சொந்த வீடு

ஒவ்வொரு அறையாக உங்கள் வீட்டை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது?

ரூஃப் அண்ட் ஃப்ளோர்

'ஆறு மாத காலமாக உங்களுக்குப் பயன்படாமல் ஒன்று இருக்குமேயானால், அது உங்களுக்கு தேவையற்றது, அதை விட்டொழியுங்கள்' என்கிறார் வாழ்க்கைப் பயிற்சியாளர் ஆதித்யா சென். வாழ்க்கையைப் பற்றி சென் குறிப்பிட்டாலும் இதை நம் வீட்டிற்கும் பொருத்திப் பார்க்க முடியும். நம் எல்லோர் வீட்டிலும் தேவையற்ற பொருட்களை சேர்த்து வைத்திருப்போம். சில பொருட்களைப் பயன்படுத்தாவிட்டாலும், சோம்பேறித்தனத்தால் இவற்றை அகற்றாமல் சேர்த்தே வைத்திருப்போம். பெரும்பாலும் எங்கே தொடங்குவது என்ற சிரமமே இதற்கு காரணமாக இருக்கும். ஒவ்வொரு அறையாக மேற்கொண்டால், சுலபமாக வீட்டை ஒழுங்குபடுத்தி விடலாம்.

குளியலறை

ஆண்களுக்கென்று பிரத்யேகமான அழகு சாதனப் பொருட்கள் வந்த பின், குளியலறை இன்னும் அதிக நெருக்கடியாகவே மாறிவிட்டது. இந்த அறையை ஒழுங்குபடுத்துதல் எளிது என்பதால் இங்கிருந்து தொடங்கலாம், காலியான ஷாம்பூ, கண்டிஷனர், பற்பசை, காலாவதியான தலைக்கான ஜெல் என அத்தனையும் முதலில் தூக்கி எறியுங்கள். கடந்த வருடம் நீங்கள் பரிசாகப் பெற்ற உபயோகப்படுத்தாத சீர்படுத்தும் சாதனங்கள் (grooming kit) ஆகியவற்றை தேவையானவர்களுக்கு பரிசாக அளியுங்கள்.

ஆண், பெண், குழந்தைகளுக்கென அவரவர் பொருட்களுக்கு தனித்தனி இடங்களை ஒதுக்குவது அறையின் அழகைக் கூட்டுதவதோடு மட்டுமின்றி தினந்தோறும் உங்களுக்கு தேவையானதை சுலபமாக எடுக்கவும் உதவும். குளியலறை மூலைகளில் வைப்பதற்கென பிரத்யேகமாக வரும் ஸ்டாண்ட் அல்லது சுவர்கள், கண்ணாடியின் மேல், தொட்டியின் அடியில் என இடத்திற்கேற்றார் போல் ஸ்டாண்ட் அமைத்து அழகுபடுத்தலாம்.

படுக்கையறை

பெரும்பாலான நேரத்தை நாம் படுக்கையறையில்தான் செலவிடுகிறோம், ஆழமான நிம்மதியான உறக்கத்திற்கு, அடைச்சல் இல்லாத சுத்தமான படுக்கையறை மிக அவசியம். வேலை தொடர்பான பொருட்களே நம் படுக்கை அருகில் அதிகம் இடம் பெற்றிருக்கும். மடிக்கணினி, காபி கோப்பை, சிகார் என உங்கள் படுக்கையறை இருக்குமானால், இவை அத்தனையும் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யுங்கள் என்பதே எங்களின் வேண்டுகோள். நீங்கள் படித்து முடித்த புத்தகங்களை மீண்டும் அதன் இடத்திலேயே திரும்ப வைத்து விடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

சமையலறை

சமைப்பதற்கான பாத்திரங்கள், உணவுப் பொருட்கள், மின் சாதனங்கள் என அதிக அளவிலான பொருட்கள் இந்த அறையில்தான் இருக்கும் என்பதால் இதை அடைப்பில்லாமல் சீராக வைத்திருப்பது சவாலே. எதை சீரமைக்க வேண்டும் அல்லது எந்த இடத்தை சரியாக்க வேண்டும் என்பதை முதலில் தீர்மானித்துப் பின் தொடங்குவது வேலையை சுலபமாக்கும்.

உதாரணதிற்கு குளிர்சாதனப் பெட்டியில் தொடங்கி, பின் மேல் அலமாரி, கீழ் பகுதி என பிரித்து ஒழுங்குபடுத்தலாம், விரைவில் காலாவதியாகப் போகும் உணவுப் பொருட்களை தனியாக அடுக்கி அவற்றை தினந்தோறும் உபயோகப்படுத்த ஏதுவாக அமைத்துக் கொள்ளலாம்.

வாழறை (Living Room)

இங்கு தான் அதிகமாக ஃபர்னிச்சர்கள் இடம் பெற்றிருக்கும். புத்தக ஷெல்ஃப் அல்லது தொலைக்காட்சி வைக்கும் இடத்தில் தான் பெரும்பாலும் மற்ற பொருட்களை ஒவ்வொரு வீட்டிலும் வைத்திருப்போம். அதுவும் சில சமயம் வெளியே தெரியும் படி அமைவதால் அழகாக இந்த அறையை வைத்திருப்பது சவாலானது. புத்தகத்தை அதன் இடத்திலேயே திரும்ப வைப்பது, ரிமோட்களை வைக்க தனி அமைப்பு என சின்னச் சின்ன விஷயங்களை மேற்கொண்டால், பராமரிப்பை எளிதுபடுத்தலாம். பொருட்களை வைப்பதற்கு அதிக இடம் இருக்கும் படியான ஷெல்ஃப் அல்லது அலங்கார வைப்புகள் ஆகியவற்றை வாங்குவதும் பராமரிப்பை இலகுவாக்க உதவும்.

நுழைவாயில், மாடிப்படிகள் மற்றும் பால்கனி

பால்கனிகளையும், நுழைவாயிலையும் இடுக்கின்றி பராமரிப்பது சவலானதே! நம்மில் பலர் காலணிகளை அப்படியே கழட்டி விட்டெறிவோம், நுழைவாயில் அருகில் காலணி ஸ்டாண்ட் வைத்து வீட்டில் உள்ள அனைவரும் ஒழுங்காக அடுக்கி வைக்கலாமே? வீட்டு சாவி, கார் சாவி ஆகியவற்றை அதற்கான ஸ்டாண்டில் உடனடியாக வைத்திட, கதவருகில் சாவிகளுக்கான ஸ்டாண்டை பொருத்திடலாமே? இந்த இடங்களில் தேவையில்லாதவை சேராத படி பார்த்துக் கொண்டாலே போதும். இதுபோன்ற சின்னச் சின்ன முயற்சிகள் நம் வீட்டை இலகுவாக ஒழுங்குபடுத்திட உதவும். வேண்டாதவற்றை சேர்க்காமல் இருந்தாலே வீண் அடைப்புகளை சுலபமாக அகற்றிட முடியும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

சந்தோஷத்துடன் ஒழுங்குபடுத்துங்கள்!

SCROLL FOR NEXT