பெண் இன்று

மொழியின் பெயர் பெண் - ஆந்த்ரே சோடென்காம்ப்: ஜிப்ஸி இதயம்

ஆசை

பெல்ஜியத்தின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவரான ஆந்த்ரே சோடென்காம்ப், செந்த்-ஜோஸ்-டென்-நோட் நகரத்தில் 1906-ல் பிறந்தார். டச்சுக்காரரான அவருடைய தந்தை ஒரு பத்திரிகையாளர். ஆந்த்ரேயின் அம்மா ஃப்ளெமிஷ்காரர். ஆந்த்ரேயின் மூதாதையர் நாடோடி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுடைய இயல்பைத் தன்னிடம் தக்கவைத்துக்கொள்ள ஆந்த்ரே முயன்றார். ஆந்த்ரே, ஆறு வயதில் பெற்றோரை இழந்தார். அதன் பிறகு தனது தாய்வழி தாத்தா-பாட்டியால் வளர்க்கப்பட்டார்.

சிறு வயதிலிருந்தே கவிதை எழுத ஆரம்பித்துவிட்டார் ஆந்த்ரே. அவர் எழுதுவதைத் தடுக்க அவரது பாட்டி எவ்வளவோ முயற்சி செய்தார். வீட்டுப்பாடங்களைச் செய்யுமாறு வற்புறுத்தினார். எனினும் பாட்டியின் முயற்சி பலிக்கவில்லை.

மல்லார்மே, ஆர்தர் ரைம்போ, போல் வலேரி போன்றவர்களின் எழுத்தினால் ஆந்த்ரே ஈர்க்கப்பட்டார். வரலாறு, புவியியல் ஆகிய இரண்டும் அவருக்கு விருப்பமான இரண்டு பிற துறைகள். 1938-ல் கமீயே லைபா என்பவருடன் மணவாழ்வில் இணைந்தார். 1959-லிருந்து 1971 வரை பொது நூலகங்களின் ஆய்வாளராக ஆந்த்ரே பணிபுரிந்தார். புத்தகங்களின் மீது மிகுந்த காதல் கொண்டிருந்த ஆந்த்ரே, நூலகத் துறையில் முக்கியமான மாற்றங்கள் சிலவற்றை ஏற்படுத்தினார்.

ஆந்த்ரே சோடென்காம்ப்பின் வாழ்நாளில் அவருக்குப் பல அங்கீகாரங்கள் கிடைத்தன. தெபோர்து-வல்மோர் பரிசு, லூயிஸ் லபீ பரிசு போன்ற பரிசுகள் கிடைத்தன. ஆந்த்ரே பத்துக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டார். 2004-ல் தனது 98-வது வயதில் ஆந்த்ரே மரணமடைந்தார்.

பெல்ஜியத்தில் ஆந்த்ரே சோடென்காம்ப் மிகவும் மதிக்கப்படுபவராக இருந்தாலும் உலக அளவிலான வெளிச்சம் அவருக்குக் கிடைக்கவில்லை. 2000-ல் வெளியான ‘Belgian Women Poets - An Anthology’ என்ற புத்தகத்தில் ஆந்த்ரேயின் கவிதைகளில் சில பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அந்தப் புத்தகத்திலிருந்து மூன்று கவிதைகள் இங்கே மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ஆந்த்ரேயின் வாழ்க்கைக் குறிப்புகளும் அந்தப் புத்தகத்தின் அடியொற்றியே இங்கே தரப்பட்டிருக்கின்றன.

நான்தான் உன்னை நிர்மாணித்தேன்…

என் அன்பே, என் சாம்பல் நகரமே

நான்தான் உன்னை நிர்மாணித்தேன்,

ஒவ்வொரு தெருவாய் நான் தொலைந்துபோகும்வரை.

தினமும் காலையில் அலைமோதிய விரிகடலுக்கு அப்பால் எழுப்பினாய் நீ

விடாப்பிடியாக உனது கம்பங்களையும் கோபுரங்களையும்.

