லெ
ட்டீஷியா இபனேஸ், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 35 வயதுப் பெண். பாரிஸில் ஒரு அரசுப் பள்ளியில் இலக்கிய ஆசிரியையாகப் பணிபுரிகிறார். தமிழைப் பயின்றவர். நவீன தமிழுக்குத் தன் படைப்புகளால் மகுடம் சூட்டிய எழுத்தாளர் மெளனியின் எழுத்துக்களைத் தன் ஆய்வுக்கான களமாக எடுத்திருக்கிறார்.
மெளனியைப் பற்றித் தெரிந்தவர்கள் சிலரைச் சந்தித்துத் தன் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள இந்தியா வந்திருந்தார். அந்த வகையில் ‘மெளனியின் மறுபக்கம்’ என்ற நூலை எழுதிய என்னைச் சந்தித்தார் லெட்டீஷியா. தமிழ் இலக்கியங்கள் தொடர்பான அவரது அறிவு அபாரமாக இருந்தது. மணிக்கொடி, எழுத்து, கசடதபற, அஃக் போன்ற புகழ்பெற்ற பத்திரிகைகளை அவர் அறிந்திருந்ததோடு, பி.எஸ்.ராமையா, சி.சு.செல்லப்பா, க.நா.சு., எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான்குஞ்சு, தருமு அரூப் சிவராம், வெங்கட்சாமிநாதன், அசோகமித்திரன், கி.அ.சச்சிதானந்தம், திலீப்குமார் எனப் பல எழுத்தாளர்களைப் பற்றிச் சரளமாக அவர் பேசியபோது மிகவும் வியப்பாக இருந்தது.
லெட்டீஷியா தமிழைக் கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் பேசுகிறார். ஆனால், எவ்வளவு கடினமான இலக்கியத் தமிழாக இருந்தாலும் அதைப் படித்துப் புரிந்துகொள்வதிலும் பிழையே இல்லாமல் தமிழை எழுதுவதிலும் அசரவைக்கிறார்.
‘‘நான் முதலில் தத்துவம் படித்தேன். பின்பு இலக்கியத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவில் தேர்ச்சி பெற்று, ஒரு அரசாங்கப் பள்ளியில் இலக்கிய ஆசிரியையாக 2005 முதல் பணியாற்றிவருகிறேன். தமிழ் மொழியின் மேன்மை குறித்துச் சில நண்பர்கள் சொன்னதால், பாரிஸில் உள்ள INALCO-ல் (Institute National des Langues Orientales) தமிழ் படிக்க ஆரம்பித்தேன். தமிழில் உள்ள நவீன இலக்கியங்கள் என்னைக் கவர்ந்தன. என் எம்.ஃபில். ஆய்வுக்கு லா.ச.ரா.வின் நாவல்கள், சிறுகதைகளை எடுத்துக்கொண்டேன். லா.ச.ரா. பற்றிப் படித்தபோதுதான் மெளனியின் கவிதைமயமான மொழிநடை கொண்ட சிறுகதைகள் பற்றிக் கேள்விப்பட்டேன். தொடர்ந்து மெளனியின் சிறுகதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். அவரது எழுத்தின் கனம், ஆழம், மொழியை உன்னதமாகக் கையாளும் நடையழகு ஆகியவை என்னை வசீகரித்தன.
மெளனியின் எழுத்து, முதல் வாசிப்பில் புரிந்துவிடக்கூடியதல்ல. எனவே, திரும்பத் திரும்பப் படித்தேன். புரியும்வரை என் வாசிப்பு தொடர்ந்தது. மெளனி 24 சிறுகதைகளை மட்டுமே எழுதிப் புகழ்பெற்றிருக்கிறார். அவரது சிறுகதைகளில் ‘மனக்கோட்டை’ எனக்கு மிக மிகப் பிடித்த கதை. ஓர் மனிதனின் அக மனதை ஆழமாகச் சொல்லும் எழுத்து அது. மெளனியின் 16 சிறுகதைகளை பிரெஞ்சு மொழியில் நான் மொழிபெயர்த்திருக்கிறேன். இவை ஒவ்வொன்றாக வெளிவரவிருக்கின்றன. பிரெஞ்சு இலக்கிய ரசிகர்களுக்கு இந்தக் கதைகள் பொக்கிஷமாக அமைந்து அருமையான அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன்” என்கிறார் லெட்டீஷியா.
லெட்டீஷியாவின் கணவர் பாரிஸில் இலக்கிய ஆசிரியர். மகாபாரதம் தனக்குப் பிடித்த காவியம் என்று சொல்லும் லெட்டீஷியா, அதில் வரும் ‘சத்தியவதி’ என்ற பெயரைத் தன் மகளுக்குச் சூட்டியிருப்பதாகப் பெருமைபட்டுக்கொள்கிறார்.