பெண் இன்று

என் பாதையில்: கண்ணீரை வரவழைத்த மாணவன்

Guest Author

முதுகலை ஆங்கில ஆசிரியராக அரசு மேல் நிலைப்பள்ளிகளில் நான் பணியாற்றி, பணி நிறைவு பெற்று ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. 30 ஆண்டுப் பணியில் நான் கற்பித்த மாணவர்கள் பலர் இன்றும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதே எனக்கு மகிழ்ச்சியும் ஊக்கமும் அளிக்கிறது. பல்வேறு துறைகளில் அவர்கள் சாதித்துக்கொண்டிருப்பதும் பெருமிதமே. அவர்களில் ஒரு மாணவனை நினைத்து இன்றும் வியக்கிறேன்.

கிராமத்து அரசுப் பள்ளியில் பிளஸ் டூ படித்த மாணவன் அவன். படிப்பதற்கு மிகச் சிரமப்பட்டான். அரையாண்டுத் தேர்வில் ஆங்கிலத்தில் ஒரு மதிப்பெண்கூட எடுக்கவில்லை. மற்றப் பாடங்களிலும் ஒற்றை இலக்க மதிப்பெண்கள்தான். தன்னால் படிக்க முடியவில்லை என்று மிகுந்த மன உளைச்சலில் இருந்தான். வகுப்பில் யாருடனும் பேசாமல் இறுக்கமான முகத்துடன்தான் இருப்பான். அவனை அப்படியே விட்டுவிடக் கூடாது என்று எண்ணி, பொதுத் தேர்வுக்கு ஒரு மாதம் இருந்த நிலையில் பேருந்துக் கட்டணம் அளித்து கிராமத்திலிருந்து பத்து கி.மீ. தொலைவிலுள்ள என் வீட்டுக்குப் பள்ளி நேரம் முடிந்ததும் வரச் சொன்னேன்.

அவனுடன் அவனுடைய வகுப்பு நண்பர்கள் மூவரும் பள்ளி நேரம் முடிந்ததும் என் வீட்டுக்கு வந்தார்கள். ஆங்கிலத் தேர்வை எளிதில் எதிர்கொள்ளப் பயிற்சி அளித்தேன். தன்னம்பிக்கை ஊட்டினேன். என் வீட்டுக்கு வந்தால் அந்தச் சூழல் அவனுக்கு மாற்றமளிக்கும் என்று கருதினேன். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தலைமையாசிரியரைச் சமாளித்தேன் (அது பெரிய கதை). தேர்வில் தோல்வியடைந்து அவன் தவறான முடிவுக்குச் சென்றுவிடக் கூடாது என்கிற எண்ணம் மட்டும்தான் எனக்கு. அப்படிப்பட்ட நிலையில்தான் அவன் இருந்தான்.

எழுத்துத் தேர்வுக்கு 50 மதிப்பெண்கள், வாய்மொழித் தேர்வுக்கு 20 மதிப்பெண்கள் என்கிற அளவில் தீவிரமாகப் பயிற்சி அளித்தேன். ஒரு தோழியாக, தாயாக அவனைத் தட்டிக் கொடுத்து உற்சாகமூட்டினேன். தினமும் பழச்சாறு, சிற்றுண்டி அளித்து என் கணவரும் அவனிடம் அன்பு காட்டினார். அந்த ஆண்டு பொதுத்தேர்வில் 70 மதிப்பெண்கள் பெற்றால் போதும் என்று நினைத்தபோது 92 மதிப்பெண்கள் பெற்று ஆங்கிலத்தில் தேர்ச்சி அடைந்திருந்தான். மற்றப் பாடங்கள் அனைத்திலும் தோல்வி என்கிற போதிலும் அது எதிர்பார்த்ததுதான் என்பதால் அது அவனைப் பாதிக்கவில்லை. ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெற்றது அவன் மனச் சோர்வை அகற்றியது.

இன்று அண்டை மாநிலத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் நிறைவாக ஊதியம் வாங்கித் தன் பணித்திறனை உயர்த்திக் கொண்டிருப்பதாகவும், அதற்கு நான் அளித்த ஊக்கம்தான் காரணம் என்றும் தொலைபேசியில் என்னிடம் தகவல் சொன்னபோது என்னால் ஆனந்தக் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இன்றும் அவனை நினைக்கையில் கண்ணீர் துளிர்க்கிறது. ஆனால், மனம் நிறைவாக இருக்கிறது.

- மணிமேகலை, ஓசூர்.

SCROLL FOR NEXT