பெண் இன்று

பெண்ணுக்கு நீதி 07: ஜீவன் தந்தவருக்கே ஜீவனாம்சமா?

நீதியரசர் எஸ்.விமலா

அது ஒரு மனிதக் காட்சி சாலை.

பால் குடித்த மிருகங்கள் வந்து

பார்த்துவிட்டுப் போகின்றன.

- முதியோர் இல்லத்தில் தாய்மார்களைக் கண்ட ஒரு கவிஞரின் குமுறல் இது. சுமைதாங்கியாய் இருந்தவர்களைச் சுமையாய் நினைத்துத் தூக்கி எறிந்து விட்ட கயமை இது. மரணமில்லாப் பெருவாழ்வு தரும் என்று தெரிந்தும், அற்புத நெல்லிக்கனியைத் தான் உண்ணாமல் ஔவைக்குத் தந்த அதியமான் பிறந்த மண்ணில்தான் பெற்றவர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பும் கொடுமையும் நடக்கிறது.

லட்சிய வாழ்வுக்கு மனிதர்கள் கற்க வேண்டிய இலக்கியங்களும் இதிகாசங்களும் இந்தியாவில்தான் உள்ளன என்றும், எல்லோரும் ஏற்கும் தர்மநெறிக்கு இந்தியாவையே பின்பற்ற வேண்டும் என்றும் மேலை நாடுகள் பாராட்டிய இந்தியாவில்தான் இந்த நிலைமை.

பெண்ணை வயது அடிப்படையில் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்று ஏழு பருவ நிலைகளாகப் பிரித்து இலக்கணப்படுத்துகின்றன இலக்கியங்கள். அவற்றில் முதல் நான்கு பருவங்களை நோக்கிக் குவியும் தீவிர கவன ஈர்ப்பால், கடைசி மூன்று முதுபருவங்களின் மீது முற்றிலும் கவனம் இல்லாமல் போய்விடுகிறது.

பாலியல் சீண்டல்களிலிருந்தும் ஆபாச அத்துமீறல்களிலிருந்தும் இளம் பெண்களைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியமானதோ அதே அளவு முக்கியத்துவம், இளமை விடைபெற்று, இயலாமை கைப்பற்றி, பாசத்துக்கும் பண உதவிக்கும், ஏங்கி நடைபிணமாக வாழநேரும் அன்னையரின் அவல வாழ்வைச் சரிசெய்வதற்கும் அளிக்கப்பட வேண்டும்.

நிராகரிக்கப்படும் அன்னையர்களை முதியோர் இல்லம் தவிர நீதிமன்ற வளாகங்களிலும் காண முடிகிறது. தான் உயிர் வாழ்வதற்குத் தன் பிள்ளைகளிடமே ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றக் கதவுகளைத் தட்டும் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகமாகிவருகிறது. பெற்றோர்கள் ஜீவனாம்சம் கோர வழிவகை செய்யும் வெகுசில சட்டங்களில் ஒன்றான, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973-ன் பிரிவு 125 (ஈ) இப்படிச் சொல்கிறது.

“சுயமாகப் பிழைத்திருக்க இயலாத தந்தை அல்லது தாயைத் தகுதியுள்ள அவர்களது பிள்ளைகள் காப்பாற்ற மறந்தாலும் மறுத்தாலும் நீதித்துறை நடுவர், அதற்கான ஆதாரத்தின் அடிப்படையில் மாதம்தோறும் ஜீவனாம்சமாக ஒரு குறிப்பிட்ட தொகையைப் பிள்ளைகள் தர வேண்டும் என்று ஆணையிட முடியும். வழக்கு நடந்துகொண்டிருக்கும் போதே, இடைக்கால ஜீவனாம்சம் வழங்கவும் (60 நாட்களுக்குள்) சட்டத்தில் வழியுண்டு”.

மூத்த குடிமக்கள் (65 வயதுக்கும் மேற்பட்டவர்கள்) மற்றும் பெற்றோர் பராமரிப்பு மற்றும் நலச் சட்டத்தின் கீழ் ரூ.10,000 வரை பிள்ளைகளிடமிருந்து ஜீவனாம்சம் பெற வழிவகை உண்டு. மேலும் தந்தை அல்லது தாயின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பளிக்கவும் இந்தச் சட்டம் வகை செய்கிறது.

