“செயலாற்ற முடிந்தவர்களின் செயலற்ற தன்மை
அதிகம் தெரிந்துகொள்ள வாய்ப்பிருந்தும் காட்டிய அக்கறையின்மை
அதிஅவசியம் என்ற சந்தர்ப்பத்திலும் மௌனமாகிப்போன நீதியின் குரல்
இவைதான் தீமைகளும் வெற்றிபெறும் சூழ்நிலையை ஏற்படுத்தித்தந்தவை”
Haile Selassie
பெண் போலியான காரணங்களால் சமூகக் கோட்பாடுகளால் நயவஞ்சகமான கட்டுப்பாடுகளால் கண்களுக்குத் தெரியாத கண்ணிகளால் பிணைக்கப்பட்டிருந்தாள். போலிக்கவசங்களில் இருந்து அவளைப் பொதுவெளிக்கு இழுத்துவந்தவற்றில் சட்டத்துக்கு முக்கிய இடம் உண்டு. சட்டங்கள், பெண்ணை ஒரு உயிராக உணரவைத்தன. அவள் கருத்துக்களை எண்ணங்களை, லட்சியங்களை வெளிப்படையாகச் சொல்லும் நம்பிக்கையை அளித்தன. ஆனால் குடும்பம், குழந்தைகள், உறவுகள், கண்ணியம், நாகரிகம், மரபு, பாரம்பரியம் என ஏராளமான நுண்ணிழைகளால் ஒவ்வொரு பெண்ணின் சுதந்திரமும் சூட்சுமமாகப் பறிக்கப்பட்டிருக்கிறது. அதனால் சட்டத்தின் பலன்களை அவளால் முழுமையாகப் பெற முடியாமல் போகிறது.
மோட்டார் வாகன விபத்துக்கான இழப்பீடுகளைத் தீர்மானிப்பதில்கூட ஆணுக்கும் பெண்ணுக்குமான பாகுபாடும் இரட்டை அளவுகோல் முறையும் பின்பற்றப்படுகின்றன. கணவனும் மனைவியும் இறந்துவிட்ட ஒரு வழக்கில் இழப்பீட்டைத் தீர்மானிக்கும்போது வேலைக்குப் போகும்/ போகாத கணவனது வருமானத்தைக் கணக்கிடுவதில் எந்த மனத்தடையும் குறுக்கிடுவதில்லை. ஆனால், வீட்டிலும் வெளியிலும் உழைத்து ஓடாகிப்போன மனைவிக்கான வருமான இழப்பீட்டை எந்தத் தயக்கமும் இல்லாமல் மறுப்பது இயல்பானதாக இருக்கிறது.
அப்படியொரு இல்லத்தரசி விபத்தில் இறந்துவிட்டால், அந்த இழப்பீட்டை நிர்ணயம் செய்யும் அடிப்படைக் காரணிகள் என்னவாக இருக்க முடியும்? உண்மையில் ஒரு பெண் இல்லத்தரசியாகச் செய்யும் வேலைகளுக்கு விலை வைக்க முடியுமா? தாய்ப்பாலுக்கு விலை வைக்க முடியுமா என்று கேட்பது போலத்தான் இதுவும். தாய்ப்பாலுக்கு விலை வைக்கிற ‘முலைப்பால் கூலி’ எனும் சடங்கை, இன்றைய நாட்களில்கூட சில இனத்தைச் சேர்ந்தவர்களின் திருமணச் சடங்குகளில் காண முடியும். எனவே, முலைப்பாலுக்குக் கூலி நிர்ணயித்த அதே பாணியில் இல்லத்தரசியின் சேவைகளுக்கு விலை போட வேண்டிய நிர்ப்பந்தம் ஒருமுறை நேர்ந்தது.
