வாடகை வீட்டில் வசிக்கும் எல்லோருக்கும் சொந்த வீடு குறித்த கனவும் ஆசையும் இருக்கின்றன. ஆனால், சொந்த வீட்டை கட்டிக்கொள்ளும் வசதி எல்லோருக்கும் இல்லை. இந்நிலையில் , எல்லோரும் வீடு கட்ட உதவுகிறது மத்திய அரசு முன்னெடுத்துள்ள, ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டம். தமிழில் ‘அனைவருக்கும் வீடு’ திட்டம்.
இந்தத் திட்டம் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கும் வீடு வேண்டும் என்னும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக 2022-ம் ஆண்டுக்குள் நகர்ப்புற ஏழை மக்கள் அனைவருக்கும் அவர்களது அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான சொந்த வீட்டை அளிக்கும் திட்டம் இது என்று அரசு அறிவித்துள்ளது.
ஆவாஸ் யோஜனா திட்டத்தால் பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய பிரிவினர், குறைந்த வருவாய்ப் பிரிவினர் ஆகியோர் பயனடைவார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு அதிகபட்ச ஆண்டு வருமானம் ₹3 லட்சமாகவும், குறைந்த வருவாய் பிரிவினருக்கான ஆண்டு வருமானம் ₹3 முதல் ₹6 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கான சலுகைகள்
அதே நேரத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நடுத்தர வருவாய்ப் பிரிவினரும் பயனாளிகளாக உள்ளனர். இந்தத் திட்டத்தின் கீழ் கடனோடு இணைந்த வட்டி மானியம் என்கிற வட்டிச் சலுகையை நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்காக மத்திய அரசு அறிவித்துள்ளது.
“இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இது நடைமுறையில் இருக்கிறது என்றாலும், இது பரவலாக மக்களின் கவனம் பெறாமல் உள்ளது” என்கிறார் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வரதரஜன்.
குறிப்பாக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் வாங்கும் வீட்டுக் கடனில் அதிகபட்சம் ₹2.30 லட்சம் வரை வட்டி மானியம் கிடைக்கிறது என்கிறார். மேலும், “முதல் வீடு என்பது எல்லாருக்குமே உணர்வுபூர்வமான விஷயம்.
அதனால்தான் மத்திய அரசு ‘அனைவருக்கும் வீடு’ என்கிற இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதில் நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்பதுதான் சிறப்பு” என்றும் குறிப்பிடுகிறார்.
வழக்கமாகப் பொதுமக்கள் வாங்கும் வீட்டுக் கடனுக்கான நடைமுறைகள் அனைத்தும் இதற்குப் பொருந்தும் என்றாலும், அவர்கள் திருப்பிச் செலுத்தும்போது வட்டிக்குக் குறிப்பிட்ட சதவீத மானியத்தை அரசு அளிக்கிறது.
இதனால் வீட்டுக்கடன் சுமை பெருமளவு குறையும். நடுத்தர வருவாய்ப் பிரிவினரை இரண்டு பிரிவாக வகைப்படுத்துகிறது இந்தத் திட்டம்.
₹6 லட்சம் - ₹12 லட்சம் வரையான வருவாய்ப் பிரிவினருக்கு...
முதலாவது பிரிவினரின் ஆண்டு வருமானம் ₹6 லட்சம் முதல் ₹12 லட்சம்வரை இருக்க வேண்டும். இவர்கள் வாங்கும் வீட்டுக் கடனில், ₹9 லட்சத்துக்கு 4 சதவீத வட்டி மானியம் கிடைக்கும். ₹9 லட்சத்துக்கும் அதிகமான தொகைக்கு வழக்கமான வட்டி விகிதமும் ₹9 லட்சத்துக்கு 4 சதவீத வட்டி மானியமும் 20 ஆண்டுகளுக்குக் கணக்கிடப்படும்.
உதாரணத்துக்கு ₹12 லட்சம் வீட்டுக்கடன் வாங்குகிறார் என்றால், சிஎல்எஸ்எஸ் திட்டத்தின் (Credit linked subsidy scheme - CLSS) கீழ் அசலில் ₹2.35 லட்சம் தள்ளுபடியாகும். அதாவது மானிய கடன் ₹9 லட்சத்துக்கு 4 சதவீத வட்டியை 20 ஆண்டுகளுக்குக் கழித்தால் ₹2.35 லட்சம் மானியம் கிடைக்கும். பயனாளி ₹9.65 லட்சத்துக்கு மட்டும் வட்டி செலுத்தினால் போதும். இதனால் மாதத் தவணையில் ₹2,268 குறையும்.
