வீ
ட்டுக்கு மேல் பூச்சி செய்வதற்கு ஆற்று மணலும் சிமெண்டும் அதிக அளவில் தேவைப்படும். கட்டுமானக் கல்லைப் பிணைப்பதற்கு ஒருவிதமான சிமெண்ட் கலவையும் கான்கிரீட்டுக்கு வேறுவிதமான கலவையும் பயன்படுத்தப்படுகிறது. இரண்டிலும் சிமெண்ட், மணல் பயன்பாடு குறைவாக இருக்கும். ஆனால் மேல் பூச்சுக்குத் தெளித்த நல்ல ஆற்று மணலும் சிமெண்டும் தேவைப்படும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் மணலுக்குத் தட்டுப்பாடு. சிமெண்ட் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. இதற்கு மாற்றாகத்தான் வந்திருக்கிறது ஜிப்சம்.
ஜிப்சம் என்றால் என்ன?
இயற்கையாக தோன்றக்கூடிய ஒரு கனிமம்தான், ஜிப்சம். வேதியல்படி கால்சியம் சல்பேட் டைஹைட்ரேட். இந்த ஜிப்சம் கிரேக்கர் காலத்திலிருந்தே பயன்பாட்டில் இருந்துவந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஜிப்சம் பாறை போன்றது. அதை வெட்டி எடுத்து, க்ரஷர் இயந்திரத்தில் அரைத்துத் தூளாக்குகிறார்கள். பிறகு அதை நீருடன் கலக்குகிறார்கள். பிறகு சில நேரம் குளிரவிட்டுவிடுகிறார்கள். பிறகு அதை 130 டிகிரி செல்சியஸ் வரை சூடாக்குகிறார்கள். இப்படிச் சூடாக்கும்போது ஹெமிஹைட்ரேட் உருவாகிறது. இதை உலரவைத்து கட்டுமானத்துக்குப் பயன்படுத்தும் ஜிப்சம் ப்ளாஸ்டர் தூளாகத் தயாரிக்கப்படுகிறது.
ஜிப்ஸம் பிளாஸ்டர் பவுடர் சிமெண்ட் போல மூடையாகச் சந்தையில் கிடைக்கிறது. இதை நல்ல நீரில் கலந்துபயன்படுத்த வேண்டும். முதலில் குடுவையில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீருடன்தான் ஜிப்சத்தைக் கலக்க வேண்டும். சிறிது சிறிதாக ஜிப்சம் பிளாஸ்டரைக் கலக்க வேண்டும். ஒரு கன செண்டி மீட்டர் தண்ணீருக்கு 100 கிராம் ஜிப்சம் தூளைச் சேர்க்க வேண்டும். இப்படிக் கலக்கி உருவாக அந்தக் கலவையைக் குறைந்தது அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு இதை எடுத்துச் சுவரில் பூசலாம். இந்தப் பூச்சு அளவு 6 மில்லி மீட்டர் கனத்திலிருந்து 20 மில்லி மீட்டர் கனம் வரை இருக்கலாம். கிப்சம் பூச்சுத் தனியாகப் பூச்சி இயந்திரம் இருக்கிறது. அது இல்லாமல் கைகளாலும் இதைப் பூச முடியும். பூச்சை மட்டமாக்குவதற்குப் பூச்சிக் கரண்டிகளைப் பயன்படுத்தலாம். பூச்சைச் சமதளமாக்க சாண்ட் பேப்பரைப் (sandpaper) பயன்பத்தலாம்.
ஜிப்சத்தின் நன்மைகள்
ஜிப்சம் பூச்சுக்கு அதிக அளவு தண்ணீர் தேவைப்படாது. சிமெண்ட் பூச்சுக்கு மண், சிமெண்ட் இரண்டையும் சேர்த்துக் கலக்க வேண்டும் என்பதால் இரண்டையும் கொள்முதல் செய்து எடுத்து வருவதற்காகப் போக்குவரத்துச் செலவு உண்டு. இதில் ஜிப்சம் பிளாஸ்டரை மட்டும் தண்ணீரில் கலந்தால் போதுமானது. சிமெண்ட் பூச்சைக் காட்டிலும் இது சிறந்த பிடிப்புத் தன்மை கொண்டது. பூச்சு பளபளப்புடன் இருக்கும். அந்தக் கால முறைப்படி வீட்டுக்குள் வெள்ளை நிறப்பூச்சை விரும்புபவர்கள் இதன் மேலே வண்ணம் அடிக்கத் தேவை இல்லை.
மேலும் இந்த பிளாஸ்டர், பூசிய கால் மணி நேரத்தில் பிடித்துக்கொள்ளும். சிமெண்ட் பூச்சைப் போல இதைத் தண்ணீர் ஊற்றி உலர்த்த வேண்டிய அவசியமும் இல்லை. பூச்சு வேலைக்குக் குறைந்த அளவு நேரமே ஆகும். இதனால் பொருள் செலவை பெருமளவு குறைக்க முடியும். மேலும் பூச்சு முடிந்த சில நாட்களிலேயே சுவருக்கு வண்ணம் பூசிக் கொள்ளலாம்.
ஜிப்சம் இந்தியாவில் இப்போது பரவலான பயன்பாட்டுக்கு வந்துகொண்டிருக்கிறது. செயிண்ட் கோபைன் போன்ற பெரிய நிறுவனங்களிலிருந்து சிறிய நிறுவனங்கள்வரை பலவும் ஜிப்சம் பிளாஸ்டரை உற்பத்திசெய்கிறார்கள். 25 கிலோ பை ஜிப்சம் பிளாஸ்டர் விலை ரூ.160-லிருந்து சந்தையில் கிடைக்கிறது.