சொந்த வீடு

பழுதடைந்தவற்றுக்கு மறுவாழ்வு அளிப்பவர்

ஜே.கே

சொ

ல் புதிது சுவை புதிது என்பது பாரதியின் வரிகள். புதிது என்ற சொல்லில் ஒரு புத்துணர்ச்சி இருக்கிறது. அதுவரை பார்க்காத ஊருக்குப் பயணம்போவதுபோல நம் புலன்கள் ஒவ்வொன்றும் இந்தப் புதிதில் வியாபிக்கும். இந்தப் புதிது என்பது பொருளில் மட்டுமல்ல. சிந்தையிலும் உண்டு. இப்படியான புதிய சிந்தைகளின் தொழிற்கூடமாக இருக்கிறது கீழ்க்கட்டளையிலுள்ள ஒரு வீடு. அந்தச் சிந்தைகளுக்குச் சொந்தக்காரர் பன்னீர்செல்வம். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், சென்னையில் கீழ்க்கட்டளையில் வசித்துவருகிறார். மென்பொருள் பொறியாளர்.

பயனற்றவை என நாம் அன்றாடம் கழிக்கும் பல பொருள்கள் குப்பைக் கூடைக்குச் சென்று புறநகர்ப் பகுதிகளில் ஒரு பிரம்மாண்ட மலையாக உருவெடுத்துவிட்டது. தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் நம் வீட்டுக்குத் தேவையான பயன்படும் பொருள்கள் பலவும் மிகச் சகாய விலையில் சந்தையில் கிடைக்கிறது. ஆனால் முன்பெல்லாம் எல்லாவற்றுக்கும் கடை ஏற மாட்டோம். பாத்திரம் விளக்கத் தேங்காய் நாரைப் பயன்படுத்துவோம். ஹார்லிக்ஸ், பூஸ்ட் போன்ற உணவுப் பொருள்களின் டப்பாக்களைப் பருப்பு, கடலை போட்டுவைக்க மறுசுழற்சியாகப் பயன்படுத்துவோம்.

அதுபோல பல்துலக்கும் ஃப்ரஷ் தேய்ந்துவிட்டால் அதைக் கொண்டு வாஷ்பேசின் போன்ற இடங்களில் படிந்துள்ள கரைகளைப் போக்கப் பயன்படுத்துவோம். இன்று எல்லாம் ஒருமுறைதான் பயன்படுகின்றன. பிறகு குப்பைக்குப் போய்விடுகின்றன. ஆனால் இவற்றுக்கெல்லாம் மறுவாழ்வு கொடுத்துவருகிறார் பன்னீர்.

அவர் வீட்டிலிருந்த ஒரு குளிர்பதனப் பெட்டி பழுதாகிவிட்டது. அதைச் சரிசெய்ய முடியாது என பழுதுநீக்குபவர் கைவிட்டுவிட்டார். அந்தப் பெட்டியைப் பழைய விலைக்குப் போட்டுவிட்டுப் புதிதாக ஒன்று வாங்கலாம் என நினைத்திருக்கிறார். ஆனால் வெறும் 500 ரூபாய்க்குப் பழைய குளிர்பதனப் பெட்டியைக் கேட்டிருக்கிறார்கள். அவ்வளவு குறைவாக விற்பதற்குப் பதிலாக அதை நாமே மறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்தலாமே என நினைத்திருக்கிறார்.

அவரது வீட்டுச் சமையலறைக்கான அலமாரியாக அதன் கதவைப் பயன்படுத்தலாம் என முயன்று பார்த்திருக்கிறார். அந்தக் கதவைச் சுவருடன் சேர்ந்த்துப் பொருத்தியிருக்கிறார். மர அலமாரியைவிடப் பார்க்கப் புதிதாக இருக்கிறது.

4 கணினி மேஜை அலமாரி

அதுபோலக் கைவிடப்பட்ட பழைய கணினி மேஜையைப் பிரித்து வரவேற்பறை அலமாரியாக மாற்றியிருக்கிறார். அந்த அலமாரிகளுள் ஒன்றை அவரது குட்டிப் பெண் தனக்கானதாக்கிக் கொண்டாள். அவளுக்குப் பரிசாகக் கிடைக்கும் சிறு சிறு பொருள்களையெல்லாம் அதற்கு வைத்துவிட வேண்டும் என்பது அவளது இப்போதைய லட்சியங்களுள் ஒன்றாக இருக்கிறது.

அதே அலமாரியில் ஒரு அறையைத் தன் பையனுக்கும் கொடுத்திருக்கிறார். அவனது புத்தகங்கள் வைப்பதற்கான அறையாக அவன் அதைப் பாவித்துவருகிறான். இது மட்டுமல்லாமல் பன்னீர், வீட்டிலிருந்த அலுமினிய ஜன்னல் வடிவமைப்பிலும் தன் சிந்தையால் புதுமையைப் புகுத்தியிருக்கிறார். பக்கவாட்டில் நகரக்கூடிய இந்த வகை ஜன்னலின் கடைசிப் பகுதி ரயில் தண்டவாளம்போல் இருக்கும். இதில் கொசுவலையைப் பொருத்தலாம் என சிந்தித்திருக்கிறார்.

அதன்படி முதல் இரு காடியில் ஜன்னலும் நடுவில் கொசு வலையும் பொருத்தியிருக்கிறார். இதே முறையை அந்த அடுக்ககத்தில் உள்ள மற்ற வீடுகளும் பின்பற்றியிருக்கின்றன. இது மட்டுமல்லாமல் இன்னும் பல புதுமைகளையும் பன்னீர் தனது வீட்டில் செய்திருக்கிறார். அவற்றின் ஒளிப்படத் தொகுப்பு இது.

SCROLL FOR NEXT