பெண் இன்று

கணவனே தோழன்: சுதந்திரமாகச் செயல்படவைத்தவர்

செய்திப்பிரிவு

பெண் விடுதலை பற்றி முழக்கமிட்ட பாரதியார் பிறந்த ஊர்தான் எனக்கும். 1998-ம் ஆண்டு திருமணமாகி எட்டையபுரம் வந்தபோது பன்னிரண்டாம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்தேன். என் கணவர் என்னை பி.ஏ. படிக்க வலியுறுத்தினார். நன்றாகப் படித்து பட்டமும் வாங்கினேன். என் மாமனாரும் கணவரும் தந்த உற்சாகத்தில் பேரூராட்சி மன்ற தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். உள்ளாட்சிப் பணிகளில் பங்குபெறும் பெரும்பாலான பெண்கள், தங்கள் வீட்டு ஆண்களின் கைப்பாவையாகச் செயல்படுகிறார்கள் என்பது பலரது கருத்து. ஆனால் நான் பதவியில் இருந்த ஐந்து ஆண்டுகளும் என் கணவர், எதிலும் தலையிடவில்லை. அந்தப் பதவிக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தாமல், யாருடைய தலையீடும் இல்லாமல் தன்னிச்சையாகவே பணியாற்றினேன். என்னால் ஊர் மக்களுக்கு எந்தெந்த வகையில் எல்லாம் சேவையும் உதவியும் செய்ய முடியுமோ, அவற்றை மன நிறைவோடு செய்தேன்.

என் பதவிக் காலம் முடிந்ததும் பி.எட். படிக்க ஆசைப்பட்டேன். என் கணவர் முழு மனதுடன் சிரமங்களுக்கு இடையே என்னைப் படிக்க வைத்தார். என்னுடைய எல்லா முயற்சிக்கும் உதவியவர், ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும் என்று என்னை உற்சாகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து தேர்வில் தேர்ச்சி பெற்று, இன்று ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறேன். என்னுடைய முன்னேற்றத்தின் ஒவ்வொரு படிநிலையிலும் என் கணவர் இருக்கிறார் என்று பெருமிதம் கொள்வதைவிட என் மகிழ்ச்சியை வேறெப்படி வெளிப்படுத்த!

- கிருத்திகா ஜெயலட்சுமி, எட்டயபுரம்.

உங்க வீட்டில் எப்படி?

தோழிகளே, இதைப் படித்ததும் உங்கள் வீட்டு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளக் கைகள் பரபரக்குமே கணவனே உங்கள் தோழனாக மாறிய தருணத்தை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்.

SCROLL FOR NEXT