₹12 லட்சம் முதல் ₹18 லட்சம்வரையான வருவாய்ப் பிரிவினருக்கு...
இதேபோல இரண்டாவது பிரிவினருக்கான ஆண்டு வருமானம் ₹12 லட்சம் முதல் ₹18 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் வாங்கும் கடனுக்கு ₹12 லட்சத்துக்கு 3 சதவீத வட்டி மானியம் கிடைக்கும். இதனால் வீட்டுக்கடன் அசலில் ₹2.35 லட்சம் தள்ளுபடியாகும். அதாவது ₹12 லட்சத்துக்கும் அதிகமான தொகைக்கு வழக்கமான வட்டி விகிதமும் ₹12 லட்சத்துக்கு 3 சதவீத வட்டி மானியமும் 20 ஆண்டுகளுக்குக் கணக்கிடப்பட்டு கழித்துக் கொள்ளப்படும். இதனால் மாதத் தவணை ₹2,200 வரை மிச்சம்.
அதாவது இந்த இரண்டு திட்டங்களிலும் 20 ஆண்டுகளுக்கான வட்டி மானியம் அசல் தொகையிலிருந்து கழித்துக் கொள்ளப்பட்டு, மீதமுள்ள தொகைக்கு மட்டும் வட்டி செலுத்தினால் போதுமானது.
நிபந்தனைகள்
# இந்தத் திட்டத்தில் கடன் பெற்றால் திரும்பச் செலுத்தும் காலம் 20 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
# புதிய வீடு கட்டுவது, வீடு வாங்குவது போன்றவற்றுக்கு மட்டுமே கடன் பெற முடியும். ஏற்கெனவே உள்ள வீட்டைப் புதுப்பிக்க இந்தச் சலுகை கிடைக்காது.
# கடன் தொகைக்கு ஏற்ப வீட்டின் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முதல் பிரிவில் சலுகை பெற வீட்டின் கட்டுமானப் பரப்பளவு 90 சதுர மீட்டராக (968.67 சதுர அடி) இருக்க வேண்டும்.
# இரண்டாவது பிரிவில் சலுகை பெற வீட்டின் கட்டுமானப் பரப்பளவு 110 சதுர மீட்டராக (1,184 சதுர அடி ) இருக்க வேண்டும்.
# கடன் அளவு நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும், குறிப்பிட்ட கடன் தொகைக்கு மட்டுமே வட்டிச் சலுகை கிடைக்கும். அதற்கு மேல் உள்ள தொகைக்கு வட்டி மானியம் கிடைக்காது.
# உதாரணத்துக்கு ₹20 லட்சம் கடன் வாங்கினால் அதிகபட்சம் ₹ 2.30 லட்சம் மட்டுமே சலுகை கிடைக்கும். ₹17.70 லட்சம் கடனுக்கு மாதத் தவணை செலுத்த வேண்டி
இந்தத் திட்ட செயல்பாட்டுக் காலம் ஓர் ஆண்டு என முதலில் நிர்ணயிக்கப்பட்டது. “தற்போது 2019-ம் ஆண்டு மார்ச்வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டிருக்கும் வீடுகளை வாங்கினாலும், நாம் புதிதாகக் கட்டினாலும் இந்தச் சலுகையைப் பெற முடியும்’’ என வரதரஜன் சொல்கிறார்.
ஏற்கெனவே தனிநபர் வருமான வரிச் சட்டப்படி, 80 சி பிரிவின் கீழ் வீட்டுக் கடனுக்கான அசல் தொகையில் அதிகபட்சம் ₹1.50 லட்சத்துக்கு வரிச்சலுகை கிடைக்கும். அதேபோல பிரிவு 24-ன் கீழ் செலுத்தும் வட்டியில் ₹2 லட்சத்துக்கு வரி விலக்கு பெற முடியும்.
இதனால் சிஎல்எஸ்எஸ் திட்டத்தின் வட்டி மானியம் போக மீதம் செலுத்தும் வீட்டுக் கடனுக்கு இந்த வருமான வரிச் சலுகைகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதையெல்லாம் கணக்கிட்டால் நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு சிஎல்எஸ்எஸ் திட்டம் அரிய வாய்ப்பாகவே அமைந்துள்ளது.