சொந்த வீடு

ரியல் எஸ்டேட் செய்திகள்: வீடு வாங்க இளைஞர்கள் ஆர்வம்

செய்திப்பிரிவு

நகர்ப்புற வீட்டு வசதிக்கு அதிகத் தொகை ஒதுக்கீடு

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதிக்கான ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது. சென்ற 2017-2018-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதிக்கு 40, 617 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2018-19-ம் ஆண்டுகளுக்கான இந்த நிதிநிலை அறிக்கையில் 41, 765 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது சென்ற நிதிநிலை ஒதுக்கீட்டின் உடன் ஒப்பிடும்போது 3 சதவீதம் அதிகம். அதுபோல ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டையும் இந்த ஆண்டு 54.2 சதவீதம் அதிகப்படுத்தியுள்ளது. மத்திய வீட்டுவசதித் துறை இணை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இதைத் தெரிவித்தார்.

சர்வதேச அளவில் இந்தியர்கள் சொத்து வாங்குவது அதிகரிப்பு

சர்வதேச ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனமான சொதேபி, இந்த ஆண்டு மேற்கொண்ட ஆய்வின் முடிவு சர்வதேச அளவில் இந்தியச் செல்வந்தர்கள் முதலீடுசெய்வது அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து உலகின் முக்கியமான வர்த்தக மையமான துபாய் ரியல் எஸ்டேட்டில் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

மேலும், மத்திய லண்டன் ரியல் எஸ்டேட்டிலும் இந்தியர்களின் கை ஓங்கியிருந்தது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு 6 பில்லியன் டாலர்களாக இருந்த இந்தியர்களின் முதலீடு இந்தாண்டு 7.8 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

வீடு வாங்க இளைஞர்கள் ஆர்வம்

ஹைதராபாத்தில் நடந்த கிரெடாய் இளைஞர் மாநாட்டில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின்படி இளைஞர் 82 சதவீதத்தினர் சொந்த வீடு வாங்கும் விருப்பத்துடன் இருக்கிறார்கள். இவர்களுள் 35 சதவீதத்தினர் ரியல் எஸ்டேட்டில் முதலீடுசெய்ய ஆர்வத்துடன் இருக்கிறார்கள். கிரெடாய்-சி.பி.ஆர்.இ. கூட்டாக வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கையின்படி 2020 ஆண்டுக்குள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 65 சதவீதத்தினர் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள் எனவும் அந்த அறிக்கை சொல்கிறது. 68 சதவீதத்தினர் தங்கள் பெற்றோருடன் இருப்பதை விரும்பவில்லை என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

நகரங்களின் வாழ்க்கைத் திறன் மதிப்பீடு

நகரங்களின் வாழ்க்கைத் திறனை ஆண்டுதோறும் மதிப்பீடுசெய்ய மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. நகர அமைப்பு, சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட 75 பிரிவுகளின் கீழ் இந்த மதிப்பீடு செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மத்திப்பீடு 116 நகரங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஆன்லைன் பத்திரப்பதிவில் தொடரும் சிக்கல்

கடந்த 12-ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆன்லைன் பத்திரப்பதிவு முறையைத் தொடங்கிவைத்தார். அனால் இந்த முறையை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவுசெய்யும்போது சர்வர் திணறிவிடுவதால் பத்திரப்பதிவு முடங்கி பத்திரப்பதிவுசெய்ய வந்தவர்கள் பாதிக்கப்பட்டார்கள்.

தொகுப்பு: விபின்

SCROLL FOR NEXT