பெண் இன்று

இன்னும் பெண்கள் வருவார்கள்! - பெங்களூரின் ஒரே பெண் பஸ் டிரைவர்

எல்.ரேணுகா தேவி

போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பெங்களூர் சாலைகளில் ஒரு பஸ்ஸை ஓட்டி செல்வது என்பது, நிச்சயம் டென்ஷனான ஒரு வேலைதான். அதுவும் மெஜஸ்டிக் போன்ற பரபரப்பான பகுதிகளில் தினசரி ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிகளைச் சமாளித்து, பேருந்தையும் அதிலிருக்கும் பயணிகளையும் கரை சேர்ப்பது எளிதான வேலையல்ல.

இந்த வழித்தடத்தில் அன்றாடம் பஸ் ஓட்டுகிறார் ஒரு பெண். அவர், பெங்களூர் பெருநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஒரே பெண் பஸ் டிரைவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் பிரேமா ராமப்பா. பெல்காமைச் சேர்ந்த அவருடைய புதிய முகம் இதுதான். வாழ்க்கை ஏற்படுத்திய மாற்றங்களால், தற்போது அவர் பெங்களூர்வாசியாகிவிட்டார்.

‘ஒரே பெண் டிரைவர்' என்ற பெருமைமிக்க அவருடைய அடையாளத்துக்குப் பின்னே, வாழ்க்கையின் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணமும் மன உறுதியும் இருக்கின்றன. காரணம், பஸ் டிரைவர் ஆவது பிரேமாவுக்கு பிடித்தமான வேலையாக இருக்கவில்லை.

ஆனால், அவரது கணவர் காலமான பின் வாழ்க்கையை நடத்தத் தேவையான வருமானமும், அவரது மகனை வளர்க்க வேண்டிய பொறுப்பும் அவர் மீது விழுந்தபோது, அவருக்கு வேறு வழி தெரியவில்லை. அவசியம் உருவானபோது வேறு வேலைகளைத் தேடத்தான் அவர் முயற்சித்தார். வேலை பெற பல நுழைவுத் தேர்வுகளையும் அவர் எழுதினார். எதுவும் வெற்றியைச் சுவைக்கவில்லை.

பஸ் டிரைவர் ஆகும் வாய்ப்பு மட்டுமே எஞ்சியிருந்தபோது, பிரேமா இரண்டாவது முறை யோசிக்கவில்லை. சட்டென வந்த வாய்ப்பைப் பிடித்துக்கொண்டார்.

இதெல்லாம் நடந்து ஐந்து வருடங்கள் உருண்டோடிவிட்டன. இப்போது பெங்களூர் ஜெயநகர் 9-வது பிளாக்கில் இருந்து மெஜஸ்டிக் வரையிலான வழித்தடம் 18-ல் அவரது பேருந்து நாள் தவறாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.

பெங்களூரின் ஒரே பெண் டிரைவரை தேடும் யாராக இருந்தாலும், அவரை எங்கே பார்க்க முடியும் என்பதை ஜெயநகர் 9வது பிளாக்கில் உள்ள கடைக்காரர்கள் சரியாகச் சொல்லிவிடுகிறார்கள். அவருடைய ஷிப்ட் காலை 7 மணி முதல் மதியம் 2 மணிவரை. "முறையான பயிற்சி கிடைத்தால் இன்னும் பல பெண்கள் பஸ் ஓட்ட முன்வருவார்கள்" என்று உறுதியாகக் கூறுகிறார் பிரேமா.

“பணியிடத்தில் தான் எந்தப் பாலியல் வேறுபாட்டையும் சந்திக்கவில்லை. அதற்கு நேர்மாறாக, ஆண் பஸ் டிரைவர்களும், பயணிகளும் நல்ல மரியாதை கொடுக்கிறார்கள். சிலர் அன்புடன் சாக்லேட்களைத் தருவதும் உண்டு. “நான் வண்டி ஓட்டும்போது மற்ற வாகன ஓட்டிகளும் வழிவிட்டு நகர்ந்துகொள்கிறார்கள். அதைவிட வேறு என்ன வேணும்!” என்று உற்சாகமாகக் கேட்கிறார் பிரேமா.

©தி இந்து (ஆங்கிலம்) தமிழில்: வள்ளி

SCROLL FOR NEXT