அந்நாட்களில் நானுன்னைத் தேடினேன் நெரிசல் மிகுந்த உன் சந்தைகளில்,

கம்பீரமான உன் உடலிலும்

உன் இன்பப் புதையல்களிலும்,

மோதிரம் அணியாத வெற்று விரல்களால் உன் இதயத்தை அமைதிததும்பும்

பணிப்பெண்கள் நீவியபடி இருக்கும்

ஜொலிக்கும் உன் அரண்மனைகளிலும்.

நான் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும்

எனது நடுத்தர வர்க்கத்தின் ஜம்பத்தை நழுவிடாமல் சாமர்த்தியம் செய்துகொண்டு,

என் ஆன்மா உடுத்தியிருப்பது வெண்ணிற லினன் துணியையோ

என் கபடமான தலைமறைப்புத் துணிக்கடியில் அணிந்திருப்பது டச்சுப்

பொற்பதக்கத்தையோ தவிர வேறொன்றும் இல்லை.

இனிய வானிலையைத் தண்டித்தபடி ஆட்சி புரிந்தேன் என் நகரை.

அப்புறம் சரிந்துவிழத் தொடங்கினாய், ஒவ்வொரு கல்லாய்,

கூதல் காற்றால் ஆட்கொள்ளப்பட்டு, யாருக்காக இப்படி? ஆயினும், எந்தப்

பிரயோசனமுமின்றி, இன்னும் அதே சதையை உடுத்தியபடி, அதே அன்னைக்குப்

பிறந்தவனாய்,

தூரத்தில் மட்டுமே உன் சாயல் இருக்கிறது உனக்கு.

வெறுப்போடும் அச்சத்தோடும் நீ என்னிடம் திரும்பிவந்தால்

நீ அறிவாயா, உன் பிம்பத்தை என்னுள் நீ தோயச்செய்துவிட்டுப் போனதை?

உன் பிச்சைக்காரத்தனமான முஷ்டி என் இதயத்தைக் குத்திக்கொண்டே இருந்தாலும்

மினுமினுக்கிறேன் நான் புயலுக்குப் பின்னான பச்சை வனம்போல்.

மரணத்துள் செல்வேன் நான்

மரணத்துள் செல்வேன் நான்

என் தாயின் கருவறைக்குள் செல்வதைப் போல.

அவ்விடம் அமைதியாக இருக்கும், நிசப்தமானதாகவும் பாதுகாப்பாகவும்.

ஒருவழியாக விடுபடுவேன் நான்

என்னைச் சுற்றிப் பின்னியிருந்த வாழ்விலிருந்து.

மண்ணுக்கடியில் உரக்கச் சிரிப்பேன்.

ஆன்மாவால் மூளைமேல் பொறிக்கப்பட்ட அனைத்தும்

இப்போது அமைதியுறும்,

அழிக்க முடியாத குறிகள் பொறித்திருந்த காகித ஏடு.

நான் ஆகக்கூடும் மற்றொரு புத்தகமாய்.

லண்டன் மம்மி

அவனைச் சுற்றிப் பின்னியிருந்தவற்றுள்

இரண்டாயிரம் ஆண்டுகள் தூங்கியவன் அவன்.

ஒவ்வொரு சுற்றாய் உரித்தெடுக்கும்போது

அவர்கள் நிர்வாணப்படுத்துகிறார்கள்

அவனது மரணத்தை.

நிரந்தரத்தை அவனிடமிருந்து நீக்கிவிடுகிறார்கள்.

முகத்தின் எலும்பில் செதுக்கப்பட்ட ஆன்ம சிதைவுகள்

இன்னும் நிழலாடுகின்றன…

ஆஹா! சிந்தனையில் கழிந்ததுதான் எவ்வளவு நீண்ட காலம்!

SCROLL FOR NEXT