பெண் இன்று

அப்பா சுட்ட தோசை! | ஆண்கள் ஸ்பெஷல்

Guest Author

நான் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர். கரோனா காலம் என் சமையல் ஆர்வத்தை அதிகரித்தது. என் மனைவி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். வீட்டு வேலைகளில் அவருக்குச் சிறு சிறு உதவிகளைச் செய்யத் தொடங்கித் தற்போது முழுநேரச் சமையலராக மாறிவிட்டேன். புதிய வீட்டுக்குத் திட்டமிட்டபோது திறந்தவெளி சமையலறையாகவும் சமைக்க ஒன்று, பரிமாற ஒன்று என இரண்டு அறைகள் கொண்டதாகவும் இருக்கும்படி திட்டமிட்டேன். இதனால், தனியாக ஒருவர் மட்டுமே சமையலறையில் இருப்பதுபோல் தோன்றாது.

          

என் சமையல் ஆர்வத்துக்கு என் மகனும் ஒரு காரணம். ‘அப்பா, இன்று வடைகறி செய்யலாம். நாளை பள்ளிக்குப் பூரி மசால் வேண்டும்’ என்று கேட்பான். ‘இட்லி பஞ்சு போல் உள்ளது’ என்று பாராட்டி என்னை உற்சாகப்படுத்துவான். ‘தோசையம்மா தோசை என்று சொல்லக் கூடாது. அப்பா சுட்ட தோசை என்றுதான் சொல்ல வேண்டும்’ என்று கூறுவான். என் மைத்துனர் மகன்களும், ‘அத்தை சமையலைவிட மாமா சமையல்தான் அருமை’ என்று பாராட்டுவார்கள்.

எங்கள் வீட்டின் பொருளாதாரச் சுமையைப் பகிர்ந்துகொள்ள என் மனைவி வேலைக்குச் செல்கிறார். வீட்டு வேலைகளில் அவருக்கு நான் ஏன் உதவக் கூடாது என்று முடிவெடுத்ததால் இருவரும் மகிழ்வோடு வேலைக்குச் செல்ல முடிகிறது. இதுவும் அன்பின் வெளிப்பாடுதான் என்பதை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும். எங்கள் மகனும் சமையலைக் கற்றுக்கொண்டிருக்கிறான். பாடல்களைக் கேட்டபடியே சமைத்துப் பரிமாறுவது எனக்கு மகிழ்வாக இருக்கிறது. நாளை என்ன சமைப்பது எனத் திட்டமிட்டு, அதற்கேற்ப முதல்நாளே பொருள்களை எடுத்துவைப்பதில் என்னவொரு ஆனந்தம்!

- சக்தி, திருச்சி.

SCROLL FOR NEXT