புத்தகங்கள் மீதான ஈர்ப்பு எனக்குச் சிறு வயது முதலே உள்ளது. அன்றைய செய்தித்தாள்களில் இணைப்பாக வரும் சிறுவர் இணைப்புகளும் அவற்றுள் இருக்கும் கதைகளும் என்னைக் கவர்ந்தன. ஆனால், கல்லூரிக் காலத்தில்தான் புதினங்கள் படிக்கும் பழக்கம் உருவானது.
அதற்கு மற்றுமொரு காரணம் கல்லூரி நூலகம். ஆங்கிலத் துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்ததால் நிறைய ஆங்கிலப் புத்தகங்கள் படிக்கும் வாய்ப்பு அமைந்தது. ஆனால், வெ.இறையன்பு எழுதிய, ‘சாகாவரம்’ புத்தகத்தைப் படித்த பின்புதான் தமிழ்ப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினேன்.
அண்மையில் படித்த, ‘நீர்வழிப் படூஉம்’ என்னை மிகவும் ஈர்த்தது. நகரத்தில் பிறந்து வளர்ந்த என்னைக் கிராமத்து வாசனையை நுகர வைத்தது. வட்டார வழக்கில் தேவிபாரதி எழுதியது முதலில் படிப்பதற்குச் சற்றுக் கடினமாக இருந்தாலும், பின்பு பழகிக்கொண்டேன். குடும்பக்கதை, ஊர்க்கதையாக இருந்து என்னையும் அவர்களுடன் பயணிக்க வைத்தது.
ஏதும் இல்லாவிட்டாலும் இருப்பதைப் பகிர்ந்து, அன்பைப் பொழிந்து, பாசத்தைப் பரிமாறிய காரு மாமா, ராசம்மா அத்தை, அம்மா, பெரியம்மாவுடன் நானும் பங்குகொண்டேன் என்பதில் பெருமகிழ்ச்சி! இப்படித்தான் புத்தகங்கள் பல இடங்களுக்கும் வீட்டிலிருந்தபடியே என்னை அழைத்துச் செல்கின்றன. அதனால்தான் என் தேடுதலும் முடிவடையாமல் தொடர்கிறது.
- செ. பிரிசில்லா, திருச்சி.