நானும் என் மனைவியும் அரசு ஊழியர்கள். குழந்தைகள் மூவரும் பள்ளி, கல்லூரி என வெளியூரில் தங்கிப் படித்துவருகின்றனர். எங்களுக்குத் திருமணமனான நாள் முதல் என் மனைவிக்குக் கணவனாக மட்டுமல்லாமல் உற்ற தோழனாகவும் இருக்க வேண்டும் என முடிவெடுத்து அதைச் செயல்படுத்தியும் வருகிறேன். என்னை வேலை செய்யும்படி ஒருநாளும் என் மனைவி சொன்னதில்லை. ஆனால், வீட்டு வேலைகளில் நான் பங்கெடுத்துக்கொள்வதால் என் மனைவிக்கு வேலைப்பளு குறைவதோடு அவரும் நேரத்துக்கு அலுவலகத்துக்குப் புறப்பட உதவியாக இருக்கும் என்பதால் நாள்தோறும் வேலைகளைச் செய்வேன்.
தெருக்குழாயில் இருந்து தண்ணீர் பிடித்து வருவது, சமையலுக்குக் காய்கறிகளை நறுக்குவது, துணிகளைக் காயப்போடுவது போன்றவை என் அன்றாட வேலைகள். சிலநேரம் விறகடுப்பில் சமைக்கும்போது அடுப்பை எரியவிடுவது என் பொறுப்பு. அதைப் பார்த்த எங்கள் ஊர்ப் பெண்கள், “என்னங்க அக்கா, மச்சானை அடுப்பெரிக்க விட்டிருக்கீங்க?” என்று கேலியாகக் கேட்டனர். அதைக் கேட்டு என் மனைவி சற்றும் கோபப்படாமல், “பெண் கல்விக்கு எதிரான கருத்தை உடைத்தெறிய முயன்ற பாரதிதாசனைப் படித்தவர்தான் உங்க மச்சான்.
அதனால்தான் நான் எதுவும் சொல்லாமலேயே அவராகவே எல்லா வேலைகளையும் செய்யறார். இதில் என்ன தப்பு இருக்கு?” என்று கேட்டதோடு அவரவர் வீடுகளிலும் வேலைப் பகிர்வுக்கான ஆலோசனைகளையும் வழங்கினார். கிண்டலாகப் பேசிய பெண்களிடம் ஆண் - பெண் சமத்துவத்தை எதார்த்தமாக எடுத்துக்கூறி தான் செய்யும் செயலைத்தான் வருங்காலச் சந்ததியினரும் செய்வார்கள் என மனைவி கூறியதைக் கேட்டபோது அவர் மீதான மதிப்பு மேலும் உயர்ந்தது.
- இராம.முருகன், காத்தான்விடுதி, புதுக்கோட்டை.
உண்டி சுருக்குதல் யாருக்கும் அழகல்ல!
ஆண்டாண்டு காலமாக நம் வீடுகளில் ஆண்கள்தான் முதலில் சாப்பிட வேண்டும்; அதற்குப் பிறகே பெண்கள் சாப்பிட வேண்டும் என்கிற வழக்கம் தலைமுறை கடந்து வழிவழியாகத் தொடர்கிறது. இது ஆணாதிக்கத்தின் தொடர்ச்சியே. ‘ஆண்கள்தான் குடும்பத் தலைவர், அவர்தான் குடும்பத்தைக் காப்பாற்ற உழைக்கிறார். அவர் ஆரோக்கியமாக இருந்தால்தான் குடும்பம் சிறப்பாக இருக்கும்’ எனத் தலைமுறை தலைமுறையாகச் சொல்லிப் பழக்கப்படுத்திவிட்டனர்.
இப்படி ஆண்கள் முதலில் சாப்பிட்ட பிறகு மீதமிருக்கும் உணவைப் பெண்கள் சாப்பிடும்போது பெரும்பாலும் அரைகுறை உணவுடனே முடித்துவிடுவர். ஆண்களுக்கும் இது தெரியாமலே போய்விடும். இதைத் தவிர்த்துச் சமத்துவத்தை நிலைநாட்ட ஒரே வழி அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவதே. அப்படியான சூழல் அமையாதபோது வீட்டில் பெண்கள் சாப்பிட உணவு இருக்கிறதா என்று பார்த்து அதற்கேற்ப ஆண்கள் பகிர்ந்து சாப்பிட வேண்டும்.
- வி.எஸ். துரை, உறையூர், திருச்சி.