மதுராந்தகத்தில் மாலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் சாலை விபத்தில் இறந்துவிட்டார். அவருக்கு 50 வயது இருக்கலாம். முத்து முத்தாக ஆறு பிள்ளைகள். அதில் ஆணும் பெண்ணும் சரி பாதி. மாலா காய்கறி விற்க, அவருடைய கணவர் கூலி வேலை செய்தார். காய்கறி விற்கப்போகும்போது, தறிகெட்டு ஓடிய அரசுப் பேருந்துக்கும் மோட்டார் சைக்கிளுக்கும் இடையில் மாட்டி உயிர்விட்டார்.
வீட்டிலும் வெளியிலும் கணவனுக்கு இணையாகவும் துணையாகவும் பாடுபட்டுவந்த அவரது திடீர் மரணம், அந்தக் குடும்பத்தில் பேரிடியாக இறங்கியது; இருளாய்ச் சூழ்ந்தது. அவரது மரணத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு கணவரும் குழந்தைகளும் கீழ்கோர்ட்டுக்குப் போனார்கள். கோர்ட்டில் அரசுப் பேருந்து நிறுவனம், மோட்டார் சைக்கிள் நிறுவனம், அவர்கள் காப்பீடு செய்திருந்த நிறுவனம் ஆகிய மூவரும் பொறுப்பு என்று தீர்ப்பு சொல்லப்பட்டது.
நிவாரணம் கொடுக்கும்போது கொஞ்சம் நிதானம் தவறிவிட்டது கீழ்கோர்ட். போதாக்குறைக்கு அரசுப் பேருந்து நிறுவனம், ‘இறந்தவருக்கு நிரந்தர வருமானம் கிடையாது. ஏதாவது சம்பாதித்திருந்தால் அதற்குச் சான்றிதழ் இருக்கும்’ என்று சாக்கு போக்கு பேசியது. அதையும் கேட்டுக்கொண்டு மாலா காய்கறி விற்றுச் சம்பாதித்திருந்தால் மாதம் 3,500 ரூபாய் வருமானம்தான் என்று தோராயக் கணக்குப் போட்டது. அதிலும் மாலா தன் சொந்த செலவுக்குக் கொஞ்சம் பணம் எடுத்துக்கொண்டு மீதியைத்தான் குடும்பத்துக்குத் தந்திருப்பார் என்று மதிப்பிட்டது.
ஏழு லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டவர்களுக்கு அரசுப் பேருந்து நிறுவனம் 5 லட்சம் கொடுத்தால் போதும் என்று கீழ் கோர்ட் தீர்ப்பு சொன்னது.
இந்த 5 லட்சம் அதிகம் என்று அரசுப் பேருந்து நிறுவனம், உயர் நீதிமன்றத்துக்கு வந்தது. அப்போதுதான் கீழ்கோர்ட், மாலா விஷயத்தில் செய்த தவறு வெளிச்சத்துக்கு வந்தது. மாலா வீட்டுக்கு வெளியே காய்கறி விற்றுச் சம்பாதித்த வகையில் மாதம் 3,500 ரூபாய் சம்பாத்திருப்பார் என்பதையே ஏராளமான எதிர்ப்புக்கிடையில் ஏற்றுக்கொண்ட கீழ்கோர்ட், அவரது வாழ்க்கை காய்கறி வியாபாரம் என்ற பகுதிநேரப் பொறுப்பு, இல்லத்தரசி என்ற முழுநேரப் பொறுப்பு என இரட்டைப் பொறுப்பு கொண்டது என்பதைப் புரிந்துகொள்ளவில்லை. சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே இயங்கிவரும் நீதிமன்றங்கள், பொதுப்புத்தியின் அடிப்படையில் இயங்குவதும் அந்தப் பொதுப்புத்தியை ஒட்டியே அவற்றின் தீர்ப்புகளும் நடைமுறைகளும் இருக்க வேண்டியதும் அவசியம். ‘சும்மா வீட்டில் இருக்கிறாள்’ என்று சொல்லப்படும் இல்லத்தரசிகளின் இருப்பையும் அவர்களின் முக்கியத்துவத்தையும் உணரக்கூடிய உன்னத தருணங்கள், தாய் வீட்டுக்குப் போன மனைவி வீடு திரும்ப தாமதிக்கும் சந்தர்ப்பங்களில் சில கணவர்களுக்கு வாய்க்கலாம்.
