கல்வி, சேவை, தொழில் போன்றவற்றில் என் இருப்பை வெளிப்படுத்தி, சிறந்த பெண்மணியாகச் சமுதாயத்தில் உயர வேண்டும் என்ற லட்சியம் படிக்கும்போதே உருவாகிவிட்டது. தவிர்க்க முடியாத காரணத்தால் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பயிலும் போதே திருமணம் செய்துவைத்துவிட்டனர். பெரிதாக வருமானம் காணாத சுயதொழிலில் இருந்தார் கணவர். அவரிடம் என் லட்சியத்தை வெளிப்படுத்தினேன். எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதற்குத் தன் பூரண ஒத்துழைப்பு உண்டு என்று நம்பிக்கையை விதைத்தார். ஆண்டுகள் கடந்தன. இரு குழந்தைகளுக்குத் தாயானேன். பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தனர்.
நீண்ட யோசனைக்குப் பிறகு, அழகுக் கலைப் பயிற்சி பெற நினைத்தேன். சென்னையில் புகழ்பெற்ற பெண்கள் அழகுக் கலைப் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து, விடுதியில் தங்கி, இரண்டு மாதங்கள் திறம்படக் கற்றேன். அந்த இரண்டு மாதங்களும் என் கணவர் சமையலில் தொடங்கி, குழந்தைகளைப் பராமரிப்பது வரை அத்தனை விஷயங்களையும் செய்து, குழந்தைகளுக்கு ஏக்கம் வராமல் பார்த்துக்கொண்டார்.
பயிற்சி முடித்த பிறகு வளரும் நகரமான திருக்கோவிலூரில் அழகு நிலையம் அமைத்தால் தொழில் வாய்ப்பு மிகுதியாக இருக்கும் என்ற என் யோசனையை ஏற்றுக்கொண்டு, சொந்த ஊரைவிட்டு வரச் சம்மதித்தார். திருக்கோவிலூரில் பெண்கள் அழகு நிலையம் அமைத்து, வெற்றிகரமாகப் பத்து ஆண்டுகளைக் கடந்துவிட்டேன். சிறந்த பியூட்டிஷியன் என்ற பெயரையும் எடுத்துவிட்டேன். எட்டுப் பெண்களுக்கு அழகுக் கலை பயிற்சியளித்து, அவர்களைச் சொந்தக் காலில் நிற்க வைத்திருப்பதில் நிறைவாக உணர்கிறேன். பள்ளி நாட்களில் வளர்த்துக் கொண்ட லட்சியத்தை அடைந்துவிட்டதாக மகிழ்கிறேன். என் உயர்வுக்கு உறுதுணையாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும் என் கணவரை நினைத்துப் பெருமைகொள்கிறேன்.
- ரா.திரிபுரசுந்தரி, திருக்கோவிலூர்.
உங்க வீட்டில் எப்படி? தோழிகளே, இதைப் படித்ததும் உங்கள் வீட்டு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளக் கைகள் பரபரக்குமே, கணவனே உங்கள் தோழனாக மாறிய தருணத்தை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள். |