அதிகாலையில் விழித்தெழும் மனைவி ரேடியோவைப் பொருத்துகிறார். ‘அளிவேணி எந்து செய்வு’ என்ற கர்னாடக இசைப் பாடல் காற்றில் தவழ்ந்து வருகிறது. கையில் மல்லிகைச் சரத்துடன் அவர் படியிறங்கும்போது, பாடல் அவரை ஆட்கொண்டுவிடுகிறது. அவருடைய மனத்தில் உறங்கிக் கிடந்த நடனம் உத்வேகமெடுக்க, மல்லிகைச் சரத்தை நளினத்துடன் வீசியெறிந்த படியே அபிநயம் பிடிக்க ஆரம்பிக்கிறார்.
நடனத்தில் அவர் லயிக்க ஆரம்பித்த நேரத்தில், சட்டென்று நின்றுவிடுகிறது பாடல். அவருடைய அபிநயமும் அப்படியே நின்று போகிறது. அடுப்பில் வைத்த பாலை அணைக்காமல் மனைவி அபிநயம் பிடித்துக்கொண்டிருந்ததைக் கண்டு கோபமடைந்த கணவன், ரேடியோவை அணைத்ததே இதற்குக் காரணம்.
இயல்பின் ஓட்டத்தைத் தடைசெய்வது எப்படி நல்லதொரு விளைவை ஏற்படுத்த முடியும்? கோபித்துக்கொண்டு தன் நடன ஆசிரியை வீட்டுக்குப் புறப்படுகிறாள் மனைவி. போகும் அவசரத்தில் அவளுடைய கொலுசு கழன்று வீட்டு வாசலிலேயே விழுந்துவிடுகிறது.
காதலியாக இருந்தபோது இவளது நடனத்தைப் பார்த்து வியந்த அதே கணவன்தான், இன்றைக்கு ரேடியோவை இடையில் பட்டென்று நிறுத்திவிட்டான். கொலுசைத் துருப்புச் சீட்டாக எடுத்துக்கொண்டு நடன ஆசிரியை வீட்டுக்கு அவன் விரைகிறான்.
நடன ஆசிரியையின் வீட்டு மாடி அறையில் அவன் தேடிச் செல்லும்போது, அங்கே லயித்துப் போய் ஆடிக்கொண்டிருக்கிறாள் மனைவி. சட்டென்று முன்னே போய் நிற்கிறான். கடைசிவரை அவர்கள் பேசிக்கொள்ளவே இல்லை. ஆனால், அவர்கள் கோபத்தை மறக்கும் தருணம் முகங்களைக் காட்டாமலேயே அழகுறக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பாடலை ரசிப்பதற்கு மலையாளம் தெரிந்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ரசிக்கத்தக்க வகையில் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. வசனங்களே இல்லாமல், எல்லோரது கண்களும் முக பாவங்களுமே விஷயத்தைச் சொல்லிவிடுகின்றன.
மீரா ஸ்ரீநாராயணனும் ஸ்ரீராமும் நடித்திருக்கிறார்கள். இயக்கியவர் ஸ்ரீராமின் அண்ணன் ஜெயராம். பாடலுக்கு நவீன வடிவம் தந்து இசைத்திருப்பவர் மகேஷ் ராகவன். இந்தப் படத்தின் தரத்தை ஒளிப்பதிவும்கூடத் தனித்துக் காட்டுகிறது - ஒளிப்பதிவு செய்தவர் பெண் கலைஞர் உமா குமாரபுரம்.
ஒரு பாடலையே குறும்படமாகக் கொண்ட இந்த வீடியோவில் பாடலைப் பாடியிருப்பவர் கல்யாணி மேனன். கல்யாணி வேறு யாரும் அல்ல; இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ராஜிவ் மேனனின் அம்மா. 70-களில் கர்னாடக இசைப் பாடகியாக அறிமுகமான இவர் திரைப்படங்களிலும் பாடியிருக்கிறார். அடுத்த தலைமுறைக்கு அவரது குரலை அறிமுகப்படுத்தியவர் ஏ.ஆர். ரஹ்மான். ‘முத்து’ படத்தின் ‘குலுவாலிலே’ பாடலின் இடையில் வரும் ‘ஓமன திங்கள்’, ‘அலைபாயுதே’ படத்தின் டைட்டில் பாடல், ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் ‘ஓமனப் பெண்ணே’ ஆகிய பாடல்களைப் பாடியவர் இவர்தான்.
கல்யாணி மேனனின் குரல், நடனம், கதைபோல நகரும் தருணங்களைக் கடந்து, பாடலைச் சட்டென்று நமக்குப் பிடித்துப் போகவைப்பது மகேஷ் ராகவனின் இசைக்கோப்பு. குறிப்பாக, அவருடைய எலெக்ட்ரானிக் பாணியில் அமைந்த பின்னணி இசை, பாடலை இக்காலத்தினரும் ரசிக்கக்கூடியதாக மாற்றியுள்ளது.
குறிஞ்சி ராகத்தில் அமைந்த இந்தப் பாடல், மகாராஜா ஸ்வாதித் திருநாள் மகாராஜா எழுதிய புகழ்பெற்ற கர்னாடக இசைப் பாடல்களில் ஒன்று. கேரளத்தின் சாஸ்திரிய நடன வடிவமான மோகினியாட்டக் கலைஞர்கள் விரும்பி ஆடும் பாடல்களில் ஒன்றும்கூட.
எம்.எஸ். சுப்புலட்சுமி, திரைப் பாடகி கே.எஸ். சித்ரா உள்ளிட்டோரின் குரல்களில் கர்னாடக இசைப் பாடலாகவும் யூடியூபில் இதை ரசிக்கலாம். ‘கானம்’ என்ற மலையாளப் படத்துக்காக பி.சுசீலா பாடிய வடிவம் ஒன்றும் உள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் ‘கோச்சடையான்’ படத்தில் இடம்பெற்ற ‘மணமகனின் சத்தியம்’ பாடலை, இந்த வீடியோவுக்குப் பின்னணியாகச் சேர்த்து ஒரு யூடியூப் வெர்ஷன் இருக்கிறது.
வெறும் ஐந்து நிமிடத்துக்குள் ஒரு பழைய பாடலுக்குப் புது வடிவம், நடனம் ஆகியவற்றுடன் உணர்ச்சிகள் நிறைந்த ஒரு குறுங்கதையையும் சுவாரசியமாகக் காட்ட முடியும் என்பதை கல்யாணி மேனன் பாடிய இந்த வீடியோ நிரூபிக்கிறது.
‘தாமரை இதழ்களைப் போன்ற கண்களை கொண்ட பத்மநாபன் இன்னும் வரவில்லையே, என்ன செய்வேன், என்ன செய்வேன்?’ என்று தேவதையிடம் கேட்கும் ஒரு பெண்ணின் பார்வையில் அமைந்த பாடல் அது. இந்த நவீன வீடியோ வடிவத்திலோ, ‘காதல் மனைவியைக் கோபப்படுத்திவிட்டோமே, என்ன செய்வேன், என்ன செய்வேன்?’ என்று கணவன் கேட்கும் வகையில் அமைந்துள்ளது சுவாரசிய முரண்.
இந்தப் பாடலை ரசிக்க: https://bit.ly/2N3DuDv