தாழ்வாரம் இல்லாமல் அந்தக் காலத்தில் வீடுகள் இருந்ததில்லை, ஆனால், தாழ்வாரத்துக்கு இந்தக் கால வீடுகளில் இடமே இல்லை! பள்ளிக்கூடம், கல்லூரி, அரசு அலுவலகம், வணிக வளாகம் ஆகிய இடங்களில் மட்டும் அதிர்ஷ்டவசமாகச் சில தாழ்வாரங்கள் இக்காலத்தில் அமைந்துவிடுகின்றன.
வீடுகள் அனைத்தும் அடுத்தடுத்து வரிசையாகக் கட்டப்பட்ட காலத்தில், வீடுகளின் முகப்பில் ஓடுகளைச் சரித்து இறக்கி, தூண்களால் தாங்கிப் பிடிக்குமாறு கட்டுவார்கள். அந்த இடம்தான் தாழ்வாரம். மேலே கூரை, வீதிப் க்கம் திறந்தவெளி என்ற அமைப்புடன் தாழ்வாரம் அமைந்திருக்கும். பெரும்பாலான வீடுகளில் தாழ்வாரப் பகுதியில் திண்ணைகளும் அமைக்கப்பட்டன.
புதுச்சேரியில் எல்லா வீடுகளின் முன்புறத்திலும் தாழ்வாரம் அமைத்துக் கட்டுவதைப் பொதுவான மரபாக வைத்திருந்தார்கள். மத்தியதர வர்க்கத்தினர் கட்டும் வீடுகளில் தாழ்வாரமும் அதன் கீழ் திண்ணையும் நிச்சயம் இருந்தன. சில வீடுகளில் தாழ்வாரங்களில் வேய்ந்துள்ள ஓடுகளைச் சுண்ணாம்புக் காரையால் மெழுகி மறைத்திருப்பார்கள். ஓடுகளைக் குரங்குகள் பிய்த்து கலைத்துவிடாமலிருக்க இந்த ஏற்பாடு.
வீடுகளுக்கு வரும் நண்பர்கள், உறவினர்கள், விருந்தினர்கள் அமர்ந்து பேசவும் மதிய வேளைகளில் உண்ட பிறகு இளைப்பாறவும் தாழ்வாரமும் அதன் கீழுள்ள திண்ணையும் உகந்தவை. வெயிலோ மழையோ நேரடியாக மேலே விழாமல் காக்கக்கூடியவை. வேடிக்கை பார்ப்பதற்குத் தாழ்வாரமும் திண்ணையும் நல்ல தோது.
‘திண்ணை என்பது தெருவில் உயர்ந்தது’ என்ற (கவிதை!) விளக்கம் ஒன்று போதும். தாழ்வாரம் என்பது நான்கு புறங்களிலும் சுவர்களற்ற வரவேற்பறை, மூத்தவர்களின் விவாதக் களம், குழந்தைகளின் படிப்பறை, மூணு சீட்டு முதல் ஆடு-புலி ஆட்டம்வரை ஆடுவதற்கான மனமகிழ் மன்றம், தலைச்சுமையாகக் காய்கறி, பழங்கள், புடவை உள்ளிட்ட துணிகளைக் கொண்டுவரும் வியாபாரிகள் தலைச்சுமையை இறக்கிவைத்து சாவகாசமாக வியாபாரம் செய்ய சந்தை மேடை- இப்படிப் பல வகையிலும் பயன்பட்ட அபூர்வ அமைப்பு.
திண்ணையில் தலையணையைப் போல் சற்று உயர்த்திக் கட்டிய சிமெண்ட் அல்லது காரை திண்டும் இருக்கும். தாழ்வாரத்தை ஒட்டிய சுவரிலேயே சிறிய அல்லது பெரிய ஜன்னல்களை அமைத்து வீதியோடு தொடர்பு வைத்துக்கொள்வதும் உண்டு. தாழ்வாரத்தின் சிறப்பே அது வெவ்வேறு நேரத்தில் வெவ்வேறு வயதினருக்கு வெவ்வேறு வகையில் பயன்பட்டதுதான்.