கு
டிசைப் பகுதிகளில் வசிப்போருக்கு மாற்று இடங்களில் அரசால் கட்டித் தரப்படும் வீடுகள், நகருக்குத் தொடர்பில்லாத இடங்களில் கட்டித் தரப்படுகின்றன. உதாரணமாக கண்ணகி நகர், செம்மஞ்சேரி குடியிருப்புகள். அங்கே போதிய போக்குவரத்து வசதி, பள்ளிகள், மருத்துவ வசதிகள் இல்லாததும், வீடு ஒருமுனையிலும் வேலை மறு முனையில் இருப்பதும் குடிசைவாசிகள் மீண்டும் தங்களின் பழைய வசிப்பிடத்துக்கே திரும்ப வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்துகின்றன.
இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில் மயிலாப்பூர் கொள்கை ஆராய்ச்சி மையம் (எம்.ஐ.பி.ஆர்.) கடந்த ஓராண்டாக ஆய்வுசெய்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், நகருக்குள்ளேயே குடிசைவாசிகளுக்கு இலவசமாகவும், குறைந்த வருவாய்ப் பிரிவினருக்குக் குறைந்த விலையிலும் வீடுகளைக் கட்டித் தருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நகரின் மையப் பகுதியில் காலி இடங்கள் அதிகம் இல்லை. அப்படி இருந்தாலும் அவை தனியார் வசம் இருக்கின்றன. நிலத்தின் விலை அதிகமாக இருப்பதால் குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு நகருக்கு உள்ளேயே அரசு சொந்த வீடு கட்டித்தர முடியாத நிலை உள்ளது. இதனால், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், குறைந்த வருவாய்ப் பிரிவினர், குடிசைவாசிகளுக்குப் புறநகர் பகுதியில் வீடு கட்டும் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டியுள்ளது” என எம்.ஐ.பி.ஆர். தலைவர் சிவகுமார் கூறுகிறார்.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் 2013 கணக்கெடுப்பின்படி சென்னையில் மட்டும் உள்ள 1,131 குடிசைப் பகுதிகள் உள்ளன. இதில், மொத்தம் 3.05 லட்சம் வீடுகளில் 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அந்தக் குடிசைப் பகுதிகளிலேயே அவர்களுக்கான குடியிருப்புகளைக் கட்டித் தர முடியும் என்கிறது இந்த நிறுவனத்தின் ஆய்வு.
இந்த ஆய்வுக்காக சென்னை கண்ணம்மாபேட்டையில் உள்ள குடிசைப் பகுதியை மாதிரியாகக் கொண்டு ஆய்வுசெய்துள்ளனர். அங்கு 400 சதுர அடி கொண்ட 1,000 குடியிருப்புகளைக் கட்ட இடம் உள்ளது. அந்தக் குடியிருப்புகளை ஒரு சதுர அடிக்கு ரூ.2,000 செலவில் கட்டினால் ரூ.83.4 கோடி கட்டுமானச் செலவாகும். அதுபோக, பத்திரப் பதிவு கட்டணம் உள்ளிட்ட செலவுகளுக்கு ரூ.12.59 கோடி செலவாகும். மொத்தமாக ரூ.95.89 கோடி செலவாகும்.
இந்தச் செலவை ஈடுகட்ட மொத்தமுள்ள 1,000 வீடுகளில் 400 வீடுகளைப் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்குக் குலுக்கல் முறையில் தலா ரூ.7 லட்சத்துக்கு விற்றால் அதன் மூலம் ரூ.28 கோடி கிடைக்கும். அரசு தனது பங்காகப் பத்திரப்பதிவுக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளான ரூ.12.59 கோடியை ஏற்றுக்கொள்ள வேண்டும். மீதமுள்ள ரூ.55.30 கோடியைப் பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (சி.எஸ்.ஆர்.) தொகையாகப் பெற்றால் போதும். இதன் மூலம் குடிசையில் வசிக்கும் 600 குடும்பங்களுக்கு இலவசமாக நகருக்கு உள்ளேயே வீடு கிடைக்கும் எனக் கணக்கிட்டுள்ளது இந்த ஆய்வு.
மேலும், ரூ.7 லட்சத்துக்கு வீடுகளை வாங்க முற்படுவோர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அதிகபட்சம் ரூ.6 லட்சம் கடனாகப் பெற முடியும். அதில் ரூ.2.50 லட்சம் வரை மானியமாக வழங்கப்படுகிறது. மீதமுள்ள ரூ.3.30 லட்சத்தை, மாதத் தவணை முறையில் ரூ.4,200 வீதம் அவர்கள் செலுத்தினால் போதும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமானால் கட்டிடங்களுக்கான எஃப்.எஸ்.ஐ. (Floor space index) குறைந்தபட்சம் 3-ஆக இருக்க வேண்டும்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலைத் துறைக்குச் சொந்தமாகக் கோயில் நிலம் காலியாக உள்ளது. அதைப் பயன்படுத்தி பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், குறைந்த வருவாய்ப் பிரிவினருக்குக் குடியிருப்புகளைக் கட்டி வாடகைக்கு அளிக்க முடியும். இந்தத் திட்டத்தில் நிலத்தை அரசே வைத்துக்கொள்ளலாம். அதோடு, குடியிருப்புகளைக் கட்டி வாடகைக்கு விடுவதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும். இந்த வருவாயைக் கோயில்களைப் பராமரிக்கப் பயன்படுத்த முடியும்.
