உலகின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வந்துள்ளார். ரியல் எஸ்டேட் இவரது முக்கியமான தொழிலாக இருந்தாலும், இவர் பல தொழில்களில் ஈடுபட்டுவருகிறார்.
மும்பையில் நடந்த கட்டிடத் தொடக்க விழா ஒன்றில் கலந்துகொண்ட அவர், மும்பை நகரத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, “இது மிகவும் துடிப்பான, வளர்ச்சியுள்ள இடம். இதன் மேல் கவனம் எடுத்துக்கொள்வேன்” எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் தொடர்ந்து மும்பை ரியல் எஸ்டேட் தொழில் முதலீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
“என்னிடம் நிறைய பணம் உள்ளது. அதனால் இங்கு இந்திய ரியல் எஸ்டேட்டில் அதை முதலீடுசெய்வேன். ஆனால் முழுவதையும் அல்ல” என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரம்புடன் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள அவரது மூத்த மகனான டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர், “சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஐந்து நட்சத்திர விடுதிகள் அமைக்க பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம்” எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தப் பேச்சு தொய்வுற்றிருக்கும் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் தொழிலுக்குப் புத்துயிர் அளிப்பதாக உள்ளது. இதனால் கட்டிட வேலைவாய்ப்புகளும் தமிழகத்தில் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரம்ப் நிறுவனம் நேரடியாக இந்தியாவில் எந்த ரியல் எஸ்டேட் முதலீட்டிலும் ஈடுபடவில்லை. இந்தியக் கட்டுமான நிறுவனங்களுடன் கூட்டுடன் இப்போது மும்பையிலும் புனேயிலும் இரு குடியிருப்புத் திட்டங்களில் ட்ரம்ப் நிறுவனம் ஈடுபட்டுவருகிறது.
மும்பையில் லோதா குரூப் நிறுவனத்துடன் இணைந்து ‘ட்ரம்ப் டவர்’ என்னும் ஒரு சொகுசு குடியிருப்பு அடுக்ககத்தை உருவாக்கிவருகிறது. மும்பை நகரின் மையப் பகுதியில் உருவாகிவரும் இந்தக் கட்டிடம் 75 மாடிக் கட்டிடமாகும். அதுபோல பூனேயில் பஞ்சீல் ரியாலிட்டி நிறுவனத்துடன் கைகோத்துள்ளது ட்ரம்ப் நிறுவனம். இங்கு 25 மாடிகளில் சொகுசு வீடுகளை உருவாக்கிவருகிறது.
“மூன்று வடங்களுக்கு முன்பு இந்தியாவில் முதலீடு என்பது கடினமான காரியமாக இருந்த்து. ஆனால் இப்போது அப்படி இல்லை. எனக்குத் தைரியம் வந்திருக்கிறது. அமைந்திருக்கும் புதிய அரசு இதற்குச் சாதகமாக இருக்கும்” என்கிறார் ட்ரம்ப்.
6 ஆயிரம் சதுர மீட்டரில் புனேயில் அமையவுள்ள திட்டத்தில் ஒரு வீட்டின் விலை 2.5 மில்லியன் அமெரிக்க டாலர். ஏற்கனவே இரு பாலிவுட் பிரபலங்கள் இந்தத் திட்டத்தில் வீடுகளை வாங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தத் திட்டம் 2015-ல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையில் பரேல் பகுதியில் கிட்டத்தட்ட 17 ஏக்கர் நிலம் ட்ரம்ப் – லோதா குடியிருப்பு திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலம் டிஎல்ஃப் நிறுவனத்திடம் இருந்து 2,727 கோடி ரூபாய் பணத்தில் வாங்கப்பட்டுள்ளது.
320 சொகுசு அடுக்கக வீடுகள் உருவாக்கப்பட உள்ளன. மூன்று, நான்கு, ஆறு படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள இந்த வீட்டின் ஒரு சதுர அடியின் விலை 40 ஆயிரம். ஒரு வீட்டின் விலை 9 கோடியில் இருந்து 18 கோடி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 100 வீடுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன எனச் சொல்லப்படுகிறது.
ட்ரம்ப் நிறுவனம் இந்தியா மட்டுமல்லாது தென்கொரியா, பிலிப்பைன்ஸ், சீனா ஆகிய நாடுகளிலும் தங்கள் தொழிலை விவரித்துவருகிறது.