பெண் இன்று

திரைக்குப் பின்னால்: உழைப்பு கைவிடாது!

கா.இசக்கி முத்து

திரைப்படங்களில் சாதாரணமாக ஒரு பாடலைக் கடந்துவிடுகிறோம். ஆனால், அதற்குப் பின்னால் பெரும் உழைப்பு இருக்கிறது. அதில் நடன இயக்குநர்களின் பங்கு மிக முக்கியமானது. தமிழ்த் திரையுலகில் குறிப்பிடத்தக்க நடன இயக்குநர்களில் ஒருவர் ராதிகா. ‘பிரம்மா.காம்’ படத்துக்காக ஆக் ஷன், கட் சொல்லிக்கொண்டிருந்தவரிடம் பேசினோம்.

நடன இயக்குநராக வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது?

வீட்டில் எல்லோருமே கலைத் துறைதான். ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் நம்பியாருக்கு அக்காவாக வரும் பி.எஸ்.சீதாலெட்சுமி என் அம்மா. நான்கு வயதிலிருந்து பரதநாட்டியம் கற்றுக்கொண்டேன்.

12 வயதிலேயே டான்சர்ஸ் யூனியனில் உறுப்பினர் அட்டை பெற்றுவிட்டேன். அப்போதிலிருந்தே பரபரப்பாகப் பணியாற்றிவருகிறேன். நடன இயக்குநராக முதல் வாய்ப்பு கிடைப்பதுதான் கடினமாக இருந்தது. அதைக் கொடுத்தது இயக்குநர் மிஷ்கின். ‘முகமூடி’ படத்தில் அனைத்துப் பாடல்களுக்கும் நான்தான் நடன அசைவுகளை வடிவமைத்தேன். பிறகு ‘கத்தி சண்டை', ‘தர்மதுரை', ‘கிடாரி', ‘வாகா', ‘தாரை தப்பட்டை' என்று 100 படங்களை நடன இயக்குநராகக் கடந்துவிட்டேன்.

நடன இயக்குநர்கள் அதிகரித்துவிட்டார்களா?

போட்டிகள் நிறைந்த இந்தத் திரையுலகில் எனக்கான அடையாளத்தை உருவாக்குவது ரொம்பக் கடினமாதான் இருக்கு. முன்புபோல் அதிகமான படங்கள், குறைந்த நடன இயக்குநர்கள் என்கிற சூழல் இப்போ இல்லை. குறைந்த படங்களே வருகின்றன. ஆனால் அதிக எண்ணிக்கையில் நடன இயக்குநர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் கலைத் துறையில் உண்மையான உழைப்பு என்றைக்குமே கைவிடாது. நான் எப்படி உழைப்பேன் என்று என்னைப் பற்றித் தெரிந்தவர்களுக்குப் புரியும். இப்போது இருக்கும் குறைந்த முதலீட்டில் நல்லபடியாக ஒரு பாடலை ராதிகா மாஸ்டரால் தர முடியும் என்று நம்பி, வாய்ப்பு கொடுக்கிறார்கள்.

மறக்க முடியாத பாராட்டு?

‘மேகா’ படத்தில் வரும் ‘புத்தம் புது காலை’ பாடலை முழுமையாகப் பார்த்துவிட்டு, ‘உயிர் கொடுத்திருக்கிறாய்’என்று சொன்னார் இளையராஜா. என் வாழ்நாளில் மறக்கவே முடியாத பாராட்டு இது. அந்தப் பாடல் என்னிடம் வந்தது. இயக்குநர் சொன்ன நாட்களில், சொன்ன முதலீட்டில் அந்தப் பாடலை முடித்துக் கொடுத்தேன். இப்போதும் இணையத்தில் அந்தப் பாடல் பலராலும் பகிரப்பட்டுவருகிறது.

உங்கள் வீட்டில் என்ன சொல்கிறார்கள்?

வீட்டில் அனைவருக்கும் பெருமை. “நீ எங்களுடன் இருக்கும்போது உன் திறமை தெரியவில்லை. தனியாகப் போராடி இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்துவிட்டாய்” என்று நண்பர்கள் பாராட்டுகிறார்கள்.

SCROLL FOR NEXT