சொந்த வீடு

வாழ்க்கை, வண்ணம்: மதுரை சந்திப்பு - காவிய நகரின் ஓவிய நிலையம்

செய்திப்பிரிவு

‘நிலைய ஓவியம்’ (Station Art) என்கிற புதிய பாணி ஓவியக் கலை இந்தியாவில் சமீபகாலமாகப் பிரபலமடைந்துவருகிறது. தன்னார்வலர்களின் முனைப்பாலும் அரசாங்கத்தின் திட்டத்தாலும் பேருந்து நிலையம், ரயில் நிலையங்களின் பாழடைந்துபோன கேட்பாரற்ற பகுதிகள் ‘நிலைய ஓவிய’ங்களால் கலை நயத்துடன் புதுப்பிக்கப்பட்டுவருகின்றன.

தென்மதுரையின் வயல்வெளிகளை, மலைத் தொடர்களை, விவசாயிகளை, மலையடிவாரக் குடிசைகளை ஓவிய மேதை வின்சென்ட் வான்கோவின் தூரிகை கொண்டு ஓவியமாகத் தீட்டியது போன்ற பிரமிப்பை ஏற்படுத்துகிறது மதுரை ரயில்நிலையத்தில் தீட்டப்பட்டிருக்கும் அந்தச் சுவர் ஓவியம்.

மதுரை ரயில்நிலையத்தின் இரண்டாம் நடைமேடையில் உள்ள நகரும் படிக்கட்டுச் (escalator) சுவரில் 60 அடி உயரம், 23 அடி அகலத்துக்குப் பிரம்மாண்டமாகத் தீட்டப்பட்டுள்ளது இந்த ஓவியம். இதேபோல மதுரை ரயில் நிலையத்தின் முதலாம் நடைமேடையில் உள்ள குளிர்சாதன வசதிகொண்டப் பயணிகள் காத்திருப்பு அறையின் உட்புறச் சுவரில் ஒளிர்கிறது மீனாட்சித் திருக்கல்யாணச் சித்திரம்.

இத்தகைய கண்கவர் ஓவியங்களுக்காகவும் தூய்மையாகப் பராமரிக்கப்படும் ரயில் நிலையம் என்பதற்காகவும் தேசிய அளவிலான அழகிய ரயில் நிலையங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை இந்தாண்டு பிடித்திருக்கிறது மதுரை ரயில் நிலையம்.

மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா திட்டத்தின்’ கீழ் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களைச் சுகாதாரமாகப் பராமரிக்கும் வகையில் ‘தூய்மையான ரயில் தூய்மையான இந்தியா’ திட்டம் 2015-ல் தொடங்கப்பட்டது.

தென்னக ரயில்வே உட்பட 16 ரயில்வே மண்டலங்களில் உள்ள 407 ரயில் நிலையங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. இந்த ஆண்டு தூய்மையோடு அழகியலுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டு ‘இந்தியாவின் அதிக அழகு’ என்ற தலைப்பில் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டது.

11 ரயில்வே மண்டலங்களைச் சேர்ந்த 62 ரயில் நிலையங்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில் மொத்தம் ஏழு ரயில் நிலையங்கள் தேசத்தின் அழகிய ரயில் நிலையங்களாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவின் சந்திராபூர், பலர்ஷா ஆகிய இரண்டு ரயில் நிலையங்களும் முதலிடத்தைப் பிடித்துத் தலா 10 லட்சம் ரூபாய் பரிசு வென்றிருக்கின்றன.

மதுரை ரயில் நிலையமும் பிஹார் மாநிலத்தின் மதுபானி ரயில் நிலையமும் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்துகொண்டு தலா ரூ.5 லட்சம் வென்றிருக்கின்றன. காந்திதம், கோட்டா, சிகந்தராபாத் ஆகிய ரயில் நிலையங்கள் மூன்றாம் இடத்தைப் பிடித்துத் தலா ரூ.3 லட்சம் பரிசு பெற்றுள்ளன. இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்றுள்ள ஒரே தென்னிந்திய ரயில் நிலையம் மதுரை மட்டுமே.

இதுபோன்ற சுவர் ஓவியங்கள் பயணிகளைப் பெரிதும் கவர்கின்றன. கலை நயத்தோடு இருக்கும் அந்தப் பகுதியில் குப்பை போடுவது, சிறுநீர் கழிப்பது போன்ற அலட்சியமான செயல்களும் இயல்பாக அருகிவருகின்றன..

SCROLL FOR NEXT