செ
ன்னை பிராட்வேயின் சந்தடி மிகுந்த தெருக்களில் ஒன்று டேவிட்சன் தெரு. சரக்குகளை ஏற்றவும் இறக்கவும் மூன்று சக்கர வண்டிகள் குறுக்கும் நெடுக்குமாக விரைந்து கொண்டிருக்கின்றன. நடைமேடை வாசிகள் பலர் குடும்பத்துடன் இந்தத் தெருவில் வசிக்கிறார்கள். இதே தெருவில்தான் சென்ற நூற்றாண்டின் சாட்சியாக நிற்கிறது பாட்சா திரையரங்கம். தமிழ்நாட்டில் புரொஜெக்டர் முறைத் திரையிடல் செயல்பாட்டில் உள்ள ஒரே திரையரங்கமான இதற்கு வயது 102.
க்யூப், டிஜிட்டல், 3-டி, ஐ-மேக்ஸ் என்று திரை தொழில்நுட்பங்கள் பல்வேறு பரிமாணங்களைப் பெற்றுவிட்ட சூழலில் திரையரங்குகளின் நகரமாகிய சென்னை நகரில் ஒரு காலத்தில் புகழ்பெற்று விளங்கிய திரையரங்குகள் எல்லாம் இடிக்கப்பட்டு, வணிக வளாகங்களாகவும், வாகனங்கள் நிறுத்தும் இடங்களாகவும் மாறிவரும் வேளையில், மினர்வா என்று அழைக்கப்பட்ட இந்தத் திரையரங்கம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.
டபிள்யூ.எச். மர்ச் என்ற ஆங்கிலேயரால் 1916-ல் நேஷனல் தியேட்டர் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இத்திரையரங்கம் அப்போதைய திரையரங்குகளைப் போல் தரை தளத்தில் அல்லாமல் கட்டிடத்தின் முதல் தளத்தில் அமைந்திருக்கிறது. அந்தக் காலகட்டத்தில், ‘மாகாணத்திலேயே மிகவும் நவீனமான, குளிரூட்டப்பட்ட’ திரையரங்கம் என்று விளம்பரப்படுத்தப்பட்டிருக்கிறது.
“எல்லாத் தரப்பு மக்களுக்குமான திரையரங்கம் என்பதை ஒரு அரசியல் செய்தியாக பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு உணர்த்தவே நேஷனல் தியேட்டர் என்று பெயரிடப்பட்டிருக்கலாம்” என்று ஸ்டீபன் புட்னம் ஹ்யூக்ஸ் என்கிற ஆய்வாளர் இந்த திரையரங்கு பற்றி எழுதியிருக்கிறார்.
1930களில் இத்திரையரங்கை வாங்கிய டாண்டேகர் குடும்பத்தினர், மினர்வா என்று பெயரிட்டனர். பாரமவுண்ட் கம்பெனியுடனான நீண்ட கால குத்தகையில் ஆங்கிலப் படங்கள் அதிகம் திரையிடப்பட்டிருக்கிறது. ‘War and Peace’ திரையிடலின்போது பார்வையாளர்கள் ரஷ்யாவின் குளிரை உணர்ந்து படத்துடன் முழுமையாக ஒன்ற வேண்டும் என்பதற்காக அரங்கின் குளிர்ச்சி அளவு அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்ப் படங்களும் அவ்வப்போது திரையிடப்பட்டிருக்கின்றன.
‘பராசக்தி’ படத்தின் சென்சார் திரையிடல் இங்குதான் நடந்தது . அக்காலகட்டத்தின் நட்சத்திரங்கள் அனைவரும் இங்கே வந்திருக்கிறார்கள். படம் ஆரம்பித்த பிறகு வரும் சிவாஜி, கூட்டம் கூடிவிடும் என்பதால் க்ளைமேக்ஸுக்கு முன்பே கிளம்பிச் சென்றுவிடுவாராம். ஜவாஹர்லால் நேரு இங்கே வந்திருக்கிற செய்தி இத்திரையரங்கத்தின் புகழைப் பறைசாற்றுகிறது.
70களில் மல்டி-ஸ்க்ரீன் திரையரங்களின் வரவு அதிகரிக்கவே இதுபோன்ற பழைய, ஒற்றைத் திரையரங்குகளுக்கு மவுசு குறைய ஆரம்பித்தது. ஆனாலும், படங்களைத் திரையிட்டுத் தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறது. 2006-ல் இத்திரையரங்கை வாங்கிய பட விநியோகஸ்தரான எஸ்.எம். பாட்சா, தன் பெயரையே அதற்கு வைத்திருக்கிறார். ஆபரேட்டர் உள்பட நான்கு பணியாளர்களைக் கொண்ட இத்திரையரங்கில் தினமும் நான்கு காட்சிகள் திரையிடப்படுகின்றன.
தன் சொந்த சேகரிப்பில் இருக்கும் சுமார் 150 பழைய படங்களைத் திரையிட்டு வருகிறார் பாட்சா. ஒரு காலத்தில் சமூகத்தின் உயர்மட்டத்தில் இருந்தவர்கள் படம் பார்த்த இத்திரையரங்கில் தற்போது விளிம்புநிலை மக்களும் கூலித் தொழிலாளிகளும்தாம் முதன்மைப் பார்வையாளர்கள். விரைவில் இந்தத் திரையரங்கைப் புதுப்பிக்கவுள்ளதாகவும் பாட்சா சொல்கிறார். அப்போது இதன் பார்வையாளர்கள் மாறக்கூடும்.