டெல்லியில் படித்துவிட்டு திருமணமான பின் சென்னை வந்தவள் நான். பாட்டுக் கச்சேரிக்கும் எனக்கும் ரொம்ப தூரம். நாடகத்தை விரும்பி ரசித்துப் பார்ப்பேன், அவ்வளவுதான் என் ரசனை எல்லை. ஆனால் கணவருக்கோ பாட்டுக் கச்சேரிதான் உயிர்.
அவரது விருப்பத்துக்காக சபாக்களுக்கு அடிக்கடி அவரோடு போக வேண்டிய நிர்ப்பந்தம். சபாவுக்குள் நுழைந்து, இருக்கையில் அமர்ந்ததும் நான் தூங்கிவிடுவேன். நடு நடுவே என் கணவர் உஸ், உஸ் என்று சமிக்ஞை ஒலியோடு என்னை எழுப்புவார். நானும் சம்பிரதாயத்துக்காக ஒரு முறை எழுந்து தலையை ஆட்டிவிட்டு மீண்டும் தூங்கிவிடுவேன்.
பழகப் பழகப் பிடிக்கும் என்று சொல்வார்களே அது என் விஷயத்தில் நிஜமானது. என்னையும் அறி யாமல் இசை என்னை ஈர்த்தது. ஒருநாள் எங்களுக்குத் தெரிந்த பஜன் மாஸ்டர் வந்து, “நான் இந்துஸ்தானி பஜன்ஸ் சொல்லித் தருகிறேன். பாட்டு கற்க விருப்பமுள்ள குழுவினர் சேருங்கள்” என்று சொன்னார். என்னை அறியாமல் தலையாட்டி வைத்தேன். என் தோழிகள் சிலரைச் சேர்த்துக்கொண்டு பஜன் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். நான் பாட, என் கணவர் ஊக்கப்படுத்த இனிதே தொடங்கியது இசைப் பயணம்.
சில மாதங்களில் மியூசிக் அகாடமியில் சீசன் நேரங்களில் காலை நேர பஜன் பாடும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றுவிட்டேன். சமீபத்தில் லண்டன் விம்பிள்டன் கோயிலில் இசைப் பேருரை நடத்தினேன். இயற்கைப் பாதுகாப்பு குறித்தும் சிவபெருமான் குறித்தும் இசைப் பேருரை நடத்தும்போதெல்லாம், என் இசை ஆர்வத்தை வளர்த்த என் கணவருக்கு மனதுக்குள் நன்றி சொல்லத் தவறுவதில்லை.
- கலா சர்மிஷ்டா, மந்தைவெளி
உங்க வீட்டில் எப்படி? தோழிகளே, இதைப் படித்ததும் உங்கள் வீட்டு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளக் கைகள் பரபரக்குமே கணவனே உங்கள் தோழனாக மாறிய தருணத்தை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள். |