரிகளில் புத்தகங்களைக் குறுக்கும் நெடுக்குமான முறையில் அடுக்கலாம். இந்த அடுக்குகளில் வேறு எந்தப் பொருளையும் வைக்க வேண்டாம்.
சின்னதும் பெரியதும்
அலமாரியின் கீழ் அடுக்குகளில் பெரிய புத்தகங்களையும் மேல் அடுக்குகளில் சிறிய புத்தகங்களையும் அடுக்கலாம். இந்தப் புத்தக வரிசையை ஓரே சீரானதாக இல்லாமல் கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் அடுக்கலாம். புத்தகங்களை இரண்டு வரிசையில் அடுக்க விரும்பினால், சிறிய புத்தகங்களை உள்ளேயும் பெரிய புத்தகங்களை வெளியில் தெரியும்படியும் அடுக்குவது பொருத்தமாக இருக்கும்.
குறைவான பொருட்கள்
புத்தகங்கள், பொருட்கள், காலியிடம் என்ற மூன்று அம்சங்களும் மூன்றில் ஒரு பங்குதான் இருக்க வேண்டும் என்ற விதியைப் புத்தக அலமாரியை அடுக்கும்போது பின்பற்ற வேண்டும். புத்தக அலமாரியில் பொருட்களை அடுக்கப் பிடிக்கவில்லையென்றால், அலமாரியின் கடைசி வரிசையில் ஒரே மாதிரியான பெட்டிகளையோ கூடைகளையோ மட்டும் அடுக்கலாம்.
புதுமையான வடிவங்கள்
புத்தகங்களைச் செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும் மட்டுமல்லாமல் பிரமிடு வடிவம் போன்ற புதுமையான தோற்றங்களில் அடுக்கலாம். தோல், கிளிஞ்சல்கள், உலோகம், பீங்கான் மாதிரியான பொருட்களையும் புத்தகங்ளுக்கு மத்தியில் புதுமையாக அடுக்கலாம். அத்துடன், புத்தக அலமாரியில் சிறிய விளக்குளைப் பொருத்தலாம்.