தவாங் பள்ளத்தாக்கில் இருக்கும் புத்தமடாலயம் இந்தியாவிலேயே மிகப் பெரியது. ஆசியாவில் இரண்டாவது மிகப்பெரிய புத்த மடாலயம் அது.
அருணாசலப் பிரதேசத்தில் இருக்கும் இந்த மடாலயத்துக்குக் கவுஹாத்தியிலிருந்து ஹெலிகாப்டர் வழியாகவோ சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவுக்குச் சாலை வழியாகவோ பயணித்துச் செல்ல முடியும். இருசக்கர வாகனங்களில் சாலைப் பயணம் மேற்கொள்பவர்கள் அதிக அளவில் தவாங்குக்கு வருகிறார்கள். மழையும் பனியும் அடிக்கடி பொழிவதால் ஹெலிகாப்டர் மிக அரிதாகவே இயக்கப்படுகிறது. அதனால் சாலைப் போக்குவரத்தே தவாங் பயணத்துக்கு ஏற்றதாக இருக்கிறது.
தவாங்கில் இருக்கும் இந்தப் புத்தமடாலயத்தைக் கட்ட அதன் நிறுவனரான மெரிக் லாமா முயன்றபோது இந்த நிலப்பரப்பைப் புரிந்துகொள்வதிலும் இயற்கைச் சீற்றங்களிலிருந்து தப்பிப்பதிலும் சிரமங்கள் இருந்தன. 5-ம் தலாய்லாமாவின் வேண்டுகோளின்படி அங்கு வசிக்கும் மக்களின் உதவியோடு இந்தப் பிரம்மாண்ட மடாலயம் கட்டிமுடிக்கப்பட்டது.
அருணாசலப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு சீனா உரிமை கோரிவருகிறது. 2017-ம்
ஆண்டு இந்த மாநிலத்தின் ஆறு பகுதிகளின் பெயர்களை சீனா அலுவல்ரீதியாக மாற்றியது. இந்த அச்சுறுத்தல் காரணமாக அருணாசலப் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. எனவே முறையான அனுமதி பெற்ற பிறகே அருணாசலப் பிரதேசத்தின் உள்ளே நுழைய முடிகிறது.
புத்த மதப் பிரார்த்தனைகள் நிரம்பிய கொடிகளையும் பிரார்த்தனை சக்கரங்களையும் அம்மாநிலத்தில் பரவலாகக் காண முடிகிறது. இவற்றுக்கு இடையே இந்திய ராணுவத்தின் எல்லைப் பாதுகாப்புப் படை அருணாசலப் பிரதேசத்துக்குச் செய்யும் நன்மைகளைப் பட்டியலிடும் பதாகைகள், சுவரெழுத்துக்களையும்கூடப் பார்க்க முடிந்தது.
அம்மாநிலத்தில் புதியதாக அணை கட்டப்படுவதை எதிர்த்து அம்மாநில மக்கள் போராட்டங்கள் நடத்துவதையும் பார்க்க முடிகிறது.
கவுஹாத்தியிலிருந்து தவாங் செல்லும் 450 கிலோமீட்டர் தொலைவும் மலைப் பகுதியாக இருப்பதாலும் பகல் நேரத்தில் மட்டுமே பயணிக்க முடிவதாலும் இரண்டு பகல்கள் ஒரு இரவுக்குப் பிறகே தவாங்கை அடைய முடிகிறது. அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து அருணாசலப் பிரதேசத்துக்கு வரும் வழி முழுவதும் ஓரளவுக்குச் சாலைகள் சரிசெய்யப்பட்டிருப்பதால் பயணம் சிரமம் இல்லாமல் இருக்கிறது. ஆனால், சாலைகளைச் சரிசெய்வதற்காகவும் விரிவுபடுத்துவதற்காகவும் வழியெங்கும் உள்ள மலைகள் சிதைக்கப்பட்டிருப்பதையும் பார்க்க முடிந்தது.
தவாங் பள்ளத்தாக்கில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் வணிகரீதியான சுற்றுலாவையும் இயற்கையைக் கடுமையாகப் பாதிக்கும் சுற்றுலாப் பயணி களையும் விரும்பவில்லை. என்றாலும் சுற்றுலா மூலமாகக் கிடைக்கும் வருமானம் அவர்களுக்கு முக்கியமானதாகவும் இருக்கிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதால் அருணாசலப் பிரதேசத்தைத் தவிர்த்த மற்ற மாநிலங்களிலிருந்தும் மக்கள் இடம்பெயர்ந்து இங்கு வந்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
தவாங்கிலிருக்கும் மற்றொரு முக்கியமான மடாலயம் உக்யெங்லிங் மடாலயம். 6-ம் தலாய்லாமா பிறந்த இடமான இங்கு 1847-ல் இந்தப் பழமையான மடாலயம் கட்டப்பட்டது. அதேபோல் சுற்றுலாப் பயணிகள் செல்ல விரும்பும் முக்கியமான மற்ற இரண்டு இடங்கள் பும்லாபாஸும் சேலாபாஸும். தவாங், மேற்கு காமெங் ஆகிய மாவட்டங்களுக்கு இடையே இருக்கும் சேலாபாஸ் எனும் மலைப்பாதை கடல்மட்டத்திலிருந்து 13,700 அடி உயரம் கொண்டது.
கடல்மட்டத்திலிருந்து 15,200 அடி உயரத்திலிருக்கும் பும்லாபாஸ் இந்திய சீன எல்லையாக இருக்கிறது. தவாங்கிலிருந்து 37 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் இப்பகுதி முழுக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்தப் பகுதியை அடைய முறையான அனுமதியுடன் அப்பகுதியைச் சார்ந்த வாகன ஓட்டிகளின் உதவியும் அவசியம். பனிமலைகள் நிரம்பிய அம்மலை முழுவதும் ராணுவத்தினர் பயிற்சி எடுப்பதையும் அவர்களது பதுங்குக்குழிகளையும் காண முடிகிறது.
அஸ்ஸாமிலிருந்து தவாங்கை தரை வழியாகச் சென்று திரும்ப ஏறக்குறைய 6 நாட்கள் ஆகின்றன. அப்பயணம் முழுவதும் எந்தக் குழப்பமும் இல்லாமல் இருக்க ஒரு நல்ல வாகனமும் ஒரு நல்ல வாகன ஓட்டியும் இருந்தால் மட்டுமே முடியும். எங்களது பயணம் முழுவதும் எங்களுடன் வந்த காசி பழங்குடியைச் சார்ந்த வாகன ஓட்டுநர் எங்களுடன் நிறைய பேசிக்கொண்டே இருந்தார்.
ராணுவக் கட்டுப்பாடு, பத்திருபது வருடங்களுக்கு முன்பு மிகவும் குளிர் பிரதேசமாக இருந்த அந்தப் பகுதியின் அதிகரித்து வரும் வெப்பநிலை, வண்ணமயமான அதன் தனிக் கலாச்சாரம் சிதைந்துவருவது எனப் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். நாங்கள் திரும்பி வரும்போது அருணாசலப் பிரதேச மாநிலம் ஒரு மலையாக பின்னோக்கிச் சென்றபோது அந்தப் பழங்குடியின் விசனம்
ஒரு பாடலைப் போல் நினைவுகளில் ஒலித்தது.
- ஓவியங்கள், கட்டுரை: கிரீஷ்