சட்டம் இருக்கட்டும். ஜீவனாம்சம் கோரி இந்தச் சட்டத்தின் அடிப்படையில் எத்தனை பெற்றோர்கள், நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள்? உயிருக்குள் உயிரான இரண்டு உயிர்கள், நீதிமன்ற அறையில் எதிரெதிர் திசையில் நின்று வாதம் செய்யுமா? அப்படியொரு மகன், தன் தாயை கோர்ட் படியேற வைத்தார்.

மதுரையைச் சேர்ந்த பொன்னழகி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 70 வயது மூதாட்டி. இவரது மகன்கள் யுவராஜ், குமாரராஜா. மகள், சந்திரிகா. மூவரில் யார் தாயைப் பராமரிக்காமல் தப்பிப்பது என்று போட்டி போட்டதால் பிள்ளைகளிடமிருந்து பராமரிப்புச் செலவு கோரி பொன்னழகி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். குடும்ப நீதிமன்றம், மகன்கள் இருவரும் தலா ரூ.3 ஆயிரம், மகள் ரூ. 5 ஆயிரம் மாதம்தோறும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. உத்தரவை ரத்துசெய்யக்கோரி யுவராஜ் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்தார். தாய் தனது கடமைகளைச் சரியாக நிறைவேற்றவில்லை எனவும், அதனால் அவருக்கு ஜீவனாம்சம் கோர அருகதை கிடையாது எனவும் வாதிட்டார். இந்த வாதத்தால் அந்தத் தாய் மனதளவில் காயப்பட்டார். ஜீவனாம்சம் கொடுக்க முடியாது என்று சொல்லியிருந்தால்கூட அந்த அளவுக்கு வலித்திருக்காது.

காரணம், தாய் என்பவள் கருவைச் சுகமான சுமையாகச் சுமந்தவள், தொப்புள் கொடி மூலம் தன் உணவைப் பகிர்ந்தவள், பிரசவம் மறுபிறப்பு என்று தெரிந்தும் தாய்மையை வரமாக ஏற்றுக்கொண்டவள். தன் ரத்தத்தைப் பாலாகச் சொரிந்தவள், தூக்கத்தைத் துச்சமாய்த் தூக்கியெறிந்தவள், மலத்தின் நாற்றம் மணமென்று கொண்டவள். இதையெல்லாம் மறந்துவிட்டு, வளர்த்த கடா மார்மேல் பாய்வதைப் போல, வழக்கு நடத்தினார்கள் பிள்ளைகள்.

பெற்றோரைக் கவனிக்க வேண்டியது சட்ட ரீதியாகப் பிள்ளைகளின் அடிப்படை கடமை. இந்தக் கடமையைப் பிள்ளைகள் புறக்கணிக்க முடியாது. இந்த அடிப்படையில் கீழமை நீதிமன்ற உத்தரவை உயர் நீதிமன்றம் மாற்றியமைத்து உறுதி செய்தது.

பொதுவாக வெற்றி மகிழ்ச்சி தரும். ஆனால், இந்தத் தாய்க்கு அதுவும் கிடைக்காது. ஏனென்றால் ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படும் தொகை, தான் பிள்ளைகளால் தொடர்ந்து இன்னமும் நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை அந்தத் தாய்க்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.

இந்தத் தலைமுறையினர் தாயின் கண்ணீரை அலட்சியம் செய்யாமல் அவர்களின் இறுதி நாட்களை இன்ப நினைவுகளாக மாற்ற வேண்டும். அவர்கள் கேட்காமலேயே அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்ய வேண்டும்.

அன்பான வார்த்தைகளையாவது அள்ளித் தெளியுங்கள். சொர்க்கம் என்பது அம்மாவின் காலடி என்பதையும் அவள் கண்களில் இருந்து வடியும் ஆனந்த கண்ணீர் என்பதையும் உணருங்கள்.

(பாதைகள் விசாலமாகும்)

கட்டுரையாளர், முனைவர், நீதியரசர்

தொடர்புக்கு: judvimala@yahoo.com

SCROLL FOR NEXT