பெண் இன்று

மூன்று தலைமுறையாக நிகழ்ந்த மாற்றம் | ஆண்கள் ஸ்பெஷல்

Guest Author

எனக்கு 86 வயதாகிறது. திருமணமாகி 58 வருடங்களாகின்றன. மகன், மகள், பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன், கொள்ளுப் பேத்தி எல்லாம் இருக்கிறார்கள். நானும் என் மனைவியும் தனியாக வாழ்ந்துவருகிறோம். 80 வருடங்களுக்கு முன் இருந்த குடும்ப அமைப்பைப் பற்றி இன்றைய தலைமுறைக்குத் தெரியாது.

குடும்பத்துக்குத் தேவையான பொருள் தேடிக்கொண்டு வருவது மட்டும்தான் ஆண்கள் வேலை. ஆண்கள் சமையலறைக்குச் செல்வதையும் சமைப்பதையும் அந்தக் காலத்தில் யார் பார்த்தாலும் பரிகாசம் செய்வார்கள். பொதுவாக, வீட்டில் சமைக்கும் ஆண்களை மரியாதை குறைவாகத்தான் பார்ப்பார்கள். சமையல் செய்வது பெண்களின் வேலை என்று உறுதியாக அந்தக் கால மக்கள் நம்பினார்கள். பெண்கள் வெளியே வேலைக்குப் போய் சம்பாதிப்பதையும் விரும்ப மாட்டார்கள். இது அன்றைய நிலைமை.

அந்தக் காலத்தில் பிறந்த நானும் சமையலறைப் பக்கமே போனதில்லை. 58 ஆண்டுகளாக எங்கள் வீட்டுச் சமையல் வேலையை என் மனைவி மட்டுமே பார்த்துக்கொண்டார். கடந்த மூன்று தலைமுறைகளாகப் படிப்படியாகச் சமுதாயத்தில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. பெண்கள் பட்டப் படிப்பு படித்து வேலைக்குப் போய் ஆண்களுக்கு நிகராகச் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டார்கள். வீட்டு வேலை, சமையல் வேலை எல்லாம் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாகப் போய்விட்டது. இப்போது என் மனைவிக்கு 75 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால், அவரால் தனியாகச் சமையல், வீட்டு வேலை அனைத்தையும் செய்ய முடிவதில்லை.

நான் வழக்கமான வெளி வேலைகளைக் கவனித்துவிட்டு, அன்றைய சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நறுக்கிக் கொடுப்பது, வாஷிங்மிஷினில் துணியைத் துவைத்து, உலர்த்தி, மடித்து வைப்பது, பாத்திரங்கள் துலக்குவது, வீட்டைப் பெருக்குவது போன்ற இதர வேலைகளில் மட்டும் மனைவிக்கு உதவிவருகிறேன். நான் சமையல் கற்றுக் கொள்ளாதது பெரும் குறையாகத் தெரிகிறது இன்று.

படித்து, வேலைக்குப் போவதில் எப்போது ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் வந்துவிட்டார்களோ அப்போதே சமையல் வேலை, வீட்டு வேலை அனைத்தும் ஆண், பெண் இருவருக்கும் பொதுவான தாகத்தான் இருக்க வேண்டு்ம். பெற்றோர்கள் இனிமேல் ஆண் குழந்தைகளுக்கும் படிப்போடு, சமையல் வேலை, வீட்டு வேலை அனைத்தையும் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்.

- துடுப்பதி ரகுநாதன், கோயம்புத்தூர்.

SCROLL FOR NEXT