வீ
ட்டுக்குத் தளமிட இப்போது புதிய புதிய முறைகள் வந்துவிட்டன. டைல், மார்பிள், கிரானைட் போன்ற பொருள்களைப் பயன்படுத்தித் தளமிடும் வழக்கம் இப்போது பரவலாக இருக்கிறது. ஆனால் தொடக்கக் காலத்தில் ரெட் ஆக்ஸைடு தரைதான் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுவந்தது. டைல், கிரானைட் போன்றவை ரெட் ஆக்ஸைடு தரையைவிடப் பளபளப்பானவை. ஆனால் ரெட் ஆக்ஸைடுதான் நமக்கு ஆரோக்கியமானது எனச் சொல்லப்படுகிறது. எல்லாத் துறைகளிலும் பழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் சூழலில் ரெட் ஆக்ஸைடுக்கும் இப்போது புதிய தேவை எழுந்துள்ளது.
ரெட் ஆக்ஸைடு தயாரிப்பது மிக எளிது. ஒரு பங்கு சிமெண்ட், மிருதுவான மணல் ஆகியவற்றுடன் ஒரு பங்கு ரெட் ஆக்சைடு சேர்த்து நன்றாகக் குழைக்க வேண்டும். இதைத் தரைத் தளத்தில் பூச வேண்டும். ஒரு பங்கு ஆக்சைடுக்கு மூன்று பங்கு சிமெண்ட் பயன்படுத்தினால் கருஞ்சிவப்பு நிறத்துடன் தரை இருக்கும். சிமெண்டை அதிகரிக்கும்போது வெளிர் சிவப்பாகும். வெள்ளை சிமெண்டையும் பயன்படுத்தலாம். ஆனால் வெள்ளை சிமெண்ட் பயன்படுத்தும்போது கவனம் தேவை. பூசிய பிறகு ஒரு துண்டைப் பயன்படுத்தி பாலீஷ் செய்வார்கள்.
முறையானபடி உருவாக்கப்படும் ரெட் ஆக்சைடு தரை உறுதியானதாக இருக்கும். சிறு விபத்தால் அவ்வளவு சீக்கிரம் உடையாது. நீண்ட காலம் பளபளப்பாகவும் இருக்கும். ரெட் ஆக்சைடு தரைகளைக் கொண்ட பழைய கட்டிடங்கள் ஐம்பது ஆண்டுகளைத் தாண்டியும் அதே பளபளப்புடன் இருப்பதை இன்றும் காணலாம். தற்போதும் ஆக்சைடு தரைக்கான மூலப்பொருட்களின் விலை மலிவுதான். அதனால் மற்ற டைல், மார்பிள் தரைகளைக் காட்டிலும் இதை உருவாக்கக் குறைவான தொகையே ஆகும்.
ஆக்ஸைடு தரை அமைத்த பிறகு, அடுத்த நாளிலிருந்து இரண்டு மூன்று மணி நேரங்களுக்கு ஒரு முறை தளத்தில் தண்ணீரைத் தெளிக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில், அதாவது ஒரு நான்கு நாள்களுக்கு தண்ணீர் தெளிக்கும் நேரம் தவிர மற்ற நேரம் யாரும் தளத்தில் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.