பெண் இன்று

கோலங்கள் பலவிதம்!

செய்திப்பிரிவு

மார்கழி மாதம் தொடங்கிவிட்டது. இனி விதவிதமாகப் புள்ளிக் கோலங்களும் பூக்கோலங்களும் வாசலை அலங்கரிக்கத் தொடங்கும். இன்றும் பலரது வீடுகளில் சாணத்தை உருட்டி அதன் மேல் பூசணிப் பூவை வைத்து கோலத்தை அலங்கரிப்பது வழக்கம்.

# மாதங்களில் நான் மார்கழி என்று கண்ணன் குறிப்பிடுகிறார். வாசலில் இடப்படும் கோலம் மெழுகப்பட்ட தரைக்கு அலங்காரமாக விளங்கு வதாலும், பூஜையறைக்கு அழகு சேர்ப்பதாலும் ‘கோலம்’ என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.

# அரிசிப் பொடி, கல் பொடி, ஊறவைத்து அரைத்த பச்சரிசி மாவு இவற்றால் இடப்படும் கோலங்கள் புனையா ஓவியங்கள் என்றும் வண்ண ஓவியங்கள் என்றும் குறிப்பிடப்படும்.

# மேனியைக் குங்குமத்தாலும் சந்தனத்தா லும் அழகுபடுத்துவதுபோல் பூமியை இந்தக் கோலங்கள் அழகுபடுத்துகின்றன என்பதால் இதற்குத் தொய்யில் என்றும் ஒரு பெயர் இருக்கிறது.

# அந்தக் காலத்தில் மூலிகைகள், மருதாணிப் பொடி, பச்சிலைப் பொடி, மஞ்சள் பொடி, பல வகை மலர்களைக் காயவைத்து சேகரித்தப் பொடி ஆகியவற்றைக் கொண்டு கோலங்கள் வரையப்பட்டிருக்கின்றன.

# இடப்பட்ட இடத்துக்கு ஓர் ஒளியைக் கொடுப்பதாலும் வாழ்க்கையை ஒளிமயமாக்கு பவை கோலங்கள் என்று நம்பப்படுவதாலும் ஒளி என்ற பெயருடைய கோலம், வாசல் கோலமானது என்றும் சொல்கிறார்கள்.

# முதன் முதலில் கோலமிடும் வழக்கத்தை ஆண்டாளே பயன்படுத்தியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

# கோலங்கள் நடுப்புள்ளியில் தொடங்கி, தேவைக்கேற்ப நீட்டப்படுகின்றன. பின்னர் வட்டமாகவோ, முக்கோணமாகவோ நீட்டப்படும். கோலங்களுக்குக் கட்டுப்பாட்டுடன் கூடிய எல்லை உண்டு.

# கோலங்களில் ஸீபன், ஜீவா, பன்பர், பேல்பரத் என்னும் பெயருள்ள கோலங்கள் புகழ்பெற்றவை.

# கோலங்கள் இடுவது கைகளுக்குப் பயிற்சி, மூளைக்கு வேலை. குனிந்து நிமிர்வதால் உடற்பயிற்சி செய்வது போலவும் ஆகும். மார்கழி அதிகாலையில் கோலம் போடுவதால் ஓசோன் உடலில் படுவது நல்லது. அரிசி மாவால் கோலமிடுவதால் எறும்புகளுக்கு உணவிடும் பாக்கியமும் கிடைக்கும். கோலத்தில் வைக்கப்படும் பூசணிப் பூவின் மகரந்த வாசனை உடலுக்கு இதத்தைக் கொடுக்கும்.

- ஜானகி ரங்கநாதன், சென்னை.

SCROLL FOR NEXT