தென்னாப்பிரிக்காவில் சராசரிக் குடும்பத்தின் குழந்தையாகப் பிறந்து வளர்ந்தவர் ஷிபோங்கீலி சம்போ. விமானப் பணிப் பெண்ணாக ஆக வேண்டும் என்று விரும்பியவர், உயரம் போதாது என்று ஒதுக்கப்பட்டார். அந்த நிராகரிப்பை அவர் தோல்வியாகக் கருதவில்லை. மகத்தான மற்றொரு வாய்ப்பு தனக்குக் காத்திருப்பதாகவே அவர் நம்பினார். அந்த நம்பிக்கையும் அதற்கான முயற்சிகளும் அவரைத் தொடர்ந்து வழிநடத்தின. விமானப் பணிப் பெண்ணாகத் தேர்வாகாதவர், சில ஆண்டுகளிலேயே, ‘விமான சேவையை ஆரம்பித்த முதல் ஆப்பிரிக்கப் பெண்’ என்ற சாதனையைப் படைத்தார்!
ஒரு கனவு பிறந்தது
சின்னக் குழந்தையாகத் தெருவில் விளையாடும்போது, தலைக்கு மேல் பறக்கும் விமானத்தைப் பார்த்துக் குதூகலிப்பார் சம்போ. மெதுவாக அவர் மனதில் விமானப் பணிப் பெண்ணாக வேண்டும் என்ற கனவு உருவானது. அந்தக் கனவு நனவாகும் நாளுக்காகக் காத்திருந்தார் சம்போ.
அந்த நாளும் வந்தது. விமான சேவை நிறுவனம் நடத்திய அனைத்துத் தேர்வுகளிலும் சம்போ எளிதாகத் தேறினார். ஆனால் உடற்தகுதியின்போது உயரம் போதாது என்று நிராகரிக்கப்பட்டார். குழந்தைப் பருவத்திலிருந்து அவரோடு பயணித்த கனவு கைநழுவியது. அதிலிருந்து அவரால் எளிதில் மீண்டுவிட முடியவில்லை. படிப்பே மருந்து என்று முடிவு செய்தவர், மேற்படிப்பு படிக்க ஆரம்பித்தார். புடம் போட்ட தங்கமாக மாறினார்.
மாத்தி யோசி
ஏமாற்றத்திலிருந்து மீண்டபோதும், உயர பறக்க வேண்டும் என்ற தனது கனவு உயிர்ப்புடன் இருப்பதை உணர்ந்தார். “விமானத்தில் பறக்க விமானப் பணிப் பெண்ணாகத்தான் இருக்க வேண்டுமா?” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டார். அதற்கு விடை தேடும் முயற்சியில், புதிய விமான சேவை ஒன்றை ஆரம்பிக்க முடிவு செய்தார். சுற்றியிருந்தவர்கள் வாயடைத்துப் போனார்கள். விமானப் பணிப் பெண் வாய்ப்பு கிடைக்காத ஏக்கத்தில் இந்தப் பெண்ணுக்கு ஏதோ ஆகிவிட்டது என்றார்கள். எதையும் கண்டுகொள்ளாமல், எடுத்த காரியத்தில் படிப்படியாக முன்னேறினார். சொத்துகளை விற்றார். மிகப் பெரும் விமான சேவை நிறுவனமான எம்.சி.சி ஏவியேஷன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, எஸ்.ஆர்.எஸ் ஏவியேஷன் நிறுவனத்தை உருவாக்கினார்.
பெண்களுக்கு முன்னுரிமை
இன்று ஆப்பிரிக்க நாடுகளில் பிரத்யேகமான விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் சுற்றுலா, விஐபி பயணங்கள், வர்த்தகப் பயன்பாடுகள் என்று சம்போ உருவாக்கிய விமான சேவை நிறுவனம் விரிந்து வளர்ந்திருக்கிறது. ஆண்கள் அதிகம் புழங்கும் துறையாக இருந்த விமான சேவையில் மாற்றத்தைக் கொண்டுவர முடிவு செய்து, பெண் விமானிகளுக்கு முன்னுரிமை அளித்துவருகிறார். ஆப்பிரிக்கப் பெண்களுக்குப் பிரத்யேகப் பயிற்சி அளித்து, பணியில் சேர்த்துக்கொள்கிறார். அடுத்த கட்டமாக உலகளாவிய சேவைகளில் தனது நிறுவனத்தை உயர்த்தும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார் சம்போ.
“விமானப் பணிப் பெண்ணாக நான் நிராகரிக்கப்பட்டதற்கு நன்றி சொல்கிறேன். இல்லாவிட்டால், விமான சேவையை நடத்தும் அளவுக்கு வந்திருக்க மாட்டேன். எதன் பொருட்டும் உங்களது கனவுகளை நசுக்கி விடாதீர்கள். உயிர்ப்போடு இருக்கும் லட்சியக் கனவுகளே, உங்களின் எதிர்காலத்தை உயரத்துக்குக் கொண்டு செல்லும்” என்று சொல்லும் சம்போ, தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும் வலம் வருகிறார்.