இதற்காக சென்னை பசுமைவழிச் சாலையில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான 35 கிரவுண்ட் இடத்தை மாதிரியாக எடுத்துக்கொண்டு ஆய்வு செய்துள்ளனர். அதில், ஒரு சதுர அடிக்கு ரூ.2,000 செலவில் 640 குடியிருப்புகளைக் கட்ட முடியும். இதற்காகக் கட்டுமானச் செலவாக ரூ.51.28 கோடியும் பத்திரப் பதிவுக் கட்டணமாக ரூ.7.69 கோடியும் செலவாகும். மொத்தம் ரூ.58.97 கோடி செலவாகும்.
இதில் தமிழக அரசு 50 சதவீதக் கட்டுமானச் செலவையும் (25.64 கோடி) பத்திரப் பதிவுக் கட்டணத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மீதமுள்ள 25.64 கோடியைப் பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (சி.எஸ்.ஆர்.) மூலம் திரட்ட வேண்டும். அவ்வாறு நிதி அளிக்கும் நிறுவனங்களின் ஊழியர்களுக்குக் குறிப்பிட்ட சதவீதக் குடியிருப்புகளை வாடகைக்கு அளிக்கலாம். மீதமுள்ள குடியிருப்புகளைப் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ரூ.6,000 வாடகையில் அளிக்கலாம். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.4.60 கோடி அரசுக்கு வருவாய் கிடைக்கும்.
“சட்டப்படி பெருநிறுவனங்கள் சமூக சேவைக்காக ‘சி.எஸ்.ஆர்’ (Corporate Social Responsibility) தங்களது நிகர லாபத்தில் 2 சதவீதத்தை ஒதுக்க வேண்டும். அதன்படி தமிழகத்தில் கடந்த 2015-16-ம் ஆண்டில் மட்டும் ரூ.261 கோடி செலவிடப்பட்டுள்ளது.இதில் பெரும்பாலும் உடல்நலன், கல்வி, குடிநீர் வசதி, மாற்றுத்திறனாளிகள் நலன் உள்ளிட்டவற்றுக்கு அதிக தொகை செலவிடப்பட்டுள்ளது. வீடு கட்டுவதற்கு மிகக் குறைந்த அளவே பணம் செலவிடப்பட்டுள்ளது.
எனவே, அந்தத் தொகையை வீடு கட்டும் திட்டத்துக்குப் பயன்படுத்தினால் பல ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும். இந்த 2 வகை மாதிரித் திட்டங்களை நிறைவேற்ற நிலம் கையகப்படுத்துதல், நிதி திரட்டுதல் ஆகியவற்றில் தமிழக அரசின் ஒத்துழைப்பு மிக அவசியம். எனவே, இதுதொடர்பாக எங்களது ஆய்வு குறித்த அறிக்கையைத் தமிழக அரசிடம் விரைவில் சமர்ப்பிக்க உள்ளோம்” என்கிறார் மையத்தின் செயலாளரான பாலசுப்பிரமணியன்.
தேசிய அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பின் செயலாளர் ஆர்.கீதா கூறுகையில், “தற்போதுள்ள சென்னையில் உள்ள பல குடிசைப் பகுதிகள் தமிழ்நாடு குடிசைப்பகுதிகள் சட்டம் 1971-ன் படி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட குடிசைப் பகுதிகள்தான். எனவே, அரசு அந்தப் பகுதிகளை மேம்படுத்த வேண்டும். அதே இடத்தில் அல்லது அருகில் அவர்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும். அதைவிடுத்து அவர்களை அங்கிருந்து வெளியேற்றக் கூடாது. குடிசைவாசிகள் மக்கள் வேண்டாத மக்கள் இல்லை. அவர்கள்தான் நகரின் இயக்கத்துக்கு இதயமாக இருந்து கட்டுமான வேலை, வீட்டுவேலை போன்ற அடிப்படை வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, வேலைவாய்ப்பு எங்கு இருக்கிறதோ அங்குதான் தொழிலாளர்கள் வசிக்க முடியும். குடியிருப்புக்காக அவர்கள் வெகுதூரம் இடம்பெயர முடியாது. முன்பு தமிழக அரசே வாழ்விடத்திலேயே அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டிக்கொடுத்தது. மேலும், சென்னை நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடன் கொடுத்ததோடு, அடிப்படை வசதிகளைச் செய்துகொடுத்து பட்டாவுடன் வாழ்விடத்திலேயே வீடு கட்ட அனுமதித்தனர். தற்போது அந்தப் பகுதிகள் வளர்ச்சி பெற்றுள்ளன. எனவே, அதேபோன்ற திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்” என்கிறார்.
மயிலாப்பூர் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் அறிக்கை முடிவு, நகருக்குள்ளே குடிசை மாற்றுவாரியக் குடியிருப்புகள் கட்ட உரிய யோசனைகள் சொல்கிறது. மேலும் சென்னை வீட்டுத் தேவையை நிறைவேற்றவும் ஆக்கபூர்வமான பலயோசனைகளை முன்வைக்கிறது.