மீரா உதயகுமார், கல்விச் செயற்பாட்டாளர். அமெரிக்காவில் கல்வி பயின்ற இவர் கல்விச் சேவைக்காக வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவர். நாகர்கோவிலுக்கு அருகில் சாக்கர் (Saccer - South Asian Community Centre For Education And Research) என்னும் பள்ளியை நடத்தி வருகிறார். இவர், அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் சுப. உதயகுமாரின் மனைவி.
உங்கள் பின்னணி பற்றிக் கூறுங்கள்...
எனக்குச் சொந்த ஊர் நாகர்கோவில்தான். ஆனால் என் பெற்றோரின் வேலையின் பொருட்டு நாங்கள் திருநெல்வேலியில் வசித்தோம். அதனால் என் பள்ளிக் கல்வியையும், இளநிலைக் கல்வியையும் திருநெல்வேலியிலேயே படித்தேன். முதுகலைப் படிப்பைத் திருச்சியில் முடித்தேன்.
.சமூகப் பணியில் ஈடுபட வேண்டும் என்ற சிந்தனை எப்போது வந்தது?
என்அம்மா சமூக நல அலுவலராகப் பணியாற்றினார். என் அப்பாவும் அறிவொளி இயக்கத்தில் செயற்பாட்டளராக இருந்தார். இவையெல்லாம் எனக்குச் சமூகப் பணிகள் மீது ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்திருக்கலாம் என நினைக்கிறேன்.
அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் சுப. உதயகுமாரை எப்போது சந்தித்தீர்கள்?
1992-ல் சென்னையில் சந்தித்தேன். என் தோழி ஒருவர்தான் இந்தச் சந்திப்புக்குக் காரணம். ‘உனக்கு ஒத்த சிந்தனை கொண்ட ஒருவர் இருக்கிறார். அவர் உன் வாழ்க்கைக்குப் பொருத்தமாக இருப்பார்’ என அவர் சொன்னதால் அவரைச் சந்தித்தேன். மன விருப்பத்துடன் திருமணம் செய்துகொண்டோம்.
அமெரிக்காவில்தான் சமூகப் பணியில் முதுகலை படித்தீர்களா?
ஆம், ஹவாய் பல்கலைக் கழகத்தில் படித்தேன். அந்த அனுபவம் கல்வி குறித்த புரிதலை முற்றிலும் மாற்றிவிட்டது. அந்தப் படிப்பைப் பொறுத்தவரை வகுப்புகள் அவ்வளவாகக் கிடையாது. அந்தச் சமயத்தில் பகுதிநேரமாக நான் சில வேலைகளைச் செய்தேன். ஒருவகையில் அவை எல்லாம் சமூகப் பணிகள்தாம். ஊனமுற்ற மாணவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுடன் வகுப்புகளுக்குச் சென்றேன். அவர்களுக்காகத் தேர்வு எழுதியிருக்கிறேன். இந்த அனுபவத்தின் மூலம் நான் என் படிப்புக்கு வெளியே நிறைய கற்றுக்கொண்டேன்.
கல்வி குறித்து என்னவிதமான புரிதல்கள் அங்கு கிடைத்தன?
மாணவர் - ஆசிரியர் ஆளுமை என்பது அங்கு சரிசமமாக உள்ளது. அங்குள்ள வகுப்புகளைப் பொறுத்தவரை ஆசிரியர் மட்டும் பேசிக்கொண்டிருக்கமாட்டார். மாணவர்களும் சரியான அளவு பேசுவார்கள். கருத்துச் சொல்வார்கள். மாணவர்களின் கருத்துகளுக்கும் மதிப்பு அளிக்கப்படும்; ஏற்றுக்கொள்ளப்படும். இந்த மாதிரியான கல்வி முறையில் மாணவர்களின் ஆளுமைப் பண்பு வெளிப்படும். கல்வியைவிட மாணவர்களுக்கு ஆளுமைதான் மிக முக்கியம்.
இங்குள்ள கல்வி முறையில் எம்மாதிரியான குறைகள் இருப்பதாக உணர்கிறீர்கள்?
பாடத்திட்டங்களைப் பொறுத்தவரை மிகச் சிறப்பாக உள்ளன. சமச்சீர் கல்வித் திட்டடத்தை எளிமையாகக் குழந்தைகளுக்காக வடிவமைத்துள்ளனர். ஆனால் அவற்றைப் போதிக்கும் முறையில் கூடுதல் கவனம் வேண்டும். மதிப்பெண்களை நோக்கி மாணவர்களைத் தள்ளக் கூடாது. பாடத் திட்டத்திற்கு அப்பாற்பட்டு மாணவர்களின் திறன்களை (Extra curricular activity) வளர்க்க வேண்டும். அவை மிக முக்கியமானவை.
எந்த மாதிரியான திறன்கள்?
எங்களது பள்ளியில் இசை, ஓவியம், நடனம் இம்மாதிரியான திறன்களுக்காகப் பயிற்சி தருகிறோம். இவை உதாரணங்கள்தான். விளையாட்டு உள்ளிட்ட பல விதமான கலைகள் உள்ளன. இந்தத் திறன்கள்தாம் அவர் களுக்கு ஆளுமைப் பண்பை வளர்க்கும். ஆளுமை இருந்ததால்தான் அவர்களால் தங்கள் வாழ்க்கைப் பாதை குறித்து சுயமாக முடிவெடுக்கும் தகுதியைப் பெற முடியும்.
கல்வி போதிப்பதில் என்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்கிறீர்கள்?
மிகக் குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்குக் கல்வியைப் போதித்து வருகிறோம். அதனால் இங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்குக் கூடுதல் ஊதியம் கொடுக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் அதற்கான பொருளாதார பலம் எங்களிடம் இல்லை. என் கணவரின் கூடங்குளம் போராட்டத்தை முன்னிட்டு அரசியல் காரணங்களுக்காக எங்கள் பள்ளி தாக்கப்பட்ட போது அதிலிருந்து மீண்டு வர என் பெற்றோர்தான் உதவினர். குழந்தைகளின் இருக்கைகளும் நூலக அலமாரிகளும் தாக்கப்பட்டபோது நாங்கள் அதிலிருந்து மீள சிரமப்பட்டோம்.
கல்வியைப் போதிப்பதில் ஆசிரியர்கள் என்ன மாதிரியான கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்?
ஆசிரியர் பணி, சமூகத்தில் மிகவும் மரியாதைக்குரிய ஒரு பணி. இது மற்ற வேலைகளைப் போல 10 மணியில் இருந்து 6 மணி வரை பார்க்கும் பணி இல்லை. ஒரு சமூகம் உருவாவதற்கான அடித்தளம் பள்ளியில்தான் உருவாக்கப்படுகிறது. அந்த அர்ப்பணிப்புடன் ஆசிரியர்கள் பணியாற்றினால்தான் சமூகப் புரிதல் உள்ள மாணவர்களை உருவாக்க முடியும்.
சமூகப் புரிதல் உள்ள மாணவர்கள் வரும்போது நாட்டில் அனைத்து விதமான வன்முறைகளும், குற்றங்களும் குறையும். சமூக மாற்றம் என்பது சாத்தியப்படும். நல்ல கல்வி அளிப்பதன் மூலம்தான் சமூகச் சீர்திருத்தம் சாத்தியம்.