பெண் இன்று

முகங்கள்: நான் யாருக்கும் உந்துசக்தி அல்ல!

ம.சுசித்ரா

கல்லூரி கேன்டீனுக்குள் நுழைந்த ஹேபன் கிர்மா, அங்கிருக்கும் மெனு கார்டை கையில் எடுத்துத் தடவினார். பார்வையற்றோர் பயன்படுத்தும் விதத்தில் அது இல்லை என்பது அவருக்குப் புரிந்தது. சரி இது சகஜம்தானே என முதலில் நினைத்தார். ஆனால், ‘மற்ற மாணவர்களைப் போல எனக்குப் பிடித்ததை நானாகத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடும் உரிமை எனக்கும் என்னைப் போன்ற மாணவர்களுக்கும் இல்லையா?’ என்ற கேள்வி அவரது மனதில் எழுந்தது. அங்கிருந்து தொடங்கியது ஹேபனின் பயணம்.

உரிமைக்கான போராட்டம்

28 வயதான ஹேபன் அமெரிக்காவின் ஹார்வர்டு சட்டக் கல்லூரியின் முதல் பார்வையற்ற-காதுகேளாத பட்டதாரி. ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த இவர், பிறவியிலேயே பார்வை அற்றவர், காதுகேளாதவர். ஐந்து வயதிலிருந்து பிரெயில் முறையில் படித்தார். ஹார்வர்டு சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு கலிபோர்னியாவைச் சேர்ந்த டிஸெபிலிட்டி ரைட்ஸ் அட்வகேட்ஸ் (Disability Rights Advocates) நிறுவனத்தில் சிவில் உரிமைகள் வழக்கறிஞராகப் பணியாற்றினார். மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்காகப் பல வழக்குகளைத் தொடுத்தார். தற்போது அந்த நிறுவனத்திலிருந்து விலகி, தன்னிச்சையாக மாற்றுத் திறனாளிகள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்திலும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருகிறார். இதன் ஒரு கட்டமாக கடந்த மாதம் பெங்களூருவில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான தேசியக் கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

சாகச ஓய்வு

‘மாற்றத்துக்கான வெள்ளை மாளிகை சாம்பியன்’ என்ற பட்டத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா இவருக்குச் சூட்டிப் பாராட்டியுள்ளார். பல்வேறு தரப்பு மக்களையும் குறிப்பாகக் குழந்தைகளைச் சந்தித்து தொடர்ந்து பேசிவருகிறார் ஹேபன். தன்னுடைய பிரெயில் நோட் டேக்கர் கருவி மூலமாக அவர்களது கேள்விகளை மொழிபெயர்த்துப் புரிந்துகொண்டு திரும்ப வேறொரு கருவி மூலமாகப் பதில் அளிக்கிறார்.

குழந்தைகள் அவரிடம் கேட்கும் கேள்விகளில் எப்போதுமே இடம்பெறுவது, “உங்களுடைய ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள்?” என்பதுதான். அதற்கு ஹேபன் வைத்திருக்கும் பதில் வியப்புக்குரியது. மலையேற்றம், சால்ஸா நடனம், அலை சறுக்குதல், நண்பர்களுடன் நேரம் செலவழிப்பது, முக்கியமாகத் தன்னுடைய செல்ல நாய்க்குட்டி மாக்ஸைனுடன் இருப்பது.

தொடுதலில் வாழ்பவர்கள்

மாக்ஸைன் வெறும் செல்லப் பிராணி அல்ல, ஹேபனின் வழிகாட்டியும் அதுவே. கூகுள் மேப்பைப் பயன்படுத்தி மாக்ஸைனின் உதவியுடன் உலகம் சுற்றுகிறார் ஹேபன். அதேபோல தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஹேபன் பதிவிட்டிருக்கும் சால்ஸா நடன வீடியோவைப் பார்க்கப் பார்க்க ஆச்சரியம் அடங்கவில்லை. இருவர் ஒத்திசைந்து ஆட வேண்டிய அந்த நடனத்தை மிகவும் நளினமாகத் தன் நடன ஜோடியோடு இணைந்து ஆடுகிறார். அதைவிடவும் ஆச்சரியம் அவர் மலை ஏறுவதும், அலை சறுக்கு விளையாடுவதும்!

இத்தனையும் மிக லாகவமாகச் செய்யும் ஹேபன் , “என்னையும் என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளையும் பார்க்கும்போதெல்லாம், ‘எங்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை பிறக்கிறது, எங்களுக்கு நீங்கள் ஒரு உந்துசக்தி ’ என்றெல்லாம் சொல்லாதீர்கள்” எனக் கடுமையாகச் சொல்கிறார்.

மாற்றுத் திறனாளிகள் எல்லாம் உந்துசக்திகள் என்று சொல்வது சொல்பவர்களுக்கு வேண்டுமானால் உற்சாகமூட்டலாம். ஆனால் அதைக் கேட்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு அது உவப்பாக இருக்காது. “மாற்றுத் திறனாளி என்கிற சொல்லே நாங்கள் ஒதுக்கப்படுவதை மறைமுகமாக உணர்த்துகிறது” என வாதிடுகிறார் ஹேபன். மாற்றுத் திறனாளிகளையும் இணைத்து இயங்கும் விதமாக இந்தச் சமூகத்தை மாற்ற வேண்டும் என்பதே ஹேபனின் இலக்கு.

SCROLL FOR NEXT