வீட்டின் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு வானத்தைப் பார்த்தால் அங்கங்கே மேகங்கள் திட்டுதிட்டாகத் தெரியும். அவை பறவை, யானை, ஆண், பெண் எனப் பல உருவங்களாகத் தெரியும். அவரவர் கற்பனைக்கு ஏற்ப இந்த உருவப் பிரதிபலிப்பு இருக்கும். ஆனால் இதேபோன்று நாம் பயணிக்கும் இடங்களில் உள்ள பொருட்களை நமக்குப் பிடித்த கற்பனை உருவமாக நினைத்துப் பார்ப்பதும் நடக்கும்.
அப்படி மழைநீர் வடிந்த சுவரில் ஒரு அழகான ஓவியத்தைப் பார்க்க முடியும். இம்மாதிரியான அழகான கற்பனைகளை ஓவியமாக மாற்றியிருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த ஓவியர் டாம் பாப்.
வீதி ஓவியரான பாப், சாலைகளில் இருக்கும் தண்ணீர்க் குழாய், கழிவு நீர்க் குழாய் மூடி போன்ற பொருட்களைக் குழந்தைகளுக்குப் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திர ஓவியமாக மாற்றியிருக்கிறார். தடுப்புச்சுவரை இரண்டு பாம்புகள் சந்திப்பது போலவும், கட்டிடத்திற்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் குழாயை சிறுவன் சாக்ஸஃபோன் வாசிப்பது போலவும், சிசிடிவி கேமராவை பறவையின் கண்ணாகவும் இவர் தனது கைவண்ணத்தால் மாற்றியிருக்கிறார். அவரின் ஓவியங்கள் இன்ஸ்டாகிராமில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்த ஓவியங்களின் மூலம் இவர் இன்ஸ்டாகிராமில் கிட்டதட்ட 2 லட்சம் பின்தொடர்பாளர்களைப் பெற்றிருக்கிறார். இந்த தெருக்களில் காணும் இம்மாதிரிப் பொருள்களை சுவாரசியமான ஓவியமாக மாற்றுவதையே தனது பாணியாகக் கொண்டிருக்கிறார் பாப். அமெரிக்கா மட்டுமல்லாது தைவான், துபாய் போன்ற நாடுகளிலும் டாம் பாப் ஓவியங்களை வரைந்துள்ளார். ‘கல்லிலே கலை வண்ணம் கண்டார்’ என்று கண்ணதாசன் பாடினார். ஆனால் பாப் தனது கண்ணிலே கலை வன்ணம் கண்டு, அதை மற்றவர்களுக்கும் காட்டிவருகிறார்.