பெண் இன்று

நாட்டிய ஆசிரியர் மீது பாலியல் புகார்

எஸ். சுஜாதா

சென்னை அடையாறில் உள்ள கலாக் ஷேத்ரா நடனப் பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் தன் நடன ஆசிரியர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். மாணவியின் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் உறுதியளித்துள்ளார். இந்த விவகாரத்தில் முறையான விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்ச் 31 அன்று 250க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடனப் பள்ளி வளாகத்தில் பல ஆண்டுகளாக வார்த்தை - உடல்ரீதியான அத்துமீறல் நிகழ்ந்துவருவதாகவும் அது குறித்து நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தபோது பள்ளியைவிட்டு விலகுமாறு தங்களிடம் சொல்லப்பட்டதாகவும் மாணவிகள் தரப்பில் சொல்லப்பட்டது. “நடன ஆசிரியர் உள்பட நான்கு பேரும் மாணவிகளிடம் தொடர்ந்து தவறாக நடந்துவருகின்றனர். எங்களது புறத்தோற்றத்தையும் நடத்தையையும் மோசமாக விமர்சிக்கிறார்கள். மாணவர்களும் இவர்களால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இது குறித்துப் புகார் அளித்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.” என்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார். பிறகு காவல்துறையினர் வந்து பேச்சு வார்த்தை நடத்திய பிறகு மாணவிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். மாநில மகளிர் ஆணையம் மாணவிகளிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது எனவும் கலாக் ஷேத்ரா நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பெண் ஓட்டுநர்

கோவை காந்திபுரம் - சோமனூர் தடத்தில் தனியார் பேருந்தை இயக்கும் ஷர்மிளா, கோவை மாநகரின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுநர். ஓட்டுநர் இருக்கையில் தன்னைப் பார்த்ததும் பயணிகள் பலரும் ஆச்சரியப்பட்டதாகவும் தன்னுடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்டதாகவும் ஷர்மிளா மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். கோவை வடவள்ளியைச் சேர்ந்த இவர் மருந்தாளுநர் படிப்பில் டிப்ளமோ முடித்திருக்கிறார். ஆட்டோ ஓட்டுநரான தந்தையைப் பார்த்துத் தானும் ஓட்டுநராக வேண்டும் என விரும்பினார். அதன்படி சில காலம் ஆட்டோ ஓட்டுநராகவும் கால் டாக்ஸி ஓட்டுநராகவும் இருந்தார். கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் பலரைத் தன் ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகு கோவையின் தனியார் பேருந்து அலுவலகத்தில் வேலைக்கு விண்ணப்பிக்க, இந்த வேலை கிடைத்திருக்கிறது.

SCROLL FOR NEXT