சொந்த வீடு

வீட்டு உள் அலங்காரத்தில் நவீனத்துவம்

முருகேஸ்வரி ரவி

லகில் தினந்தோறும் ஏற்பட்டுவரும் புதிய புதிய கண்டுபிடிப்புகள், ரசனை உணர்வில் ஏற்படும் மாற்றங்கள், சந்தையை ஆக்ரமித்துக்கொண்டிருக்கும் நவீனப் போக்குகள் போன்ற அம்சங்கள் உள் அலங்காரத்திலும் புதுமையைக் கொண்டு வந்துள்ளன. ஆனால், நம் அன்றாட வாழ்வில் இம்மாற்றங்களை நாம் உணர்வதில்லை. அதன் பாணி புத்தம்புதிதாகவும், ஆச்சர்யமூட்டுவதாகவும், கற்பனைக்கு எட்டாத புதிராககவும் திகழ்வதைக் காணலாம்.

அறைக்கலன்கள் என்பதைப் பொறுத்தவரை தேவைக்குத் தகுந்தவண்ணம் அவை மாறிக்கொண்டே வந்துள்ளன. விநோத வடிவங்கள், மென்மையான இழைநயம் மற்றும் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத ஆர்கானிக் பொருட்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து இவை தயாரிக்கப்படுகின்றன. பரபரப்பான உலகிலிருந்து விடுபட்டு ஓய்வெடுக்க மென்மையான பொருட்கள் கொண்ட ஒரு இதமான சூழலும் இவற்றால் நமக்குக் கிடைக்கிறது. இத்தகைய அறைக்கலன்கள் சொகுசு தந்தபோதும் அதிக இடத்தை ஆக்கிரமித்துக்கொள்கின்றனவே என்பது சிலரது கவலை. அவர்களின் கவலையைப் போக்கும்வகையில் மினிமலிஸ்டிக் என்னும் எளிய அறைக்கலன்களும் வடிவமைப்பும் தற்போது பிரபலமாக உள்ளன.

நகர்ப்புறங்களில் இடப்பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக உள்ளதால் வாடிக்கையாளரின் தேவைகள், விருப்பங்கள் மற்றும் தேர்வுகளைக் கவனமான மனதில் கொண்டு இவற்றை வடிவமைக்கின்றனர். வசதியான மற்றும் அழகிய புறத்தோற்றத்தையும் புறக்கணிக்காமல் டிவைடர் மூலம் அறையைப் பிரிப்பது, வரவேற்பறையையே படுக்கையறையாக எளிதில் மாற்றிக்கொள்வது என்ற வகையிலும் வடிவமைக்கின்றனர்.

வீட்டினுள்ளே செடிகள், செங்குத்தாகச் சுவர்களில் அமைக்கப்படும் தோட்டம், ஜன்னல் மற்றும் பால்கனி தோட்டம் தற்போதைய நாகரிகப் போக்கு. நாகரிக உலகைப் பெரிதும் ஆக்கிரமித்துள்ள பெரும்பான்மையான மின் சாதனங்களைச் சமன்படுத்துவதற்காகவே இந்தப் போக்கு என்று கூறலாம். பசுமையைப் பறைசாற்றும் இவை கண்ணுக்கு இதமளிப்பதுடன் வீட்டில் உள்ளோருக்கு ஒரு ஆரோக்கியமான சூழலையும் தருகின்றன.

அறைக்கலன்கள் மற்றும் அலங்காரப்பொருட்கள் ஆகியவற்றில் விண்டேஜ் வகை பெரிதும் விரும்பப்படுகிறது. வெளிப்படும் செங்கல் சுவர்கள், மீட்கப்பட்ட மரம் போன்றவை உள் அலங்காரத்தில் சொல்லும் கதைகள் ஏராளம். ரெட்ரோ ஸ்டைல் என்று கூறப்படும் பொருட்கள், பழமையைப் பறைசாற்றும் ஒளிப்படங்கள் மற்றும் ஓவியங்கள் தனித்துவம் மற்றும் நாகரிகம் நிறைந்தவையாகப் போற்றப்படுகின்றன. சுவர்களை அலங்கரிக்க பழைய கடிகாரங்கள் இந்த பாணியில்தான் பயன்படுகின்றன. பழமை வாய்ந்த நாகரிகங்களின் மோடிஃப் அல்லது பேட்டர்ன்களைப் பயன்படுத்திச் சுவர்களை அலங்கரிப்பதும் தற்போதைய நவீன பாணி ஆகும்.

அறைகளுக்கான வண்ணம் என்பதைப் பொறுத்தவரையில் ரோஜா இதழை ஒத்த மெல்லிய ரோஸ் வண்ணம், வெளிர் ஊதா நிறம், தகதகக்கும் தங்க நிறம், கோரல், பீஜ் மற்றும் மஞ்சள் போன்றவை சமீபத்தில் ஹிட் அடித்துக்கொண்டிருப்பவை. அடர் வண்ணங்களான கரும் பச்சை, ஒயின் சிவப்பு, அடர் பிரௌன் போன்றவையும் டிரெண்டில் உள்ளவைதான். வாடிக்கையாளர்களின் மனநிலை, தேவை, பல்வேறு கலாசாரங்களின் பின்னணி மற்றும் அவற்றின் கலவை போன்றவற்றைக் கருத்தில்கொண்டே உள் அலங்காரம் அமைக்கப்படுகிறது. கவனத்தை ஈர்த்து, மனதில் ஆழப் பதியும் வண்ணம் தனித்தன்மையுடன் வடிவமைக்கப்படும் உள் அலங்காரம் இளைஞர்கள் மற்றும் பெரியவர்களின் நீண்ட கால ஆசைகள், கனவுகள் போன்றவற்றைக் கணக்கில் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. இவ்வகை வண்ணங்கள் எந்த அறையையும் சௌகர்யமானதாகவும், மென்மையானயானதாகவும் ஆக்கிவிடும் சக்தி வாய்ந்தவை.

மறுசுழற்சி செய்யப்பட்டு உருவாக்கப்படுவை, இயற்கை, சுற்றுச்சூழலைப் பாதிக்காவண்ணம் உருவாக்கப்படுபவை மற்றும் ஆர்கானிக் பொருட்கள் கொண்டு அமைக்கப்படும் வீட்டு உள் அலங்காரம் ஆகியவை தொடர்ந்து முன்னிலைவகிக்கின்றன. நாட்பட்ட மரக்கிளை, செயற்கை சாயம் ஏற்றப்படாத இழைநயம் மிக்க துணிவகைகள் போன்றவை மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்படும்போது தனி அழகைத் தருகின்றன.

புதுமை மற்றும் சமகாலக் கணினித் தொழில்நுட்பங்கள் தற்போதைய வடிவமைப்பில் முக்கியப் பங்காற்றுகின்றன. கலை மற்றும் வடிவமைப்பு இரண்டையும் ஒன்றிணைத்து தனித்துவம் வாய்ந்த இருப்பிடங்கள் உருவாக்கப்படுகின்றன. புத்திசாலித்தனமான தொழில்நுட்பங்களால் வடிவமைக்கப்படும் உள் அலங்காரம் பழைய வீடுகளுக்கும் புதிய தோற்றப் பொலிவைத் தர வல்லவை. உள் அலங்காரம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் மாறி வந்தாலும், நிலைத்து நிற்பதென்னவோ இயற்கையுடன் இயைந்த நாகரிகப்போக்குகளே.

SCROLL FOR NEXT