பெண் இன்று

மாதவிடாய் விடுப்பு பணியைப் பாதிக்கும்? | பெண்கள் 360

ப்ரதிமா

நாடு முழுவதும் மாணவியருக்கும் பணிபுரியும் பெண்களுக்கும் மாதவிடாய் விடுப்பு வழங்கும் சட்டத்தை அமலாக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி தாக்கல் செய்த பொது நல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது பெண்களின் பணிவாய்ப்பைப் பாதிக்கும் என தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார்.

“பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் அதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளை அளவிட முடியாது. பணியிடத்தில் யாரும் அவர்களுக்குப் பெரிய பொறுப்பை அளிக்க மாட்டார்கள். நீதித் துறையில் அவர்களுக்கு வழக்கு விசாரணைகளை ஒதுக்க மாட்டார்கள்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

மாதவிடாய் விடுப்பைக் கட்டாயமாக்குவதற்கும் நிறுவனங்கள் தாங்களாக முன்வந்து விடுப்பு அளிப்பதற்குமான வேறுபாட்டையும் நீதிமன்றம் விளக்கியது. மாணவியருக்கும் பணிபுரியும் பெண்களுக்கும் மாதவிடாய் விடுப்பைச் செயல் படுத்திவரும் பிஹார், ஒடிசா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் செயல்பாட்டைப் பாராட்டிய நீதிமன்றம் வேலைச் சந்தையின் நடைமுறை எதார்த்தத்தையும் புரிந்துகொள்ள வேண்டும் என்றது.

பணியிடங்களில் மாதவிடாய் விடுப்பு பெண்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று பின்வாங்குவதைவிட, நிறுவனங்கள் அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைச் சட்டப்படி தடுக்கிற பணியைத்தான் நீதிமன்றங்கள் செய்ய வேண்டும் என்கிற விமர்சனமும் எழுந்தது.

          

பாதுகாப்பான பயணம்!

நகராட்சிப் பகுதிகளில் வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு 760 இருசக்கர மின் வாகனங்களையும் 240 மின் ஆட்டோக்களையும் மகளிர் தினக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக ஆந்திர அரசு வழங்கியுள்ளது.

முதல்கட்டமாக விஜயவாடா, திருப்பதி, குண்டூர் உள்ளிட்ட எட்டு நகரங்களில் இவை இயக்கப்படும். ஆந்திர மாநிலத்தின் மூன்றாம், நான்காம் கட்ட நகரங்களில் பெண்களுக்கான வாகன சேவையை விரிவாக்கும்பொருட்டு ‘ரேபிடோ’ நிறுவனத்துடன் இதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த மின் வாகனங்களை இயக்கும் பெண்களுக்கு மூன்று மாதங்களுக்கான போர்டிங் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் பெண்களுக்குத் திறன் பயிற்சி, நிதியைக் கையாள்வது குறித்த பயிற்சி போன்றவை அளிக்கப்படுவதோடு பொருளாதாரத் தன்னிறைவு பெறுவதற்கான வழிகளும் ஏற்படுத்தித் தரப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. பெண்களின் பொதுவெளிப் பயன்பாட்டை அதிகரிப்பதோடு செயலிகள் மூலம் வாகனங்களைப் பதிவுசெய்து பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதும் இந்தத் திட்டத்தின் நோக்கம்.

SCROLL FOR NEXT