வீ
ட்டுக் கடன் இல்லாமல் சொந்த வீடு இன்று சாத்தியமல்ல என்றாகிவிட்டது. அதனால் வீட்டுக் கடன் குறித்துத் தெரிந்து வைத்துக்கொள்வதும் அவசியம்தானே. வீட்டுக் கடனுக்காக வங்கிகள் தரும் வட்டி விகிதங்கள் வகை குறித்துப் பார்ப்போம். அவற்றில் மூன்று வகை உண்டு; நிலையான வட்டி, மாறுபடும் வட்டி, கலவை வட்டி.
வீட்டுக்கடன் வாங்கும்போது நிர்ணயிக்கப்படுகிற வட்டி குறிப்பிட்ட காலத்துக்கு (3 அல்லது 5 ஆண்டுகள்) மாறாமல் இருக்கிற வட்டியைத்தான் நிலையான வட்டி என்கிறார்கள். 3 அல்லது 5 ஆண்டுகளுக்குப் பிறகு (இது வங்கிக்கு வங்கி வித்தியாசப்படுகிறது) பணச் சந்தையில் நிலவுகிற வட்டி விகிதத்துக்குத் தகுந்தபடி நிலையான வட்டி விகிதமும் மாறுகிறது.
வீட்டுக் கடன் வட்டி உயர்ந்தாலும் 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிலையான வட்டியும் அப்போதுள்ள நிலைமைக்கு ஏற்றவாறு அதிகரிக்கும். உடனுக்குடன் வட்டி அதிகரிக்காது என்பது வீட்டுக் கடன் வாங்குவோருக்கு நன்மை.
பொதுவாக, மாறுபடும் வட்டி விகிதத்தைவிட நிலையான வட்டி விகிதம் அரை சதவீதம் அதிகம் என்பது இத்திட்டத்தில் உள்ள குறைபாடு.
இது ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒருமுறை அறிவிக்கும் கடன் கொள்கையில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படுவதை அல்லது குறைக்கப்படுவதைப் பொறுத்து மாறும் தன்மை உடையது. வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும் முழு காலத்துக்கும் ஒரே அளவு மாதத் தவணை (இ.எம்.ஐ.) இருக்காது. அவ்வப்போது சில நூறு ரூபாய் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். மாதச் சம்பளம் வாங்குபவர்கள் இந்த ஏற்ற இறக்கத்தைச் சமாளிக்க முடியுமானால் மாறுபடும் வட்டியைத் தேர்வு செய்யலாம்.