மி
ன்சாரம் இல்லாமல் நம்மால் ஒரு நிமிடம்கூட இருக்க முடியாது. சிறிய அளவிலான மின்தடைக்கே நமக்கு உயிர் போய் உயிர் வருகிறது. அப்படி நாம் பயன்படுத்தும் மின்சாரத்துக்கான கட்டணத்தைக் குறிப்பிட்ட காலத்துக்குள் மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்று கட்டுவதில் பல சிரமங்கள் இருக்கலாம். இந்தச் சிரமத்தைக் குறைப்பதற்காக வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் கட்டணத்தைச் செலுத்தி சிரமத்தை வெகுவாகக் குறைத்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்துவதற்காக மட்டுமல்லாமல் மின்சார வாரிய இணையதளத்தில் நமது கணக்கைத் தொடங்குவதன் மூலம் நமது மின்பயன்பாட்டைக் கண்காணித்துக் கொள்வதோடு, மின் கட்டணமும் செலுத்திக்கொள்ளலாம். மேலும் எப்போது வேண்டுமானாலும் நாம் செலுத்திய கட்டணத்துக்கு ரசீதையும் தரவிறக்கம்செய்துகொள்ள முடியும். மின்கட்டணம் தொடர்பாகவோ மின்விநியோகம் தொடர்பாகவோ புகாரும் அளிக்கலாம்.
முதலில் http://www.tnebnet.org/awp/login என்ற மின்சாரவாரிய இணையதளத்துக்குச் செல்ல வேண்டும். அந்த இணைய தளத்தில் பயனியர் பெயர் (Username) மற்றும் கடவுச் சொல் (Password) என்ற கட்டத்துக்கு கீழ் புதிய பயனியர் என்ற (New User?) (1) என்ற தேர்வு இருக்கும். அதைத் தேர்வுசெய்துகொள்ள வேண்டும். தேர்வுசெய்ததும் புதிய பயனியர் பதிவு (
2) என்ற பக்கத்துக்குச் செல்லலாம். அங்கு புதிய இணைப்புக்கான பதிவா? அல்லது ஏற்கெனவே உள்ள இணைப்புக்கான பதிவா? என்று கேட்கும், அதில் நாம் ஏற்கெனவே உள்ள இணைப்புக்குத்தான் என்றால் அதைத் தேர்வு செய்து உள்ளே செல்ல வேண்டும்
(3). பிறகு அந்தப் பக்கத்தில் பகுதி (Region) எண், பகுதியின் பெயர் மற்றும் நடவடிக்கை (Action) என்ற மூன்று காலமாகப் பிரிக்கப்பட்டிருப்பதில்
(4) நமது பகுதி எண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பகுதி எண் என்பது நாம் ஏற்கெனவே கட்டியுள்ள மின்கட்டண ரசீதில் 05139005193 என்று 10 அல்லது 12 இலக்க எண்ணாக இருக்கும் அதில் முதலில் உள்ள இரண்டு எண்கள்தான் நமது பகுதி எண். அந்த எண்ணை நாம் தேர்ந்தெடுத்து உள்ளே சென்று, அங்கு நமது மின்கட்டண இணைப்பு எண்ணைக் கொடுக்க வேண்டும். இங்கு இணைப்பு எண்ணைக் கொடுக்கும்போது பகுதி எண் இல்லாமல் மற்ற எண்களைச் சரியாக அளிக்க வேண்டும். மின் இணைப்பு எண்ணைக் கொடுத்து
(5) கீழே உள்ள விவரங்களைச் சரிபார்க்கவும் (Check detail) என்பதைத் தேர்வு செய்தால் நாம் எந்த மின்இணைப்புக்கான எண்ணைக் கொடுத்துள்ளோமோ அந்த இணைப்புக்குரிய முகவரி கீழே தெரியவரும்
(6). அந்த முகவரி சரியானதுதானா என்பதை உறுதி செய்த பின்பு முகவரிக்குக் கீழே உள்ள உறுதிப்படுத்து (Confirm) என்ற பட்டனைத் தேர்வு செய்ய வேண்டும். அடுத்ததாக புதியதாக ஒரு பக்கம் திறக்கும் அதில் ஏற்கெனவே நாம் சரிபார்த்த நமது மின்கட்டண முகவரியும் அதற்குக் கீழே ஒரு படிவமும் தோன்றும்.
(7) அந்தப் படிவத்தைக் கவனமாக நிரப்ப வேண்டும். இதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைச் சரியாகப் பூர்த்தி செய்ய வேண்டும். கட்டாயமாக நிரப்பப்பட வேண்டியவை என்பவை சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டிருக்கும். அவை பெயர், ஈமெயில் முகவரி, கடவுச் சொல் மற்றும் கடவுச் சொல்லை மீண்டும் ஒரு முறை உள்ளீடு செய்ய வேண்டும். (கடவுச்சொல்லில் எழுத்துக்களும் எண்களும் மட்டுமே இடம் பெற வேண்டும். சிறப்புக் குறியீடுகளான $,%,& போன்றவை பயன்படுத்த கூடாது).
இந்த கடவுச் சொல்லை நினைவில் வைத்துக்கொள்ளுமாறு இருக்க வேண்டும், இல்லையென்றால் அதைத் தங்களின் டைரியில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் இதைப் பூர்த்தி செய்த பின்பு ஆணா? பெண்ணா? திருமண நிலை, மற்றும் நமது வேலை தொடர்பான விவரங்களைக் கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு நமது வீட்டு முகவரி, பின்கோடு, மாநிலம், நாடு, தொலைபேசி எண் மற்றும் அலைபேசி எண் அளிக்க வேண்டும்.
(8) தாங்கள் பதிவு செய்யும் மின் இணைப்பானது அலுவலகத்துக்கு உரியது என்றால் அதற்குக் கீழே உள்ள அலுவலக முகவரி என்பதைத் தேர்வு செய்தால் அதற்கு கீழே வரும் கட்டங்களில் அலுவலகம் தொடர்பான விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். பிறகு திரையில் தெரியும் எழுத்துக்களைச் (Captcha) சரியாக அதற்குரிய இடத்தில் உள்ளீடு செய்து சமர்ப்பிக்க (Submit) என்ற ஐகானை அழுத்தினால் ஒரு புதிய திரை தோன்றும்.
(9) அதில் நமது ஈமெயில் முகவரிக்கு நமது கணக்கைச் செயல்படுத்தும் இணைப்பு வழங்கப்பட்டிருக்கும் தகவலைத் தெரிவித்திருக்கும்.
நமது ஈமெயிலுக்குச் சென்று அந்த லிங்க்கை அழுத்தினால் நமது கணக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு நேரடியாக மின்சார வாரிய இணையதளப் பக்கம் திறக்கும். அந்தப் பக்கத்தில் நாம் நமது பயனீயர் பெயர் கேட்கும் இடத்தில் நீங்கள் அளித்த உங்கள் மின் இணைப்பு எண்ணை (பிராந்திய எண் இல்லாமல்) அளித்து, பின்பு பூர்த்தி செய்த படிவத்தில் கொடுக்கப்பட்ட கடவுச் சொல்லை அளித்தால் நாம் இணையதளத்துக்குள் செல்லாம். அதில் எப்படிக் கட்டணம் செலுத்தலாம் என்பதைப் பார்ப்போம்.
தொடரும்...