பெண் இன்று

பெண் உணர்வுகள் பேசும் ‘அகம்’ | ஓவியக் கண்காட்சி @ சென்னை

உதயசங்கரன் பாடகலிங்கம்

ஆணுக்கு இணையாகப் பல தளங்களில் பெண்கள் முன்னேற்றம் கண்டுவரும் சூழலில், இனியும் பெண்ணியம் பேசுவது அவசியமா? இந்தக் கேள்வி ஆங்காங்கு ஒலித்தாலும், ‘ஆம், இப்போதும் அதற்கான தேவை இருக்கத்தான் செய்கிறது’ என்று அழுத்தமாகச் சொல்லும்வகையில் தங்களது படைப்புகளை ‘அகம்’ கண்காட்சியில் ஹரிப்ரியா கௌரிசங்கர், மோனிஷா சுப்பிரமணியம் இருவரும் காட்சிப்படுத்தியிருந்தனர். இவர்கள் இருவருமே தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் நுண்கலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பயின்றவர்கள்.

பொறியியல் படிப்பு, அதன் பிறகும் விட்டுவிடாமல் தொடர்ந்த ஓவிய ஆர்வம், அதன் விளைவாக நுண்கலைக் கல்லூரியில் சேர்ந்து பயின்றது, அதன் தொடர்ச்சியாக முதுகலைப் பட்டம் பெற்றது என்று இருவருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. அது, இந்தக் கண்காட்சியிலும் தொடர்வதைக் காண முடிந்தது.

பெண்களின் அன்றாடப் பொறுப்புகள், உழைப்பின் பின்னே மறைந்திருக்கும் சோர்வு, கோபம், தியாகம் உள்ளிட்ட உணர்வுகளை வெளிப்படுத்த முயல்கின்றன ஹரிப்ரியாவின் படைப்புகள். பெண்கள் சகிப்புத்தன்மை, சூழலுக்கேற்ற அமைவு, அடக்கம் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிற வாதங்கள் இனியும் வேண்டுமா என்கிற கேள்வியை முன்வைக்கின்றன.

மோனிஷாவின் கலைப் பார்வையானது உடல் அரசியல், அழகுத் தரநிலைகள், உடலைக் கேலி செய்தல் எனப் பெண்களைக் காலம்காலமாக வதைத்து வருவனவற்றைக் கேள்விக்குட்படுத்துகிறது. எந்தவொரு பெண் மீதும் ஆண்கள் செலுத்துகிற பொதுப்பார்வை இத்தகையதுதான் என இவர் முன்வைக்கும் கோணம், இவரது பெரும்பாலான படைப்புகளில் காணக் கிடைக்கிறது.

ஓவியங்கள், சிற்பங்கள், பல்லூடகப் படைப்புகள் எனப் பலவாறாக இவர்களது படைப்புகள் இருக்கின்றன. ‘கண்கள் நோக்குவதற்கு அப்பால்’ இருக்கின்றவற்றைக் காட்டுவதாக உள்ளன. சம்பந்தப்பட்ட கலைஞர்களின் பார்வையும் படைப்புத்திறனும் அவர்கள் காட்டுகிற உலகமும் எப்படிப்பட்டது என்றறிய விரும்புகிறவர்கள் இதனைக் கண்டு ரசிக்கலாம்.

சென்னை நுங்கம்பாக்கம் லலித்கலா அகாடமியில் செப்டம்பர் 13 அன்று தொடங்கிய ‘அகம்’ கண்காட்சி, வரும் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT