கா
தலர் தினத்தை வீட்டில் கொண்டாட நினைப்பவர்கள் இப்போது அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதனால், காதலர் தினத்தை வரவேற்பதற்கு ஏற்றவகையில் வீட்டை வடிவமைக்க பல புதுமையான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். பெரிதும் மெனக்கெடாமல் காதலர் தின அலங்காரத்தை எளிமையாகச் செய்வதற்கான சில ஆலோசனைகள்…
செயற்கை மலர்களை வைத்து இதய வடிவத்தில் மாலை (wreath) உருவாக்கி அவற்றை வரவேற்பறைச் சுவற்றில் ஒட்டவைக்கலாம்.
சுவாரசியமான காதல் வாசகங்கள் பதிக்கப்பட்ட குஷன்களை சோஃபாவிலும் நாற்காலிகளில் வைக்கலாம். சிவப்பு, வெள்ளை போன்ற வண்ணங்களில் குஷன்களைத் தேர்ந்தெடுப்பது பொருத்தமாக இருக்கும்.
காதலர் தினக் கொண்டாட்டங்கள் சாக்லெட் இல்லாமல் முழுமையடையாது. அதனால், சாப்பாட்டு மேசைகளை சாக்லெட் பாட்டில்களை வைத்து அலங்கரிக்கலாம்.
பிரம்மாண்டமான அலங்காரத்தை விரும்புபவர்கள், சாப்பாட்டு மேசையின் பின்னணி சுவரில் அழகான அடர் சிவப்பு வண்ண கைக்குட்டைகளைவைத்து இதய வடிவத்தை வடிவமைக்கலாம். அதைச் சுற்றி ஒரு ஃப்ரேமை வடிவமைத்துவிட்டால், அது கலைநயமிக்க பொருளாக மாறிவிடும்.
இதய வடிவத்திலான மிட்டாய்களை (candy) வைத்து ஒரு பூங்கொத்தை பூச்சாடியில் வடிவமைக்கலாம். இதை அறையின் பிரதான மேசையின்மீது வைக்கலாம்.
வீட்டில் இருக்கும் கண்ணாடி பாட்டில்களின் (Mason Jars) மீது மினுமினுக்கும் ‘கிளிட்டர் காகிதத்தை ஒட்டி அதற்குள் மெழுகுவர்த்திகளை ஏற்றிவைக்கலாம்.
சீட்டுக் கட்டின் இதய வடிவ அட்டைகளைச் சேகரித்து, அதைத் தோரணமாக அறைகளில் கட்டலாம்.
‘காதல்’ என்ற சொல்லில் இடம்பெற்றிருக்கும் வார்த்தைகளை ‘மோனோகிராம்’(Monogram) போல பூக்களை வைத்து உருவாக்கி அறையில் வைக்கலாம்.
தோட்டத்திலிருந்து சில காய்ந்த செடிக்கிளைகளைச் சேகரித்து அவற்றுக்கு வெள்ளை நிறச் சாயம் பூசவும். அந்தக் கிளைகளில் வண்ணக் காகிதங்களில் இதய வடிவத்தைச் செய்து அதில் ஒட்டவும். இவற்றை ஒரு சாடியில் போட்டுவைத்தால், காதல் மரம்போல காட்சித் தரும்.
பலூன்களைவைத்து இதய வடிவத்தில் பெரிய மாலைச் செய்து அதை ஒளிப்படம் எடுத்துகொள்வதற்கான ஃப்ரேம்மாக மாற்றலாம்.
வீட்டில் பழைய ‘ஸ்வெட்டர்கள்’ பயன்படுத்தாமல் இருந்தால், அவற்றை வைத்து இதய வடிவத்திலான குஷன்களை எளிமையாக உருவாக்கமுடியும். இந்தக் குஷன்களையும் சோஃபாக்களில் பயன்படுத்திகொள்ளலாம்.
பயன்படுத்தாமல் சேகரித்துவைத்திருக்கும் சட்டை பட்டன்களுக்கு சிவப்பு வண்ணமடித்து அவற்றை இதய வடிவத்தில் ஒரு ஃப்ரேமில் ஒட்டி சுவரில் மாட்டலாம்.