ஒரு பெண் வீட்டுக்கு வெளியில் வேலைசெய்து சம்பாதித்துக் குடும்பத்துக்குத் தரும் பணத்தைத் தவிர அதாவது பணரீதியிலான பங்களிப்பு தவிர கண்ணுக்குத் தெரியாத வகையில் வீட்டில் செய்யும் அனைத்து வேலைகள் மூலமான பங்களிப்பு கருத்தில்கொள்ளப்படுவதில்லை. அப்படிக் கொள்ளப்பட்டாலும் அவை குறைத்தே மதிப்பிடப்படுகின்றன. இவற்றிலும் அவள் உடல் உழைப்பு மூலம் அளிக்கும் சேவைக்கான மதிப்பு பெரும்பாலும் அங்கீகரிக்கப்படுவதே இல்லை. ஆதலால் அந்த உழைப்புக்கு இணையான பணமதிப்பு, மரணமடைந்த இல்லத்தரசிகளுக்கான இழப்பீட்டில் மதிப்பீட்டுத் தளத்துக்கே வருவதில்லை.
ஒரு இல்லத்தரசியின் பங்களிப்பை ஏன் அவள் இறந்த பின் மதிப்பிட வேண்டும் என்று கேட்கிறார் ஒரு வழக்கறிஞர். பெண்கள் குடும்பத்துக்கும் குழந்தைகளுக்கும் ஆற்றும் சேவையை ஏன் அவள் உயிருடன் இருக்கும்போதே அங்கீகரிக்கக் கூடாது? ஒரு பெண்ணின் பங்களிப்பைப் பணரீதியில் மதிப்பிடுவது எப்போதும் சாத்தியமல்ல என்றாலும் திருமண வாழ்வில் இல்லத்தரசிக்கு உள்ள பொருளாதார உரிமைகளையும் நிதி அதிகாரங்களையும் அவள் கணவனுக்கு இணையாக வழங்க வேண்டும்.
மகளிரியல் பேராசிரியர் ஒருவர், இல்லத்தரசிகளின் பொருளாதாரப் பங்களிப்பை மதிப்பிடப் பல்வேறு முறைகளைப் பரிந்துரைக்கிறார். அவற்றில் ஒன்று ‘சந்தை முறை’. அதன்படி ஒரு இல்லத்தரசி செய்யும் ஒவ்வொரு வேலையையும் செய்ய வெளியாளை அமர்த்தினால் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய ஒரு மணி நேரத்துக்கான பண மதிப்பைக் கணக்கிட வேண்டும். இந்த வகையில் உயர் நீதிமன்றம் மாலா உயிருடன் இருக்கையில் குறைந்தபட்சம் மாதம் ரூ.6,000 சம்பாதித்திருக்கலாம் என்ற அடிப்படையில் அவரது மரணத்துக்கு ஏற்பட்ட இழப்பின் தொடர்ச்சியான இழப்பீடு அதிகரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இழப்பீட்டுத் தொகையை ரூ.4,99,500- லிருந்து ரூ.13 லட்சமாக உயர்த்தி வழங்க ஆணையிட்டது.
பெண்கள் அன்றும் இன்றும் வீட்டுக்கு உள்ளும் புறமும் அந்த வீட்டு நலனுக்காக வியர்வை சிந்தி உழைக்கும் இரட்டைப் பொறுப்பையும் திறம்பட நிறைவேற்றுகிறார்கள். ஆனால், இந்தச் சமூகமோ பெண்ணை மட்டுமல்ல அவளது சேவையையும் ஒட்டுமொத்தமாக உதாசீனம் செய்தே வந்திருக்கிறது. பெண்ணின் இருப்பையும் சிறப்பையும் வெளிச்ச விரல்கள் தீண்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.
(பாதைகள் விசாலமாகும்)
கட்டுரையாளர், முனைவர், நீதியரசர்
தொடர்புக்கு: judvimala@yahoo.com