அப்போதைய திருநெல்வேலி ஜில்லாவின் இடையன் விளைதான் என் ஆச்சி அன்னபழத்தின் ஊர். ஆச்சிக்கு ஏழு பிள்ளைகள். அதாவது என் அம்மாவுக்கு மூன்று அக்கா, ஒரு அண்ணன், ஒரு தம்பி, ஒரு தங்கை. இத்தனை உறவுகளும் ஒரே வீட்டில் கூடி இருந்த நாள்கள் அவை.
கோடை விடுமுறை எப்போது தொடங்கும் என்று ஒவ்வொரு நாளையும் எண்ணிக்கொண்டே இருப்போம். இப்போது இருப்பது போல நான்குவழிச் சாலைகள் அப்போது இல்லை. ஊருக்குச் செல்லவே பத்து மணி நேரம் ஆகும். ஒவ்வொரு அரைமணி நேரத்துக்கும், “ஊர் வந்துவிட்டதா?” என்று அம்மாவிடம் கேட்டுக்கொண்டே இருப்பேன். அம்மாவும், “இப்போ வந்துரும்... இன்னும் கொஞ்சம்தான்” என்று சிரித்துக்கொண்டே சமாதானப்படுத்துவார்.
ஒரு வழியாக ஆச்சி வீட்டை அடைந்தவுடன் ஆச்சி முத்தமழையால் என்னை அரவணைத்துக்கொள்வார். நீல நிறப் புடவை, வெள்ளை ரவிக்கை, காதில் பாம்படம் என்று அந்த எளிமையான தோற்றமே இன்று வரை நினைவில் நிற்கிறது. அவ்வளவு பெரிய வீட்டில் ஆச்சி மட்டும்தான் இருந்தார். எல்லாப் பிள்ளைகளும் திருமணத்துக்குப் பிறகு தங்கள் குடும்பத்துடன் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். பால்மாடு வளர்த்து, புளியமரத்தை வைத்துப் பயன் பெற்று ஆச்சி தன் வாழ்க்கையை நடத்தினார். ஆனால், ஒவ்வொரு வருடமும் எங்களின் வருகைக்காக ஆவலுடன் காத்திருப்பார்.
சில நாட்கள் விறகு அடுப்பில் இனிப்பு இட்லி செய்து தருவார் அம்மா. பத்து மணியளவில் குளத்துக்குக் குளிக்கச் செல்வோம். குளித்து, துணிகளைத் துவைத்துத் திரும்பும்போது தாமரை மலர்களை அம்மா மாலையாகக் கட்டித் தருவார். வீட்டுக்கு வந்ததும் துணிகளைக் காயவைத்துவிட்டுத் தாயம், பல்லாங்குழி, நொண்டி, கண்ணாமூச்சி என விளையாடுவோம். புளியமரத்தில் ஊஞ்சல் ஆடி, இரவு வரை மகிழ்ச்சியில் மூழ்கி இருப்போம்.
அது புளி சீசன் என்பதால் புளியமரத் தோப்புக்குச் செல்வதும் எங்களின் தினசரி உற்சாகமாக இருந்தது. புளி உலுக்குபவர் மரத்தில் ஏறி புளியை உலுக்க, நாங்கள் எல்லாரும் ஓடி ஓடி புளியைப் பொறுக்கி ஓலைப் பெட்டிகளில் சேகரிப்போம்.
சேகரித்த புளியை மூட்டையில் வைத்து வீட்டுக்கு கொண்டு வந்து, கீழே கொட்டி அதன் ஓட்டை உடைத்து, புளியை வெயிலில் நன்றாகக் காயவைத்து விடுவோம். அதன் பின், சிறிய ஊசியைக் கொண்டு அதன் உள்ளே இருக்கும் புளியமுத்துகளை எடுப்போம். புளியமுத்துகளைச் சேகரித்து வைத்து அதை வாங்குவதற்கு வருபவரிடம் கொடுத்துவிடுவோம்.
அந்த நாள்களில் கோயில் கொடைத் திருவிழாவும் நடைபெறும். பத்து நாள்கள் ஊரே திருவிழாக் கோலம் பூணும். வில்லுப்பாட்டு பார்க்க ஆச்சி எங்களை அழைத்துச் செல்வார்.
வழியில் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும், “இவர்கள் என் மகள் பிள்ளைகள்... இவர்கள் என் மகன் பிள்ளைகள்...” என்று பெருமையாக அறிமுகப்படுத்துவார். திருவிழாவின் கடைசி இரண்டு நாள்களில், திரைச்சீலை வைத்துப் படம் காட்டுவார்கள். அப்போது எல்லார் வீட்டிலும் டிவி இருக்காது. அதனால் அந்தத் திரைப்படத்துக்காக விடிய விடிய கண்விழிப்போம். டிவி, மொபைல் இல்லாமல் இயற்கையோடு நெருக்கமாக இருந்த எளிய நாள்கள் அவை.
- மோ. பிருந்தா ரேவதி, சின்னாளப்பட்டி.